இந்திய அரசியலமைப்பில் நெருக்கடி நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெருக்கடி நிலை (Emergency) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவுகள் 352, 356 மற்றும் 360 இவ்வகையான நெருக்கடி நிலைமைகளை விளக்குகின்றன. பிரிவு 352 போர் மூலம் ஏற்படும் அவசர நிலையையும் (National Emergency) பிரிவு 356 மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைவதால் அல்லது அரசியல் சாசனப் பிரிவுகள் கடைப்பிடிக்கப்படாததால் (State Emergency ) எழும் நிலையையும் மற்றும் பிரிவு 360 நிதிநிலையால் ஏற்படும் அவசரநிலையையும் (Financial Emergency ) விளக்கும்.[1][2]

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பிரிவு 352 - தேசிய நெருக்கடி நிலைமை[தொகு]

பிரிவு 352 - (1) ன் படி வெளிநாடுகள் தாக்குதலினாலோ அல்லது ஆயுத கலகங்களாலோ இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படும் நிலை ஏற்பட்டால் குடியரசுத்தலைவர் இந்தியா முழுமைக்குமோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ நெருக்கடி நிலைமையினை அறிவிக்கலாம். அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் அறிவிப்பார். இவ்வாறு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைமை பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஒரு மாதத்திற்குள் இவ்வகையான பிரகடனம் செயலிழந்துவிடும். ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம் ஆறுமாதங்களுக்கு அமலில் இருக்கும்.

விளைவுகள்[தொகு]

பிரிவு 352 (1) ன் படி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படும்.[3]

  1. மாநில அரசிற்கு கட்டளை: (பிரிவு 353) எந்த ஒரு மாநிலத்திலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால், மைய அரசு மாநில நிர்வாகத்திற்கு கட்டளை பிறப்பிக்கலாம்.
  2. மாநில அரசுப் பட்டியலில் உள்ள பொருள்களின் மீது மைய அரசு சட்டமியற்ற் அதிகாரம் பெறும் (பிரிவு 250)
  3. நெருக்கடி நிலை அமலில் இருக்கும் காலத்தில் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள துறைகள் மீது மைய அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெறும்.
  4. மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் வருவாய் ஆதாரங்கள் அரசியலமைப்பின் பிரித்தளிக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை மாற்றியமைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
  5. நெருக்கடி அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களவையின் காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க அரசியலமைப்புச் சட்டம் வகை செய்கிறது.
  6. போர் மற்றும் அன்னியப்படையின் தாக்குதலினால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் பிரிவு 19 ன் படி குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
  7. அடிப்படை உரிமைகளை நிலை நிறுத்த நீதிமன்றம் செல்லும் உரிமையை நிறுத்திவைக்க இயலும்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல்[தொகு]

அரசியலமைப்புச்சட்டம் செயலிழந்தால் ஏற்படும் நெருக்கடி நிலைமை இதில் அடங்கும்.[4]

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர் கெடுவதாலோ அல்லது அரசியல் சட்டம் செயலிழந்து விட்டாலோ ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம். அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அறிவிப்பார். இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களவை ஏற்றுக் கொண்ட பின் ஆறு மாதங்களுக்கு இது அமலில் இருக்கும். இதன்பின் மேலும் இதை மக்களவை நீட்டிக்கலாம். ஆனால் இது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படக் கூடாது.

விளைவுகள்[தொகு]

  1. குடியரசுத் தலைவர் ஆளுநரின் மூலம் மாநில அரசின் பணிகளை செயல்படுத்துவார்.
  2. மாநில அரசின் பட்டியலில் உள்ள பொருள்களின் மீது பாராளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரம் பெறும்.

நிதி நிலைமையால் அறிவிக்கப்படும் நெருக்கடி நிலை[தொகு]

கடன் சுமையாலோ அல்லது வேறு காரணங்களாலோ கடன் நிலைமை அளவிற்கு மீறி கட்டுக்கடங்காமல் செல்லுமானால் குடியரசுத் தலைவர் இது போன்ற நெருக்கடி நிலைமையை அறிவிக்கலாம்.[5]

இது போன்ற காலங்களில் மைய அரசு மாநில அரசு நிர்வாகத்திற்கு நிதி மேலாண்மை குறித்துக் கட்டளைகள் பிறப்பிக்கலாம். அரசு ஊழியர்கள் மற்றும் நீதிபதிகளின் ஊதியத்தை குறைக்கவும் அறிவுறுத்தாலம், குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றம் இயற்றும் நிதி மசோதாக்களை தமது பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

  1. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், பக்கம் 475, LexisNexis, 2வது பதிப்பு, ISBN 978-93-5143-527-3
  2. Dr JN Pandey,Constitutional law of India,page 758-763, Central Law Agency, 53 Edition, ISBN 93-84852-41-2 பிழையான ISBN
  3. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், பக்கம் 476, LexisNexis, 2வது பதிப்பு, ISBN 978-93-5143-527-3
  4. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், பக்கம் 482, LexisNexis, 2வது பதிப்பு, ISBN 978-93-5143-527-3
  5. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், பக்கம் 484, LexisNexis, 2வது பதிப்பு, ISBN 978-93-5143-527-3