இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்பு பல சிறப்பு அம்சங்களைக் ( Special Features of Indian Constitution) கொண்டது. இந்திய அரசியலமைப்பு மற்ற அரசியலமைப்புகளிலிருந்து வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. அரசியலமைப்பு என்பது அரசாட்சியின் மையமாக விளங்குகிறது. இது ஒரு கட்டிடத்தின் கடைகால் போன்றது. நாட்டின் அரசாட்சிக்கு அரசியலமைப்பு முதுகெலும்பு போன்றது.

அறிமுகம்[தொகு]

அரசியலமைப்பு – அரசியலமைப்புச் சட்டம்[தொகு]

ஒவ்வொரு அரசின் முக்கியமான உறுப்புகள் முன்று ஆகும். அவை

  • நிர்வாகத்துறை (Executive)
  • சட்டமியற்றும் முறை (Legislature)
  • நீதித்துறை (Judiciary).

அரசின் இம்மூன்று உறுப்புக்களின் செயல்பாடு மற்றும் அதன் விதிகளை பற்றித் தொகுத்து கூறும் சட்டமே அரசியலமைப்புச் சட்டம் ஆகும். ஒரு நாட்டின் அரசைத் தோற்றுவித்து, குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி, அவற்றை உறுதி செய்து, நிர்வாகம், சட்டமியற்றும்துறை, நீதித்துறை போன்ற உறுப்புகளின் அதிகாரங்களை வரையறுத்து உரைப்பதே அரசியலமைப்புச் சட்டமாகும். அரசியலமைப்பு, ஆட்சியின் அமைப்பு பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அவ்வமைப்பின் உறுப்புகள் அவைகளின் பணிகள், அதிகாரங்கள், அவைகள் செயல்பட வேண்டிய முறைகள் பற்றிக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடிப்படைச் சட்டம். இதன் விதிகளை மீறுமாறு நாட்டின் வேறு எந்த சட்டமும் இயற்ற இயலாது

அரசியலமைப்பின் வகைகள்[தொகு]

அரசியலமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையாகவும், அரசின் அடிப்படையில் இரண்டு வகையாகவும் அரசியலமைப்பைப் பிரிக்கலாம். அரசியலமைப்பு அடிப்படையில், எழுதப்பெற்ற மற்றும் எழுதபெறாத அரசியலமைப்பு எனவும், நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்வுடைய அமைப்பு எனவும், அரசின் அடிப்படையில் கூட்டாட்சிமுறையுடையது மற்றும் ஒற்றையாட்சி முறையுடையது எனவும் பிரிக்கலாம்

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  1. பாராளுமன்ற முறை. [1].[2][3] ஒன்றிய அரசிற்குப் பாராளுமன்றமும், மாநில அரசுகளுக்கு சட்ட மன்றங்களையும் அரசியலமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இம்முறை பிரித்தானிய அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது. இம்முறை ஏற்கனவே சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் கடைபிடித்து வந்தமையாலும் அமைச்சர்களை சட்டமன்றத்திற்கு பொறுப்பாக்குவதாலும் வல்லுனர்கள் இம்முறையைத் தேர்ந்தெடுத்தனர்.
  2. தனித்தன்மையுடன் நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்ச்சியுடைமை ஆகியவற்றின் கலப்பு (Unique blend of rigidity and flexibility). [[அரசியலமைப்புச் சட்டம் |அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றுவதற்கு வரையறைக்கப்பட்ட முறையை வைத்து ஒரு அரசியலமைப்புச் சட்டம் நெகிழ்வற்றது, நெகிழ்ச்சியுடையது என்று பிரிக்கப்படும். எழுதப் பெற்ற அரசியலமைப்பு வழக்கமாக நெகிழ்வற்றது என்று குறிப்பிடப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதாரணமான காலங்களில் மாற்றுவதற்கு சிரமம் வாய்ந்ததாகவும், நெருக்கடி காலங்களான போர், ஆயுதக்கலகங்கள் போன்ற தருணங்களில் மாற்றத்திற்குச் சுலபமானதாகவும் உள்ளதால் இதனை இவ்வாறு அழைக்கின்றனர்.
  3. அரசை நெறிமுறைப்படுத்தும் கொள்கைகள் (Directive Principles of State Policy). அரசுகள் இந்திய மக்களுக்கு சமுக, பொருளாதார அரசியல் நீதி கிடைக்கும் வண்ணம் தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பாகம் 38 முதல் 51 பிரிவுகள் விதிக்கின்றன.[2]
  4. சக்தி வாய்ந்த மைய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி (A federation with strong centralising tendency).இந்திய அரசியலமைப்பு நெருக்கடி காலங்களில் ஒன்றிய அரசிற்கு வலுசேர்க்கும் பிரிவுகளும் மற்ற நேரங்களில் உண்மையான கூட்டாட்சியாகவும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர், அயல்நாடுகள் ஆக்கிரமிப்பு, ஆயுதக்கலகம் மற்றும் நிதி நெருக்கடி காலங்களில் மாநில அரசின் பல அதிகாரங்களைச் செயலிழக்கச் செய்து ஒன்றிய அரசு வலுவாகச் செயல்படும் வண்ணம் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  5. வாக்குரிமை (Adult Suffrage) சமூகப்பிரிவு வாரியான வாக்குரிமை (Communal Electorates) என்று இருந்த பழைய முறை மாற்றப்பட்டு குறிப்பிட்ட வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 18 வயது வந்த அனைவரும் வாக்களிக்காலம்.
  6. சுதந்திரமான நீதித்துறை (An Independent Judiciary). அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுளது. இவைகளை உறுதி செய்வதற்குத் தேவையான அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, இவைகளை செம்மையாகச் செயல்படுத்துவதற்கும், பாகுபாடில்லாமல் நடந்து கொள்வதற்கும் தேவையான அதிகாரமும், சுதந்திரமும் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  7. சமுதய சார்பற்ற அரசு (A Secular State). அரசிற்கு எந்த சமய சார்பும் கிடையாது. எல்லா சமயங்களையும் சமமாகவே அணுகும்.
  8. ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship). இந்தியாவில் மாநில அரசு, ஒன்றிய அரசு என்று இரு அங்கங்கள் இருந்தாலும் குடிமக்களுக்கு ஒரே வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது, இதனை இந்தியாவில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்.
  9. அடிப்படை உரிமைகள் (Fundamental duties). இந்தியக் குடிமக்களுக்கு 10 அடிப்படைக் கடமைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இது 42வது அரசியலமைப்புச் சட்டதிருத்ததின் படி கொண்டுவரப்பட்டது. ஜனநாயக முறைப்படி மக்கள் நடத்தை அமைய வேண்டும் என்பதை நினைவூட்டும் வண்ணம் அமையும் இப்பிரிவு 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  10. நீதித்துறையின் ஆய்வு அதிகாரம் (Judicial Review). அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உடன்பட்டதா அல்லது மாறுபட்டதா என்று ஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு உண்டு. (கேசவாளந்த பாரதி vs கேரளா மாநில அரசு AIR 1973 SC 1461)
  11. உலகிலேயே எழுதப்பெற்ற மிகவும் நீளமான அரசியலமைப்பு (Lengthiest written constitution in the world). [1] [3] [2]அமெரிக்க அரசியலமைப்பு வெறும் 7 பிரிவுகளைக் கொண்டது. ஆசுத்திரேலியா அரசியலமைப்பு 128 பிரிவுகளையும், கனடா நாடு 147 பிரிவுகளையும் கொண்டது. இந்திய அரசியலமைப்பு துவக்கத்தில் 395 பிரிவுகளை 22 பாகங்களாகக் கொண்டும் 8 அட்டவணைகளுடனும் இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 98வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தற்குப்பின் 26 பாகங்களில் 444 பிரிவுகளையும் 12 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. நீளமாக அமைந்ததற்கான காரணங்கள் பின் வறுமாறு.
  • இந்திய அரசியலமைப்பை வகுத்த வல்லுனர்கள் உலகின் பல அரசியலமைப்புகளின் செயல் பாட்டை ஆய்வு செய்ததின் அடிப்படையில், அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படும் சவால்களை எதிா்நோக்கி, மற்ற அரசியலமைப்பில் உள்ள அனைத்து நல்ல அம்சங்களையும் இந்திய அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். அடிப்படை உரிமைகளை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்தும், பாரளுமன்ற முறையை பிரித்தானிய அரசிடமிருந்தும், அரசை நெறிமுறையுறுத்தும் கொள்கைகளை (Directive Principles of State Policy) அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்தும், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதை சொ்மானிய அரசிடமும், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்தும் கையாண்டுள்ளனர்.
இந்திய பாராளுமன்றம்
  • இந்திய அரசியலமைப்பு மைய மற்றும் மாநில அரசின் அதிகாரங்கள் ஆகிய இரண்டையும் குறித்து எடுத்துரைக்கின்றது
  • இந்தியாவின் பரந்து விரிந்த பரப்பளவும் பல மொழிகளும் அவைகளினால் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளைக்குறிய தீர்வுகளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டியிருந்தது.
  • அடிப்படை உரிமைகளும், அரசை நெறிமுறைப்படுத்தும் கொள்கைகளை ஒரு பெரிய பட்டியலாக வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 டாக்டர் துர்கா தாச் பாசு (2015). இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமிகம். Gurgaon Haryana: LexisNexis. பக். 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5143-527-3. 
  2. 2.0 2.1 2.2 "இந்திய அரசியலமைப்புச் சட்டம்". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |பார்த்த நாள்= ignored (help)
  3. 3.0 3.1 Dr JN Pandey (2016). Constitutional Law of India. Allahabad: Central Law Agency. பக். 822. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84852-41-2.