இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி

இந்தியாவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2014 ஆம் ஆண்டிற்கான புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தியதி தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பானது நாடு தழுவிய அளவில்(synchronizing) நடைபெறும். இந்தக் கணக்கெடுப்பில் பல்வேறு சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்துள்ளது.[1]

கணக்கெடுப்பின் நோக்கம்[தொகு]

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் புலிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி புலிகளின் பெருக்கத்தை அறிந்து கொள்வதற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கணக்கெடுப்பின் திட்ட வரைவு[தொகு]

  • வனத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிகள்
  • களப்பணியாளர்களுக்கான பயிற்சிகள்
  • முதல் கட்டக் கணக்கெடுப்பு
  • இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு
  • தரவுகளை ஆராய்தல்
  • முடிகளை அறிவித்தல்

கணக்கெடுப்பின் முறை[தொகு]

முதல் கட்டக் கணக்கெடுப்பு[தொகு]

இவை இரண்டு கட்டமாக நடைபெறும். ஒரு குழுவில் 3 அல்லது 4 பேர் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கான திட்ட வரைவு நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படுகிறது.[2] முதல் கட்டத்தில் ஒரு வாரம் நடைபெறும் கணக்கெடுப்பில் புலிகள் வாழும் பகுதிகளில் கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்கின்றனர்.

  • புலிகளின் கால் தடத்தை வைத்து புலிகளின் இருப்பிடத்தை அறிவது.
  • புலிகளின் கழிவுகளைச் சேகரித்து அவற்றின் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுதல்.
  • புலிகளின் உணவான தாவர உண்ணிகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் அடர்த்தியை அறிந்து கொள்ளுதல்.
  • தாவர உண்ணிகளின் உணவான தாவரங்களின் தரவுகளைச் சேகரித்தல்
  • புலிகள் வாழும் காட்டின் மீதான மக்களின் தாக்கம் பற்றி அறிதல்.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு[தொகு]

முதல் கட்டக் கணக்கெடுப்பின் முடிவுகளைக் கொண்டு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு டிசம்பர் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது. இதில்,

  • புலிகளின் நடமாட்டம் அறியப்பட்டப் பகுதிகளில் தானியங்கி புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு புலிகள் படமெடுக்கப்பட்டு அவை கணக்கிடப்படுகின்றன.

முந்தைய கணப்பெடுப்பு[தொகு]

  • 2006 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது 1,114 புலிகள் இருந்தன.[3]
  • 2010 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது 1,706 புலிகள் இருந்தன.[3]

தென்னிந்தியப் புலிகளின் கணக்கெடுப்பு[தொகு]

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் இக்கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் அதிக அளவு புலிகள் உள்ளன. தென்னிந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 600 க்கும் அதிகமான புலிகள் இருந்தன.

கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை[தொகு]

முந்தைய கணக்கெடுப்பான கால் பாதச் சுவடுகளைக் கொண்டு மதிப்பிட்ட முறையில் அதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் இருந்தன். ஒரு புலியின் காலடித்தடம் மணலில் ஒரு மாதிரியும் சேற்றில் வேறு மாதிரியும் இருப்பதால் குழறுபடிகள் ஏற்பட்டன. தற்போதைய முறைப்படி புகைப்படமெடுத்து புலிகளின் உடம்பின் கோடுகளை வைத்து கணினி மூலம் இவற்றை மதிப்பிடுவதால் இதன் நம்பகத்தன்மை அதிகம். ஆனால் புகைப்படக் கருவியில் பதிவாகாத புலிகளும் இருக்கக்கூடும். மேலும் முந்தைய கணக்கெடுப்பு புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட காடுகளில் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் 2013 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு புலிகள் வாழலாம் எனக் கருதப்படுகிற பிற காடுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

மரபணுச் சோதனை[தொகு]

2013 ஆம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் புதிய கழிவுகளும் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணுக்களை ஆய்வுகுட்படுத்தி அப்புலியின் மரபணுத் தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன. ஆண் மற்றும் பெண் புலிகளும் இச்சோதனையில் உறுதி செய்யபடுகின்றன.

கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள்[தொகு]

தமிழகப் புலிகள் கணக்கெடுப்பில் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். கிட்டத்தட அதே அளவு வனத்துறையினரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநிலங்களிலும் தன்னார்வலர்கள் வனத்துறையினருடன் இணைந்துள்ளனர்.

முடிவுகள்[தொகு]

இக்கணக்கெடுப்பின் முடிவுகள் இரண்டு கட்ட கணக்கெடுப்பும் முடிந்த பின் அறிவிக்கப்படும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்.[3] 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளன. இதில் கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 64 புலிகள் இறந்துள்ளது, இதில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளது.[4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]