இந்தியாவில் தானுந்துத் தொழிற்றுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியாவில் தானுந்துத் தொழில்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்யப்பட்ட யூண்டாய் ஐ10, அந்நாட்டின் தானுந்துத் தொழிற்றுறையின் தொழினுட்ப வளர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.[1]

இந்தியாவின் தானுந்துத் தொழிற்றுறை (Automobile industry in India) உலகின் ஒன்பதாவது பெரிய தானுந்துத் தொழிற்றுறை ஆகும். 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி 2.3 மில்லியன் தானுந்துகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்தியா ஆசியாவின் நான்காவது பெரிய தானுந்து ஏற்றுமதி செய்யும் நாடாக ஆகியுள்ளது. இவ்வகையில் சப்பான், தென்கொரியா, தாய்லாந்து என்பன இந்தியாவுக்கு முந்திய நிலைகளில் உள்ளன.

1991 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவின் தாராளமயக் கொள்கை காரணமாக இந்தியாவின் தானுந்துத் தொழில் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதிகரித்த போட்டியும், கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதும் இதற்கு முக்கியமான காரணங்கள் எனலாம். டாட்டா மோட்டர்சு, மாருதி சுசுக்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா போன்ற பல இந்தியத் தானுந்து உற்பத்தியாளர்கள் தமது உள் நாட்டுச் செயற்பாடுகளையும், வெளிநாட்டுச் செயற்பாடுகளையும் விரிவாக்கியுள்ளனர். இந்தியாவின் உறுதியான பொருளாதார வளர்ச்சி அதன் உள் நாட்டுத் தானுந்துச் சந்தையை விரிவடையச் செய்ததுடன், பல பன்னாட்டுத் தானுந்து உற்பத்தியாளர்களையும் இந்தியாவில் முதலீடு செய்யத் தூண்டியது. 2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில், இந்தியாவின் ஒரு மாதத்துக்கான தானுந்து விற்பனை 100,000 ஐத் தாண்டியது.

வரலாறு[தொகு]

ஐரோப்பாவில் ஜி-விஸ் என அறியப்படும் ரேவா, உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார மகிழுந்து.[2]
டாட்டா நேனோ, இன்று உற்பத்தி செய்யப்படுவனவற்றுள் மிகவும் குறைந்த விலையுள்ள மகிழுந்து.இதன் விலை இந்திய ரூபா 100,000 (2,500 ஐக்கிய அமெரிக்க டாலர்கள்).[3]
மாருதி-சுக்கியின் "ஏ-இஸ்டார்". இந்தியாவிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்யப்பட்டது.[4]

1940களில் ஒரு தொடக்கத் தானுந்துத் தொழில்துறை இந்தியாவில் உருவானது. விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசும், தனியாரும், இந்தியாவின் தானுந்துத் தொழிலுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தேசியமயமாக்கம், அனுமதிப்பத்திர முறை என்பன காரணமாகத் தனியார் முயற்சிகள் பாதிப்படைந்ததுடன், 1950 களிலும், 1960 களிலும் இத் தொழிலின் வளர்ச்சி மிக மெதுவாகவே இருந்தது. 1970க்குப் பின்னர் தானுந்துத் தொழில் வளரத் தொடங்கியது. எனினும் இவ்வளர்ச்சி, உழவு இயந்திரங்கள், வணிக வண்டிகள், ஈருருளிஉந்துகள் ஆகியவை தொடர்பிலேயே காணப்பட்டது. மகிழுந்து உற்பத்தி இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை. சப்பானிய உற்பத்தியாளர்களின் வருகையினால் இந்தியாவில் ஒரு கூட்டுமுயற்சியில் மாரிதி உத்யோக் என்னும் நிறுவனம் உருவானது. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கின.

1980களில் பல சப்பானிய உற்பத்தியாளர்கள், மோட்டாரீருருளிகள், இலகு வணிக வண்டிகள் என்பவற்றை உற்பத்தி செய்வதற்காகக் கூட்டு முயற்சியில் இறங்கின. இக் காலத்திலேயே, இந்திய அரசு, அதன் சிறிய மகிழுந்துகளின் உற்பத்திக்காக சுசுக்கியுடன் கூட்டு முயற்சி ஒன்றை ஏற்படுத்தியது. 1991 ஆம் ஆண்டின் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பின்னர் பல இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திகளை இந்தியாவில் தொடங்கின. அக்காலத்திலிருந்து, இந்தியாவின் தானுந்து உதிரிப்பாகங்களினதும், தானுந்துகளினதும் உற்பத்தி உள்நாட்டுத் தேவைகளையும், ஏற்றுமதித் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக வேகமாக வளர்ந்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. India to make Hyundai i10 for the world
  2. "REVA Electric Car Company". Archived from the original on 2007-06-17. பார்க்கப்பட்ட நாள் 2009-09-27.
  3. "The Next People's Car". forbes.com. Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2008-01-21.
  4. The Earthtimes (2008-01-09). "Suzuki's A-Star concept in global debut at Delhi auto show : Cars General". Earthtimes.org. பார்க்கப்பட்ட நாள் 2009-07-09.