உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் (Cooperative movement in India) என்பது வேளாண் துறை, வங்கி, வீட்டுவசதி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு கூட்டுறவு இயக்கம் மிக வேகமாக வளர்ந்தது. நாட்டில் ஐந்து இலட்டச்சத்துக்கும் கூடுதலான கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. பல கூட்டுறவு சங்கங்கள், குறிப்பாக சிற்றூர் பகுதிகளில், அரசியல் பங்கேற்பை அதிகரிக்கின்றன, மேலும் ஆர்வமுள்ள அரசியல்வாதிகளால் கூட்டுறவு சங்கங்கள் அவர்களின் அரசியல் படிக்கல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு

[தொகு]

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் துவக்க கட்டத்தில் மெதுவாக எழுந்தது. மேலை நாடுகளில் உள்ள விவசாயக்கடன் சங்கங்களைப் போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய சென்னை மாகாண அரசு சர் பிரெட்ரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் என்ற பிரித்தானிய அதிகாரியை நியமித்தது. அவர் 1895, 1897 ஆகிய ஆண்டுகளில் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பிரித்தானிய அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1904 என்பதை உருவாக்கியது. இதில் உள்ள குறைகளைக் களைந்து 1912 இல் இச்சட்டம் திருத்தப்பட்டது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கபட்டது. ஆசியாவின் முதல் கூட்டுறவுச் சங்கமான இது 1904 ஆகஸ்ட் 30 அன்று ஆதிநாராயண அய்யாவால் தொடங்கப்பட்டது.[1]

அரசாங்க முயற்சிகள்

[தொகு]

கூட்டுறவு அமைச்சகம்

[தொகு]

ஒன்றியக் கூட்டுறவு அமைச்சகம் [2] என்ற பெயரிலான அமைச்சகத்தை இந்திய அரசு 2021 சூலையில் உருவாக்கியது. நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக ஒரு தனி நிர்வாக, சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை இந்த அமைச்சகம் கொண்டுள்ளது. இந்த அமைச்சகத்தில் 2021 சூலை 6 அன்று "சஹகர் சே சம்ரிதி" (ஒத்துழைப்பு மூலம் செழிப்பு) என்ற தொலைநோக்கு அறிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த அமைச்சகம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்த அமைச்சகத்தின் பணிகள் விவசாய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.

கூட்டுறவு அமைப்புகளை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதையும், [3] [4] கூட்டுறவு நிறுவனங்கள் 'வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான' செயல்முறைகளை நெறிப்படுத்தவும், பல மாநிலக் கூட்டுறவு நிறுவனங்களின் (MSCS) வளர்ச்சியைச் செயல்படுத்தவும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. [5] [6] 2021 ஒன்றிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை முதலில் அறிவித்தார். [3]

இந்த அமைச்சகம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது:

  • "சஹர் சே சம்ரிதி" (ஒத்துழைப்பு மூலம் செழிப்பு) என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குதல்.
  • கூட்டுறவு நிறுவனங்கள் ''வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான'' செயல்முறைகளை வகுத்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுகளின் (MSCS) வளர்ச்சியை செயல்படுத்துதல்.
  • நாட்டில் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு தனி நிருவாக, சட்ட, கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்துதல்.
  • கூட்டுறவை ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக வேரூன்றச் செய்தல்.

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளதால், ஒன்றிய அளவில் இந்த அமைச்சகத்தை உருவாக்குதல் என்பது ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தை வலுப்படுதும் செயல் என்பதால், புதிய அமைச்சகம் குறித்து பல நிபுணர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். [7] கேரள கூட்டுறவு மற்றும் பதிவுத் துறை அமைச்சர் வி. என். வாசவன், "புதிய கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்குவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகும்" என்று கூறினார். [8]

சட்ட கட்டமைப்பு

[தொகு]

கூட்டுறவு சங்கச் சட்டம் (1912) இதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.

கொள்கையும் உத்தியும்

[தொகு]

கூட்டுறவு சங்கத் துறையை மேம்படுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டு கூட்டுறவுக்கான தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது.

வேளாண்மை

[தொகு]

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த உள்ளூர், பிராந்திய, மாநில மற்றும் தேசிய அளவில் கூட்டுறவுச் சங்க வலைப்பின்னல்கள் நாட்டில் உள்ளன. பெரும்பாலும் இதில் கையாளப்படும் பொருட்களாக உணவு தானியங்கள், சணல், பருத்தி, சர்க்கரை, பால், பழம், கொட்டைகள் போன்றவை உள்ளன. மாநில அரசின் ஆதரவால் 1990 களில் மகாராட்டிரத்தில் 25,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அமைக்கபட்டன. [9]

வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தும் கூட்டுறவு சங்கங்கள்

[தொகு]

சர்க்கரையைப் போலவே, இந்தியாவில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சந்தைப்படுத்தலில் கூட்டுறவு சங்கங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. 1980 களில் இருந்து, கூட்டுறவுச் சங்கங்களால் கையாளப்படும் விளைபொருட்களின் அளவு அதிவேகமாக அதிகரித்துள்ளது. சங்கங்களால் சந்தைப்படுத்தப்படும் வேளாண் விளைபொருட்களான பழங்கள் மற்றும் காய்கறிகளில் வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, வெங்காயம் போன்ற பல விளைபொருட்கள் அடங்கும். [10] சில வணிகர்களின் ஏகபோகமாக இருந்த சாங்தாங்கி பஷ்மினா அதன் மூலப்பகுதியான இலடாக்கில் கூட்டுறவுச் சங்களின் கீழ் இயங்கும் தறிகளினால் நூற்பு, விநியோகச் சங்கிலிகளினால் உரிய விலையைப் பெறும்நிலையை நோக்கி நகர்கின்றனர். [11]

பால் பொருட்கள்

[தொகு]
குஜராத்தில் உள்ள சரஸ்வானி பால் உற்பத்தி கூட்டுறவு சங்க பால் சேகரிப்பு மையம். சேகரிக்கப்பட்ட பால் பதப்படுத்துதல் மற்றும் விநியோகத்திற்காக அமுலுக்கு அனுப்பப்படுகிறது.

அமுல் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பால் பண்ணை, கூட்டுறவுடன், ஒரே சந்தைப்படுத்தலைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய தன்னிறைவுத் தொழிலாகவும், கிராமப் பகுதிகளில் மிகப்பெருமளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமுல் மாதிரியை வெற்றிகரமாக செயல்படுத்தியது, இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றியுள்ளது. [12] ஓரிரு அல்லது அதற்கும் மேற்பட்ட கறவை மாடுகளைக் கொண்ட சிறு, குறு விவசாயிகள், தங்கள் சிறிய பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்டு கிராமங்களில் உள்ள கூட்டுறவு பால் சேகரிப்பு மையங்களில் ஊற்ற நாள்தோறும் இருமுறை வரிசையில் நிற்கின்றனர். மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களால் பதப்படுத்தப்பட்ட பால், இந்தியாவின் மிகப்பெரிய உணவு பிராண்டான அமுல் பிராண்ட் பெயரில் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு தேசிய அளவில் சந்தைப்படுத்துகிறது. மேலும் அது பால் பொருட்களின் தரத்தையும் பாலுக்கு மதிப்புக்கூட்டலையும் உறுதி செய்கின்றது.

சர்க்கரை

[தொகு]
இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு எடை போடப்படுகிறது.

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் பெரும்பகுதி உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான ஆலைகளில் நடைபெறுகிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்களில் சிறு மற்றும் பெரு விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் அடங்குவர், அவர்கள் ஆலைக்கு கரும்பை வழங்குகின்றனர்.[13] கடந்த ஐம்பது ஆண்டுகளில், உள்ளூர் சர்க்கரை ஆலைகள் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும், ஆர்வமுள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு படிக்கல்லாகவும் முக்கிய பங்கு வகித்துள்ளன. [14] குறிப்பாக மகாராட்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அல்லது தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஏராளமான அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுடன் உறவுகளைக் கொண்டிருந்தனர். மேலும் சர்க்கரை தொழிற்சாலைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் இடையே ஒரு கூட்டுறவை உருவாக்கியுள்ளனர். [15] இருப்பினும், "நிறுவனத்திற்கு லாபம் வந்தால் பரவாயில்லை, ஆனால் இழப்பு வந்தால் அரசாங்கமே ஏற்க வேண்டும்" என்ற கொள்கை, இந்த சங்களில் பலவற்றை திறமையற்றதாக ஆக்கியுள்ளது. [16]

வங்கியும் கிராமப்புறக் கடனும்

[தொகு]

கூட்டுறவு நிறுவனங்களும் வங்கித் துறையில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளைப் போலவே, இந்த கூட்டுறவு வங்கிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளின் அதிகாரத் தளமாக செயல்படுகின்றன. [9]

வீட்டுவசதி சங்கங்கள்

[தொகு]

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் என்று பரவலாக அறியப்படும் இந்த கூட்டுறவு அமைப்புகள் குறைந்த வருவாய் உள்ள மக்கள் நியாயமான விலையில் வீடுகளைக் கட்ட உதவ நிறுவப்பட்டுள்ளன.

காதி கூட்டுறவு சங்கங்கள்

[தொகு]

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, 5,600 பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களும், 30,138 காதி கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. [17] அவை கிட்டத்தட்ட 95 லட்சம் (9.5 மில்லியன்) மக்களுக்கு பணி கொடுத்துள்ளன. [18] அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியையையும், அதன் திட்டங்களையும் நேரடியாக செயல்படுத்த காதி மற்றும் கிராமத் தோழில்கள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. [19] காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியங்கள் மூலம், இவை இந்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்புகளாகும், அவை அந்தந்த மாநிலங்களில் காதி மற்றும் கிராமத் தொழில்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டன. காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்கள், காதி மற்றும் கிராம நிறுவனங்கள்/கூட்டுறவுகள்/தொழில்முனைவோருக்கு நிதியளிக்கின்றன.

இந்தியாவில் உள்ள முக்கிய கூட்டுறவு சங்கங்களின் பட்டியல்

[தொகு]

ஆவின்

[தொகு]

ஆவின் என்பது ஒரு வணிக நிறுவனம் ஆகும். இது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டின் வர்த்தக முத்திரையாக உள்ளது. ஆவின் பால் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது.

அமுல்

[தொகு]

இந்தியா கூட்டுறவு நிறுவனமான அமுல் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது, இது இந்தியாவில் அமுலின் தூண்டுதலால் உருவான வெண்மைப் புரட்சியின் சாதனையாகும். 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பால் கூட்டுறவு சங்கமான அமுல் குசராத்தின் ஆனந்தில் அமைந்துள்ளது. வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜி.சி.எம்.எம். எப். இன் தலைவராக இருந்தார். குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (ஜி.சி.எம்.எம்.) என்பது அமுல் பிராண்டை நிர்வகிக்கும் கூட்டுறவு அமைப்பாகும். ஜி.சி.எம்.எம். தற்போது குஜராத்தின் 13,000 கிராமங்களில் பரவியுள்ள 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ள 13 மாவட்ட பால் சங்கங்களின் உச்ச அமைப்பாக உள்ளது.

கருநாடக பால் கூட்டமைப்பு

[தொகு]

அமுலுக்கு அடுத்து, கருநாடக பால் கூட்டமைப்பு இந்தியாவின் இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு அமைப்பு ஆகும். இது கூட்டுறவு கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். 1974 ஆம் ஆண்டில், பால் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கருநாடக பால் மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டது. இந்தத் திட்டம் உலக வங்கியின் உதவியல் கொண்டுவரப்பட்டது. கருநாடக மாநிலம் முழுவதும் 14 பால் தொழிற்சங்கங்களைக் கொண்ட கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF) மூலம் முதன்மை பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து (DCS) பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது பால் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகிக்கிறது. இந்தப் பால் நந்தினி என்ற வணிகப் பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது.

தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மற்றும் பதப்படுத்துதல் சங்கம் (ஹாப்காம்ஸ்)

[தொகு]

இது 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு விவசாயிகள் சங்கமாகும். ஹாப்காம்ஸ் கருநாடக அரசின் தோட்டக்கலைத் துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. இது பண்ணை பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ஹாப்காம்ஸ் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. ஹாப்காம்ஸ் கருநாடகத்தின் பெங்களூர் ஊரகம், பெங்களூர் நகர்ப்புறம், மைசூர், மண்டியா, சிக்கபள்ளாபுரம், ராமநகர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. ஹாப்காம்சின் செயல்பாடுகள் விநியோகம், சேமிப்பு கொள்முதல் ஆகிய மூன்று பணிகளாகும்.

இந்தியக் காஃபி விடுதி

[தொகு]

இந்தியக் காப்பி விடுதி என்பது தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் உணவகச் சங்கிலித் தொடராகும். 1936 ஆம் ஆண்டு காபி செஸ் கமிட்டியால் இந்தியக் காப்பி விடுதி சங்கிலி தொடங்கப்பட்டது. ஐரோப்பியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காப்பி விடுதிகளில் பூர்வீக இந்தியர்கள் அனுமதிக்கப்படாததால் காப்பி விடுதி என்ற யோசனை உருவனது. இந்தியக் காப்பி விடுதியின் முதல் விற்பனை நிலையம் பம்பாயில் திறக்கப்பட்டது. 1940களில் நாடு முழுவதும் 50 காப்பி விடுதிகள் இருந்தன. இந்தியக் காப்பி விடுதிகளை நடத்த, 13 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

தெற்கு பசுமை வேளாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் பல மாநில கூட்டுறவு சங்கம் லிமிடெட்

[தொகு]

இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு வேளாண் சங்கமாகும். இந்த சங்கங்களின் செயல்பாட்டுப் பகுதி கேரளம், தமிழ்நாடு ஆகியவை ஆகும். சங்கத்தின் நோக்கம் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான சமூக வளர்ச்சி ஆகும். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் பல்வேறு மேம்பட்ட நுட்பங்கள் மற்றும் சாகுபடி முறைகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், மண்ணில் அவர்களின் உழைப்புக்கு நியாயமான வருமானத்தைப் பெற சங்கம் உதவுகிறது.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கம்

[தொகு]

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) 1967 நவம்பர் 3 அன்று பல-அலகு கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட்டது. பல-மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002 இயற்றப்பட்டதன் மூலம், சங்கம் பல-மாநில கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த சங்கம் முதன்மையாக உரங்களை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றுத் தடங்கள், கட்டுரை, வெற்றிச்செல்வன், இந்து தமிழ் திசை, 17 நவம்பர் 2025
  2. ↑ "Explained: Why a Ministry of Cooperation". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-15. Retrieved 2022-02-12.
  3. 1 2 Mishra, Himanshu Shekhar (6 July 2021). Pullanoor, Harish (ed.). "New "Ministry Of Cooperation" Created A Day Before PM's Cabinet Reshuffle". NDTV.com.
  4. ↑ Mathew, Liz; Tiwari, Ravish (July 7, 2021). "Governor reshuffle, new Ministry clear decks for Cabinet expansion". The Indian Express.
  5. ↑ "Modi Government creates a new Ministry of Co-operation". Press Information Bureau. 6 July 2021.
  6. ↑ Saha, Poulomi (July 6, 2021). "Ministry of Cooperation: Modi govt creates new ministry to strengthen cooperative movement". India Today. Delhi.
  7. ↑ "Cooperative spirit: On the new Union Ministry of Cooperation" (in en-IN). The Hindu. 12 July 2021. https://www.thehindu.com/opinion/editorial/cooperative-spirit-the-hindu-editorial-on-the-new-union-ministry-of-cooperation/article35270173.ece.
  8. ↑ ""Assault On Federalism": Kerala Leaders On Ministry Of Cooperation". NDTV.com. https://www.ndtv.com/india-news/kerala-leaders-on-ministry-of-cooperation-assault-on-federalism-2483128.
  9. 1 2 Dahiwale, S. M. (February 11, 1995). "Consolidation of Maratha Dominance in Maharashtra". Economic and Political Weekly 30 (6): 340–342.
  10. ↑ K. V. Subrahmanyam; T. M. Gajanana (2000). Cooperative Marketing of Fruits and Vegetables in India. Concept Publishing Company. pp. 45–60. ISBN 978-81-7022-820-2.
  11. ↑ "The farm-to-fashion collective empowering women weavers in Ladakh". Elle India.
  12. ↑ Scholten, Bruce A. (2010). India's white revolution Operation Flood, food aid and development. London: Tauris Academic Studies. p. 10. ISBN 9781441676580.
  13. ↑ "National Federation of Cooperative Sugar Factories Limited". Coopsugar.org. Archived from the original on 5 February 2012. Retrieved 27 December 2011.
  14. ↑ Patil, Anil (9 July 2007). "Sugar cooperatives on death bed in Maharashtra". Rediff India. Retrieved 27 December 2011.
  15. ↑ Baviskar, edited by B.S.; Mathew, George (2008). Inclusion and exclusion in local governance : field studies from rural India. London: SAGE. p. 319. ISBN 9788178298603. {{cite book}}: |first= has generic name (help)
  16. ↑ Dahiwale, S. M. (February 11, 1995). "Consolidation of Maratha Dominance in Maharashtra". Economic and Political Weekly 30 (6): 340–342.
  17. ↑ About us - Delhi Khadhi and Village industries Board பரணிடப்பட்டது 25 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம் Government of Delhi.
  18. ↑ - Page 67 பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்.
  19. ↑ Page - 65 பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்

வெளி இணைப்புகள்

[தொகு]