இந்தியாவின் கடல் வளங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகின் மூன்றில் இருபங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பல்வேறு வளங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் ஒவொரு நாடும் கடல் சார்ந்த வளங்களைப் பெருக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா 7517 கி. மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத், மகராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் அரபிக் கடலையும் கிழக்கு பகுதியிலுள்ள மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவை வங்காள விரிகுடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. தமிழ் நாடு மேற்கே அரபிக் கடலையும் கிழக்கே வங்காள விரிகுடாவையும் தெற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் கடல் வளங்கள்[தொகு]

மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், பல்வேறு உலோகங்களின் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு (வளிமம்) மற்றும் மீத்தேனை அடர்த்தியாகக் கொண்டுள்ள வளிம நீரேறிகள், முத்து, பவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள், உப்பு, மணல் என கடல் பல்வேறு வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் காற்றாலைகள், மிதவை ஆலைகள், கடல் ஒதங்களின் ஆற்றல், கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாடு ஆகியவை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த பயன்பட்டு அல்லது பயன்பட உள்ளன.

மீன்கள்[தொகு]

இந்தியாவில் ஆண்டுக்கு 71.3 லட்சம் (7.13 மில்லியன்) டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன (2008-09). இது உலகில் பிடிக்கப்படும் 15.17 கோடி (151.7 மில்லியன்) டன்னில் 4.7 விழுக்காடுகளாகும். இந்தியாவில் பிடிக்கப்படும் மீன்களில் 42.2 லட்சம் (4.22 மில்லியன்) டன்கள் உள்நாட்டு நீர்நிலைகளிளிருந்தும், 29.1 கோடி (2.91 மில்லியன்) டன்கள் கடலிலிருந்தும் பிடிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 1.5 கோடி இந்திய மக்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி. டி.பி) ஒரு விழுக்காடு இத்துறையிலிருந்து வருகிறது. மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி ரூ.8200/- கோடியாக உள்ளது.

உலோகத் தாதுக்கள்[தொகு]

கடல் ஏராளமான உலோகத் தாதுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நிக்கல், மாங்கனீஸ், கோபால்ட், தாமிரம் என பல்வேறு தாதுக்கள் உருண்டை உருண்டை கட்டிகளாக ஆழமான கடலின் (4000-6000 மீ) மேற்பரப்பில் படிந்து கிடக்கின்றன. பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் இவற்றின் சுற்றளவு 5 முதல் 10 செ.மீ. அளவிலேயே பெரிதும் காணப்படுகிறது. பல நாடுகள் 1960-70 களிலேயே பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றின் இருப்பு மற்றும் வெளிக்கொணரும் முறைகள் உறுதி செய்யப்பட்டு செயல்பாடுகள் துவங்க இருந்தன. இந்திய அரசும் இத்தாதுக்களை வெளிக்கொணர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல கடல் அலைகளின் செயல்களினால் மணல் பரப்பில் பரவலாகக் கிடந்த அடர் தாதுக்களான கார்னெட், சிலிமனைட், மோனசைட், கையனைட் போன்றவை செறிவுற்று கடற்கரையில் படிந்து கிடக்கின்றன. இந்தியாவில் கேரளா, தமிழ் நாடு மற்றும் ஒரிசாவில் இவ்வகையான தாதுக்கள் அளப்பறிய அளவில் கிடைக்கின்றன. மோனசைட்டிளிருந்து கிடைக்கும் தோரியம் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.

எண்ணெய், இயற்கை வாயு மற்றும் வளிம நீரேறிகள்[தொகு]

எண்ணெய் இயற்கை வாயுக்கள் கண்டங்களுக்கடியில் கிடப்பதைப் போலவே கடலுக்கடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகள் மும்பையிலிருந்து 160 கி.மீ. மேற்கே அரபிக் கடலின் கீழுள்ள "பாம்பே ஹை" என்ற பகுதியில் கிடைக்கிறது. அதே போல பெரும் இயற்கை வாயுக் கிணறுகள் கிருஷ்ணா -கோதாவரி ஆற்றுக் கழிமுகத்துவாரன்களைக் கடந்து பரவியிருக்கும் வங்காள விரிகுடாவின் அடிப்பகுதியில் கிடைக்கிறது. அதேபோல வளிம நீரேறிகள் ஆழமான கடற்தளத்தின் மேற்பகுதியில் அதிலுள்ள மண்ணுடன் கலந்து படிகங்களாக படிந்து கிடக்கின்றன. எங்கு கடல் ஆழமாக இருக்கிறதோ அங்கு ஏற்படும் மீஅழுத்தத்தின் விளைவாக மீத்தேன் நிறைந்துள்ள வாயுக்கள் திடப்பொருளாக மாறி தரையில் படிந்து கிடக்கின்றன. ஒரு கனமீட்டர் கொள்ளளவு உடைய நீரேறி படிகம் மேலே கொண்டுவரப்பட்டால் அதிலிருந்து 160 கனமீட்டர் வரை மீத்தேன் உற்பத்திசெய்யலாம்.

பவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள்[தொகு]

கடலில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கேற்ப பவளங்கள் மற்றும் பவளப்பாறைகள் உருவாகின்றன. அவ்வாறான சூழ்நிலை இல்லாதபோது கடல் உயிரினங்கள் மறைந்த பிறகு அவற்றின் எலும்பு, முள் மற்றும் ஓடுகள் கடலின் அடியில் படிந்து சுண்ணாம்பு கற்களாக மாறுகின்றன.

மின்னுற்பத்தி[தொகு]

மலைகளில் அமைக்கப்படுவது போலவே கடலின் அடியிலிருந்தும் தூண்களை ஊன்றி காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யலாம். சிறு சிறு மிதவைகளை ஒருங்கிணைத்து மிதக்கவிட்டும், கடல் ஒதங்களின் ஆற்றல் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதேபோல கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாட்டைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க முடியும்.