இந்தியப் பிரதமரின் அலுவலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதமரின் அலுவலகம்
Emblem of India.svg
Thesouthblockdelhi.JPG
தலைமைச் செயலக கட்டிடம், தெற்கு வளாகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்தெற்கு வளாகம், தலைமைச் செயலகக் கட்டிடம்
இரைசினாக் குன்று, புதுதில்லி
அமைப்பு தலைமை
 • டாக்டர். பி. கே. மிஸ்ரா, முதன்மைச் செயலர்
வலைத்தளம்pmindia.nic.in

இந்தியப் பிரதமரின் அலுவலகம் (Prime Minister's Office,PMO) இந்தியப் பிரதமரின் நேரடிப் பணியாளர்களையும் பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் அடக்கியது. இதன் நிர்வாகத் தலைவராக முதன்மைச் செயலர் விளங்குகிறார். தற்போது இப்பொறுப்பில் டாக்டர். பி. கே. மிஸ்ரா உள்ளார்[1]. முன்னதாக பிரதமரின் செயலகம் என அழைக்கப்பட்டுவந்த இந்த அலுவலகம் 1977இல் மொரார்ஜி தேசாய் நிர்வாகத்தின்போது இப்பெயர் மாற்றத்தைப் பெற்றது.

இந்திய அரசின் அங்கமான இவ்வலுவலகம் புதுதில்லியிலுள்ள தலைமைச் செயலகக் கட்டிடத்தின் தெற்கு வளாகத்தில் இயங்குகிறது.

செயற்பாடு[தொகு]

பிரதமரின் அலுவலகம் பிரதமர் தமது பணிகளைச் செய்ய உதவி புரிகிறது. இதன் தலைவராக முதன்மைச் செயலர் உள்ளார். ஊழல் எதிர்ப்பு பிரிவும் மக்கள் குறைகேட்புப் பிரிவும் இதில் அடங்கும். பிரதமரின் அறையும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடியியல் அதிகாரிகளின் அறைகளும் இங்குள்ளன. இந்த அதிகாரிகளும் அவர்களது பொறுப்பில் இருக்கும் பணியாளர்களும் பிரதமர் அரசு அலுவல்களை திறனுடன் மேலாள உதவுகின்றனர். பல்வேறு அரசுத் துறைகளுடனான ஒருங்கிணைப்பிற்கு வழிவகுக்கின்றனர். பல்வேறு பணிகளுக்கு பிரதமரின் நேரத்தை ஒதுக்கிடவும் அவ்வப்போது நினைவுறுத்தவும் செய்கின்றனர். இந்திய அரசின் ஆய அமைச்சர்கள், தனிப்பொறுப்பேற்றுள்ள இணை அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் இந்த அலுவலகம் மூலமே பிரதரை தொடர்பு கொள்கின்றனர்.

பொதுவாக பிரதமரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும் துறைகளின் கோப்புக்கள் மட்டுமே பிரமரின் ஒப்புமைக்கு வரும். ஆய அமைச்சர் அல்லது தனிப் பொறுப்புள்ள இணையமைச்சர் பொறுப்பேற்ற துறைகளின் கோப்புக்கள் அவர்களாலேயே தீர்க்கப்படும். குறிப்பிட்ட அமைச்சர், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என எண்ணும் கோப்புக்களே அவரது பார்வைக்கோ அல்லது ஒப்புமைக்கோ அனுப்பப்படும். திட்டக் குழுவின் தலைவராக பிரதமர் விளங்குவதால் அத்துறைசார் கோப்புக்கள் பிரதமரின் கருத்துக்களைக் கோரியோ ஒப்புமை பெறவோ இங்கு அனுப்பப்படும்.

பிரதமரின் தனிப்பட்ட கவனத்தை ஈர்க்கும் சில விடயங்கள் கீழே தரப்படுகின்றன:

 1. முக்கிய படைத்துறை சார்ந்த பிரச்சினைகள்;
 2. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் குடியியல் மற்றும் பாதுகாப்புத்துறை விருதுகள்;
 3. அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள்;
 4. வெளிநாட்டு தூதரகங்களில் தலைமைத் தூதர் நியமிப்பிற்கான முன்வரைவு மற்றும் இந்தியாவிற்கு நியமிக்கப்பட இருக்கும் பிறநாட்டு தலைமைத் தூதருக்கான ஒப்புமை;
 5. தலைமைச் செயலகம் குறித்த அனைத்து முக்கிய முடிவுகள்;
 6. மாநில மற்றும் மைய அரசுநிர்வாகத் தீர்ப்பாயங்கள், தேர்தல் ஆணையம், நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றிற்கான நியமனங்கள், அரசமைப்பு/சட்டப்படியான குழுக்களுக்கான உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கான நியமனங்கள்;
 7. குடியியல் பணிகள் மற்றும் பணியாளர் சீர்திருத்தங்களைக் குறித்த கொள்கை முடிவுகள்;
 8. மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களாக பிரதமரால் அறிவிக்கப்பட்டவற்றை பிரமரின் அலுவலகம் கண்காணித்து அவ்வப்போது பிரதமருக்கு நிகழ்நிலை அறிக்கைகள் வழங்குகிறது;
 9. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் செல்லும் அனைத்து நீதித்துறை நியமனங்கள்.
நாடாளுமன்ற கேள்விகள்

பிரதமரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு தாமே பதிலளிப்பார் அல்லது இதற்கென ஓர் இணை அமைச்சரை நியமிப்பார்.

பிரதமரின் நிதி

பிரதமரின் தேசிய இடருதவி நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகியவற்றை பிரதமரின் அலுவலகம் இயக்குகிறது.

அமைவு[தொகு]

கம்பீரமான குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கியவண்ணம் தெற்கு வளாகத்தில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது.[2] இந்த வளாகத்தில் இயங்கும் தலைமைச் செயலகத்திற்கும் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலகங்களுக்கும் நடுவே 20 அறைகள் கொண்ட பிரதமரின் அலுவலகம் இயங்குகிறது. நாட்டின் முதன்மை அதிகாரிக்கு உதவி புரிய ஏதுவான கட்டமைப்பும் பணியாளர்களையும் கொண்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புக்களை உடனுக்குடன் கண்காணிக்குமாறு மிக உயரிய தொழினுட்பச் சாதனங்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

 1. 28 மே 2014. "Former TRAI chief Nripendra Misra is Principal Secretary to Prime Minister Narendra Modi". The Economic Times. 30 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளம்