இந்தியக் கூட்டாட்சி முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது.

கூட்டாட்சி முறையின் அம்சங்கள்:

 1. இரட்டை அரசாங்க முறை
 2. அதிகாரப் பகிர்வு
 3. அரசியலமைப்பின் ஒப்புயர்வற்ற தன்மை[1]
 4. எழுத்துவடிவத்தில் அரசியலமைப்பு
 5. நெகிழ்வற்ற அரசியலமைப்பு
 6. நீதி மன்றங்களின் அதிகாரம் [2] ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்று கூறுவது:

“இந்தியா அல்லது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றமைப்பாகும்”.[3]
இந்திய பாராளுமன்றம்

அம்சங்கள்[தொகு]

 • இரட்டை அரசாங்க முறை
ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு இரண்டு அரசுகளைக் கொண்டுள்ளது ஆகும். அவை மைய அரசு மற்றும் மாநில அரசு ஆகும்.
 • அதிகாரப் பகிர்வு
தேசிய அளவில் முக்கியமான துறைகளின் அதிகாரம் மைய அரசுக்கும், மாநில அளவில் முக்கியமான துறைகளின் அதிகாரம் மாநில அரசிற்கும் பகிர்ந்தளிக்கப்படும். யாருக்கு எந்த அதிகாரம் என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையரை செய்யும். [2]
 • அரசியலமைப்பின் ஒப்புயர்வற்ற தன்மை:
ஒரு கூட்டாட்சி அரசு உருவாவதற்கு நிலைபெற்ற (Existence) அரசியலமைப்பே அடிப்படையாகும். அரசியலமைப்பின் பின்பலத்திலேயே கூட்டாட்சி முறை செயல்பட வேண்டும் ஆதலால் நிர்வாகம் சார்ந்த அதிகாரமாக இருந்தாலும், சட்டமியற்றும் அதிகாரமாக இருந்தாலும், நீதி நிர்வாகம் சார்ந்த அதிகாரமாக இருந்தாலும் அரசியலமைப்பின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும். அரசியலமைப்புச் சட்டமே ஒரு நாட்டின் உயரிய சட்டமாக விளங்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தச் சட்டமும் செல்லாததாகிவிடும்.[1]
 • எழுதப்பெற்ற அரசியலமைப்பு ( A written constitution ):
கூட்டாட்சி முறையில் அரசியலமைப்பு எழுத்து வடிவத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். கூட்டாட்சி முறையின் அடிப்படை அரசுகளுக்குகிடையே உள்ள ஒப்பந்தமாகும். எழுத்துவடிவில் அரசியலமைப்பு இல்லாமலிருந்தால் இவ்வொப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இயலாததாகிவிடும்.
 • நெகிழ்வற்ற தன்மை (Rigidity)
எழுத்துவடிவிலான அரசியலமைப்புச் சட்டம் இயற்கையாக நெகிழ்வற்றதாக இருக்கும். நாட்டின் உயரிய சட்டம் நெகிழ்வற்றதாகத் தான் இருக்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது முடியாத ஒன்றாக இல்லாவிட்டாலும், அதில் சுலபமாக மாற்றங்களைக் கொண்டுவர இயலாது. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது மாநில அரசின் கையிலோ மைய அரசின் கையிலோ இருக்காது. அரசியலமைப்புச் சட்டம் ஒரு நிரந்தரமான ஆவணமாகக் கருதப்படும்.
 • நீதி மன்றங்களின் அதிகாரம் ( Authority of courts ):
கூட்டாட்சி முறையில் அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய தன்மையானது இன்றியமையாதது. இல்லாவிடில் அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய தன்மையைச் செயல்படுத்துவது இயலாதது ஆகிவிடும். கூட்டாட்சி முறையில் மைய மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால் இவைகள் சரியாகச் செயல்படுத்தப் பட வேண்டுமானால் இவைகளை மேற்பார்வையிடவும் செயல்படுத்தவும் ஒரு சுதந்திரமான அமைப்பு தேவை. நீதி மன்றங்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதி நிர்வாகத்தை மைய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது.[2]

இந்தியா ஒரு கூட்டாட்சி[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கூட்டாட்சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒன்றிய, மாநில அரசுகள் என்ற இரு அமைப்புகள் எற்படுத்தப்பட்டுள்ளது. [4] இவைகளுக்கிடையே அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசைப் பொறுத்தவரை தமக்கு அளிக்கப்பட்ட துறைகளில் முழு அதிகாரம் செலுத்திக் கொள்ளலாம். அது போலவே மாநில அரசும் தமது துறைகளில் முழு அதிகாரம் செலுத்திக்கொள்ளலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுத்து வடிவிலானது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை மாற்றுவது எளிதானது அல்ல. மாற்றம் தேவைப்பட்டால் பெரும்பான்மை மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படும். ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயோ அல்லது மாநில அரசுகளுக்கிடையேயோ கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவைகளைத் தீர்த்து வைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மையைப் பாதுகாப்பதும், பிரிவுகளைச் செயல் படுத்த உதவுவதும் உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு என இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுகின்றது.[2]

இந்திய அரசியலமைப்பு முழுமையான கூட்டாட்சி அல்ல ஆனால் கூட்டாட்சி போன்றது[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உண்மையான கூட்டாட்சி அல்ல அது கூட்டாட்சி போன்றது ( Quasi Federal ) என்று சில K.C வியார் போன்ற அறிஞர்கள் கூறுவதுண்டு.[2] சில நேர்வுகளில் ஒன்றிய அரசு, மாநிலஅரசின் அதிகாரங்களில் தலையிட வாய்ப்பு உள்ளது என்றும் ஆதலால் மாநில அரசுகள் ஒன்றிய அரசிற்கு சமமானவை அல்ல என்றும் அவைகள் ஒன்றிய அரசின் கீழுள்ள அரசுகள் போல செயல்பட வேண்டிவருகின்றது என்றும் அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு முழுமையான கூட்டாட்சி தத்துவத்தை எதிரொளிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக கீழ்க்கண்டவாதத்தை முன் வைக்கின்றனர்

ஆளுநரின் நியமனம்[தொகு]

ஒவ்வொரு மாநிலத்திற்கும் குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிப்பார். ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பதிலளிக்கும் பொறுப்புள்ளவர். அவர் பெயரளவிலேயே அரசின் தலைவராக இருந்தாலும் மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்குக் கட்டுப்பட்டவர். ஒருசில பிரிவுகளின் படி ஆளுநர் மாநில அரசின் சட்டங்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இவைகளை மறுப்பதற்கும் அதிகாரம் உண்டு. (பிரிவு 200, 288 (2)) [3]

தேசிய நலனுக்காக பாரளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்[தொகு]

பாராளுமன்றத்தின் மேலவை, மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு மாநிலங்கள் அதிகார வரம்பில் உள்ள ஒரு பொருளின் மீது சட்டமியற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால், பாராளுமன்றம் அவ்வாறு சட்டமியற்ற முடியும். (பிரிவு249)[3]

புதிய மாநிலங்களைத் தோற்றுவிக்கவும், தற்பொழுது உள்ள மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கவும் அதிகாரம்.[தொகு]

பாராளுமன்றம் புதிய மாநிலங்களைத் தோற்றுவிக்கலாம். மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கலாம். (பிரிவு 3)[3] ஒரு மாநிலத்தின் இருப்புத் தன்மை பாராளுமன்றத்தின் விருப்பத்தைப் பொறுத்தது.

அவசரநிலை பிரகடனம்[தொகு]

அரசியலமைப்புச் சட்டம் மூன்று வகையான அவசர நிலைகளைக் குறிப்பிடுகிறது. அவை:

அ) வெளிநாட்டுப் படையெடுப்பு அல்லது உள்நாட்டுப் புரட்சியினால் வரும் அவசரநிலை (பிரிவு 352)[3],
ஆ) மாநில அரசுகளில் அரசியலமைப்புச்சட்டம் செயலிழந்து விடுவது (பிரிவு 356)[3],
இ) நிதி நெருக்கடியினால் எற்படும் அவசரநிலை (பிரிவு 360)[3] ஆகும்.

அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டால் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள பொருள்கள் மீது பாராளுமன்றம் சட்டமியற்றாலம். மாநிலத்தின் நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று மைய அரசு அறிவுறுத்தலாம். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் மாநில அரசுகளையும் மாநில சட்ட மன்றங்களையும் கலைத்தும் ஆணையிடலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 டாக்டர் துர்கா தாச் பாசு (2015). இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமிகம். Gurgaon Haryana: LexisNexis. பக். 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5143-527-3. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Dr JN Pandey (2016). Constitutional Law of India. Allahabad: Central Law Agency. பக். 822. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84852-41-2. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "இந்திய அரசியலமைப்புச் சட்டம்". மூல முகவரியிலிருந்து 2012-04-02 அன்று பரணிடப்பட்டது.
 4. http://www.importantindia.com/2044/federalism-in-indian-constitution/ பரணிடப்பட்டது 2016-07-23 at the வந்தவழி இயந்திரம் பார்த்த நாள் சூலை 30, 2016