இந்தியக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயில் என்ற பெயரில் வெளிவந்த இதழ் பற்றி அறிய குயில் (இதழ்) பக்கத்தைப் பார்க்கவும்.

இந்தியக் குயில்
A juvenile photographed in கண்ணூர், கேரளம்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Cuculiformes
குடும்பம்: Cuculidae
பேரினம்: Cuculus
இனம்: C. micropterus
இருசொற் பெயரீடு
Cuculus micropterus
Gould, 1837[2]

இந்தியக் குயில் (Cuculus micropterus) தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் குயில் இனமாகும். குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. இந்தியக் குயில்கள் பெரும்பாலும் காகக் கூடுகளில் முட்டையிடுகின்றன. முட்டையின் நிறம் வெளுப்பான பச்சை[3]. குயிற் குஞ்சுகள் முதலில் பொரிப்பதோடு வேகமாகவும் வளர்கின்றன. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது.

உணவு[தொகு]

ஆல், அத்திப்பழங்களை முதன்மையாக உண்ணும்[3]. பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் உண்கிறது. குயில்கள் பெரிதும் பழங்களையே விரும்பி உண்ணுகின்றன. புதர்களிலுள்ள குற்றுச் செடிகளின் பழங்களையும் உண்ணும். கம்பளிப் புழுக்களையும், பூச்சிகளையும் உண்ணும். இதன் உடலினுள் நிறைய கொழுப்பு சேமிக்கப்பட்டிருக்கும். இதனால்தான் சுவையான இதன் ஊனை மக்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.

உடலமைப்பு[தொகு]

குயில் காகத்தைவிட சற்று சிறியது. ஆனால், உருண்டு திரண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும். ஆண் குயில் கறுப்பாக இருக்கும். பெண் குயிலின் அடிப்படை நிறம் வெள்ளை. ஆனால், உடல் முழுவதும் கறுப்புத் திட்டுகள் முத்து முத்தாகக் காணப்படும். குயில்கள் காடுகள், வீட்டுத் தோட்டங்கள், தோப்புகளில் (மா, தென்னை, புளி, பலா) காணப்படுகின்றன.

வாழ்க்கை[தொகு]

பொதுவாக, குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். கிளிகள் போன்று கூட்டமாகப் பறந்து செல்லாது. ஆண் குயிலை எளிதில் பார்க்கலாம். பெண் குயிலை அரிதாகவே பார்க்க முடியும். மரக்கிளைகளின் ஊடே மறைந்திருக்கும். ஆண், பெண் இரண்டுமே வெட்கப்படும் பறவைகள் சோம்பேறிப் பறவைகள். மரங்களில் மறைந்திருந்து தூங்கிக்கொண்டிருக்கும். குயில் அழகாக பாடும் பறவை. அதிகாலையில் முதலில் பெண்குயில் பிங், பிங் என்றும் உ..ஓ..உ..ஓ..உ..ஓ.. என்று ஆண் குயில் பதிலும் பாடும். பெண்குயில் எத்தனை முறை பாடுகிறதோ அத்தனை முறை ஆண் குயிலும் பதிலுக்கு பாடும். அதிகாலையில் தான் இந்தப் பாடல் ஒலி கேட்கும். பகலில் ஆண் குயில் மட்டுமே பாடும்.குயில்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

குயில்களுக்கு கூடு கட்டத் தெரியாது. குயில்கள் காகத்தின் கூட்டில் முட்டையிடும். சில சமயங்களில் கரிச்சான் கூடுகளிலும் முட்டை இடுவது உண்டு.[4] காகம் குயிலின் முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். சில காலங்களில் குஞ்சு பொரிக்கத் தொடங்கும். அப்பொழுது காகம் அது குயில் என்று தெரிந்து அதை கலைத்துவிடும். குயில் குக்கூஸ் என்ற குடும்பத்தைச் சார்ந்த பறவை. குக்கூஸ் இன பறவைகள் அனைத்தும் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. குயில் இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் - ஆகஸ்ட். காகம் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் முட்டையிடும். குயிலின் முட்டை இளம் சாம்பல் பச்சை நிறம். காகத்தின் முட்டை நிறம் இளம் நீல-பச்சை. ஆனால், குயிலில் முட்டைகள் காகத்தின் முட்டையை விட சிறியது.

துணை நூற்பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cuculus micropterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). 2009. http://www.iucnredlist.org/details/142250. 
  2. Gould, John (1837) Proceedings of the Zoological Society of London p. 137 (Himalayas)
  3. 3.0 3.1 சலீம் அலி, பக்.76
  4. "குயிலே... குயிலே.." (in ta). https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/912490-kuyile-kuyile.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_குயில்&oldid=3779875" இருந்து மீள்விக்கப்பட்டது