இண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இண்டை
Arari Kanda Nepali 02.jpg
பஞ்ச்கால் பள்ளத்தாக்கில் இண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Caesalpinioideae[1]
தரப்படுத்தப்படாத: Mimosoid clade[1]
பேரினம்: Mimosa
இனம்: M. rubicaulis
இருசொற் பெயரீடு
Mimosa rubicaulis
Lam.
வேறு பெயர்கள்

M. octandra
M. intsi
M. barberi
M. himalayana[2]

இண்டு, இண்டை, இண்டங்கொடி, ஈங்கை (Mimosa rubicaulis) என்பது ஃபேபேசி மற்றும் துணைக் குடும்பமான மிமோசோய்டேயைச் சேர்ந்த ஒரு புதர் கொடியாகும். இதனை ஈங்கந்தண்டு எனவும் கிராம மக்கள் அழைக்கின்றனர். இதன் இலைகளானது காம்பின் இருபுறமும் உள்ள ஓலை போன்று வரிசையாக இருக்கும். இந்த வரிசையான இலைக் கொத்தில் 8–12 ஜோடி சிறகுகுகள் இருக்கும். இந்த சிறகுகள் ஒவ்வொன்றும் 16-20 ஜோடி சிற்றிலைகள் கொண்டவையாக இருக்கும். தொட்டாற் சுருங்கி போலன்றி, இதின் இலைக்காம்பில் இரட்டையான கூரிய முட்கள் உள்ளன. இது இந்தியா முழுவதும் காணப்படுகிறது.[2]

விளக்கம்[தொகு]

இது கொடிக்கும் குற்று மரத்திற்கும் இடைப்பட்ட அளவில் உள்ள தாவரமாகும். இது கொடி இனத்தைப் போல வேறு தாவரத்தைப் பற்றி ஏறுவதில்லை. தடித்த தண்டை உடையது. நேராக கொடிபோல் வளர்ந்து பின் புவியீர்ப்பின் விசையால் வளைந்துகீழ் நோக்கி வளைந்து விடும். ஆனால் அருகில் உயரம் குறைவான தாவரம் இருந்தால் அதன் மிது பரவி அந்த தாவரத்தையே மூடிவிடும். புதர் போல் வளரும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும். இலைகளிகளிலும் வரிசையாக முட்கள் இருக்கும். முட்கள் கீழ் நோக்கி வளைந்து இருக்கும். கூர்மையாகவும் வலிமையுடனும் இருக்கும். அந்த தாவரத்தின் பாகங்கள் நம்மீது பட்டால் முட்கள் கொக்கி போல் குத்தி பிடித்துக்கொள்ளும் அதிலிருந்து விடுபடுவது மிகவும் சிரமம். விலங்குகள் அதன் அருகில் செல்வதை தவிர்த்து விடும். வலிமை வாய்ந்த புலி கூட இதன் அருகில் செல்ல முடியாது என்பதால் இதனை புலி தடுக்கி கொடி என மக்கள் அழைக்கின்றனர்.

இது சூன் முதல் செப்டம்பர் வரை பூக்கக்கூடிய தாவரமாகும். இந்த மலர்கள் நீண்ட பல கொத்துக்கள் கொண்ட இளஞ்சிவப்பு நிற கோள மலர்களாகும். இந்த மலர் நீண்ட மலர் கொத்துகளாக 1–1.5 செ.மீ வரை நீண்டிருக்கும். இளஞ்சிவப்பான இந்தப் பூக்கள் வெள்ளை நிறத்தில் மங்கிவிடக்கூடியன. எனவே இந்த பூங் கொத்துகள் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள் என இரண்டையும் கொண்டவையாக இருக்கும். இலைகள் இரட்டை சரங்களாக, 8–15   செ.மீ நீளத்துடன் உள்ளன. இலைக் காம்புகள் முட்கள் நிறைந்ததாக உள்ளன. இந்த இலைச் சரங்களில் 3–2 ஜோடி பக்க-தண்டுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 6–15 ஜோடி சிறிய 4–8   மிமீ சிற்றிலைகளாக உள்ளன. இதன் காய்கள் மெல்லியதாகவும், தட்டையாகவும், வளைந்தும் இருக்கும். இவை 8-13   செ.மீ நீளம், 1   செ.மீ அகலம் கொண்டவையா இருக்கும். இந்தக் காய்களில் 4-10 எண்ணிக்கையிலான செவ்வக விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் பிளந்து அதிலிருந்து வெளிப்படும் விதைகள் விழுந்து முளைக்கின்றன.[3]

இது புதர்வேலிக்கு பயன்படுவதாக கருதப்படுகிறது. இதன் விரகுகள் கூடாரம் கட்டும் ஆப்புகளுக்கும், துப்பாக்கி வெடிமருந்து கரி தயாரிக்கவும் ஏற்றது. இதன் வேர்களும், இலைகளும் மருத்துவ குணம் கொண்டவை. இது இமயமலையில், ஆப்கானிஸ்தான் முதல் பூட்டான் வரை 300-1900 மீ உயரத்தில் காணப்படுகிறது. இது வனத்தை ஒட்டிய பகுதிகள், வயல்கள் மற்றும் தோட்டங்களின் ஓரங்களில் விரும்பி வளரக்கூடியது.[3] இக் கொடியானது தென் இந்தியாவில் கடப்பை, மைசூர் மற்றும் கோவையிலுள்ள காடுகளில் வளர்கிறது.[4]

இலக்கியங்களில்[தொகு]

சங்க இலக்கியங்கள் இப்புதர்க் கொடியைப்

புதல் இவர் ஈங்கை -அகநா. 294: 6.
ஈங்கைப் பைம்புதல் -ஐங். 45.6:3

என்று சிறப்பித்துக் கூறுகின்றன.

குளக்கரையில் பிரம்புடன் செறிந்துவளரும். இதன் தண்டில் முட்கள் இருக்கும். இதன் இலைக்கோணத்தினின்றும் இதன் பூங்கொத்து உண்டாகும். மலர் 'துய்' தலையையுடையது என்ற தாவரவியல் உண்மைகளைப் புலவர்கள் கூறியுள்ளனர்.

பரந்த பொய்கைப்பிரம்பொடு நீடிய
முட்கொம்பு ஈங்கைத் துய்தலைப்புதுவி-அகநா.3 06:2-3
துண்முள் ஈங்கைச் செவ்வரும்பு -குறுந். 110:5

இதன் செவ்விய அரும்பு மலரும்போது துணியில் துளை ஒன்று தோன்றும் என்பதையும் நெய்தல் தத்தனார் கூறுவர்.

வாங்கு துளைத்துகிரின் ஈங்கை பூப்ப -அகநா. 343:2

(துகிர்-பவளம்)

இதன் அகவிதழ்கள் வெண்ணிறமானவை. மகரந்தங்கள் 'துய்' என்னும் பஞ்சு போன்ற தலையை நீட்டிக்கொண்டிருக்கும். இதனால் இதன் மலரை ஆலங்கட்டிக்கு உவமிப்பர் பரணர்.

. . . . . . அரும்ப முதிர் ஈங்கை
ஆலியன்ன வால்விதா அய் -அகநா. 125

இக்கொடியின் தளிர் இதன் பூவைக் காட்டிலும் அழகியது. அதிலும் மாரிக் காலத்தில் எழிலுடன் தோன்றும் என்னும் அகப் பாட்டு.

மாரிஈங்கை மாத்தளிர் அன்ன -அகநா. 7.5:1:7

'ஈங்கை' என்பதற்கு, இண்டு, இண்டை' என்று உரை கூறுவர்.

ஈங்கை இலவம் தூங்கினர்க் கொன்றை -குறிஞ். 86

என்ற அடியில் உள்ள ஈங்கை என்பதற்கு நச்சினார்க்கினியர் 'இண்டம்பூ' என்று உரை கண்டுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டை&oldid=2890796" இருந்து மீள்விக்கப்பட்டது