இண்டிகேடோரிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன்வழிகாட்டிகள்
பெரும் தேன்வழிகாட்டி
பழுப்பு முதுகு தேன்வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: இன்கேட்டோரிடே
சுவனைசன், 1837
பேரினம்
 • இண்டிகேட்டார்
 • மெலிச்நியூட்சு
 • மெலிக்னோமோன்
 • புரோடோடிசுகசு

இண்டிகேடோரிடே (Indicatoridae) எனும் பறவைக் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் தேன்வழிகாட்டிகள் (Honeyguides) எனப்படுகின்றன. இவை பிசிபார்மெசு வரிசையில் பசாரின் பறவைகளுக்கு நெருக்கமானவை. இவை குறிகாட்டி பறவைகள் அல்லது தேன் பறவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் பிந்திய சொல் புரோடோடிசுகசு பேரினத்தின் சிற்றினங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை பழைய உலக வெப்பமண்டல பரவலைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களும் ஆசியாவில் இரண்டு சிற்றினங்களும் வாழ்கின்றன. இந்த பறவைகள் மனிதர்களுடனான தொடர்புகளினால் மிகவும் பிரபலமானவை. தேன்வழிகாட்டிகளாக இப்பேரினத்தில் ஒன்று அல்லது இரண்டு சிற்றினங்கள் மட்டுமே அறியப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பேரினச் சிற்றினங்கள் அனைத்தும் தேன்வழிகாட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை மனிதர்களை (ஆனால், பிரபலமான கூற்றுகளுக்கு மாறாக, தேன் வளைக்கரடி அல்ல) நேரடியாகத் தேன் கூடுகள் இருக்கும் இடங்களுக்கு இட்டுச் செல்லும். மனிதர்களால் வேட்டையாடப்படும் தேன் கூடுகளின் எஞ்சியிருக்கும் தேன் கூட்டின் மெழுகுகளை இவை உண்ணுகின்றன.

விளக்கம்[தொகு]

பழுப்பு முதுகு தேன்வழிகாட்டி, குஞ்சுகளுக்கு உணவூட்டும் பாறை சிசுடிகோலா

பெரும்பாலான தேன் வழிகாட்டிகள் மந்தமான நிறத்தில் உள்ளன, இருப்பினும் சிலவற்றில் இறகுகளில் பிரகாசமான மஞ்சள் நிறம் இருக்கும். அனைத்திற்கும் வெளிர் வால் இறகுகள் உள்ளன. அனைத்து ஆப்பிரிக்கச் சிற்றினங்களிலும் இவை வெண் நிறத்திலிருக்கும். சராசரியாக 10.2 g (0.36 oz) என்ற அளவில், உடல் எடையின் அடிப்படையில் மிகச்சிறிய சிற்றினமாகப் பச்சை-முதுகுத் தேன் வழிகாட்டியாகத் தோன்றுகிறது. இதன் நீளம் சராசரியாக 10 cm (3.9 அங்) ஆக உள்ளது (காசினின் தேன்வழிகாட்டி). எடையின் அடிப்படையில் மிகப்பெரிய சிற்றினமாக யாழ் வால் தேன்வழிகாட்டி உள்ளது. இதன் எடை 54.2 g (1.91 oz) ஆகும். நீளத்தின் அடிப்படையில் பெரும் தேனி வழிகாட்டி 19.5 cm (7.7 அங்) ஆகும்.[1][2]

மெழுகினை உண்ணும் ஒரு சில உயிரிகளில் இவையும் அடங்கும். மெழுகினைச் சுரக்கும் புரோடோடிசுகசு பேரினத்தில் உள்ள பூச்சிகளின் மெழுகு மற்றும் மெலிக்னோமோன் பேரின பூச்சிகள் சுரக்கும் குறைந்த அளவிலான மெழுகுகளை இவை உண்ணும். இவை மெழுகுப்புழு, கெலேரியா மெல்லோனெல்லாவின் இளம் உயிரிகளையும் தேனீக் கூட்டங்கள் மற்றும் பறக்கும் மற்றும் ஊர்ந்து செல்லும் பூச்சிகள், சிலந்திகள் மற்றும் எப்போதாவது பழங்களையும் உணவாக உண்ணுகின்றன. பல சிற்றினங்கள் இணைந்து இறைத் தேடுகின்றன.

நடத்தை[தொகு]

வழிகாட்டுதல்[தொகு]

தேனீ வழிகாட்டிகள் ஒன்று அல்லது இரண்டு இனங்களில் காணப்படும் குறிப்பிடத்தக்கப் பழக்கத்தினால் அறியப்பட்டது. இவை மனிதர்களைத் தேன் உள்ள தேன் கூட்டினை நோக்கி மனிதர்களை வழிநடத்துகிறது. மனிதர்கள் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்தவுடன் மீதமுள்ள தேனடையில் உள்ள இளம் உயிரிகள் மற்றும் மெழுகுகளை இப்பறவைகள் உண்ணும். இந்த நடத்தை பெரும் தேன்வழிகாட்டி பறவையில் ஆய்வு செய்யப்பட்ட. சில ஆய்வாளர்கள் (பிரைட்மேனைத் தொடர்ந்து, 1955) இது செதில்-தொண்டை வழி காட்டியிலும் நிகழ்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் இக்கருத்தில் மற்றவர்கள் உடன்படவில்லை.[1] காட்டுத் தேன் வழிகாட்டிகள் பல்வேறு வகையான மனித அழைப்புகளைப் புரிந்துகொள்கின்றன. இதன் மூலம் இவை அந்நிய பரஸ்பரவாதத்தில் ஈடுபட இவற்றை ஈர்க்கின்றன.[3] வடக்கு தான்சானியாவில், ஹட்ஸா வேட்டையாடுபவர்களுடன் தேன் வழிகாட்டிகள் கூட்டாளிகளாக இருக்கின்றன. மேலும் பறவைகளின் உதவியானது தேன் கூடுகளைக் கண்டுபிடிப்பதில் தேன்-வேட்டைக்காரர்களின் விகிதத்தை 560% அதிகரிப்பதாக உள்ளது. மேலும் தேனீ வழிகாட்டிகள் இல்லாமல் தேன் வேட்டைக்காரர்களால் அறியப்படும் கூடுகளை விட தேன் அதிகமாக உள்ள கூடுகளுக்கு இப்பறவைகள் அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.[4] மனித-தேன் வழிகாட்டி உறவின் பெரும்பாலான சித்தரிப்புகளுக்கு மாறாக, ஹட்சா பழங்குடி, தேன் வழிகாட்டிகளின் மெழுகுத் தேவையினைப் பூர்த்தி செய்யாமல் பறவைகளைப் பசியுடன் வைத்திருக்கும் நோக்கத்திற்காகத் தேன் கூட்டை மறைத்து, புதைத்து, எரித்துவிடுகின்றனர். இதன் மூலம் இப்பறவைகள் மெழுகிற்காக மீண்டும் மீண்டும் இவர்களுக்கு வழிகாட்டுகின்றன.[4] சில வல்லுநர்கள், மனிதர்களுடன் தேன் வழிகாட்டிகளின் இணை பரிணாம தோற்றமானது சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித மூதாதையான கோமோ இரெக்டசு கல்-கருவி பயன்படுத்திய காலத்திலிருந்து உருவானதாக நம்புகிறார்கள்.[4] சில கூற்றுகளின் படித் தேன்வழிகாட்டிகள், தேன் வளைக்கரடிகளை தேன் கூடுகள் இருக்கும் இடத்திற்கு வழிநடத்திச் செல்லும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பான காணொலிகள் இருந்தாலும் இவை சித்தரிக்கப்படுபவை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.[5]

இந்தப் பறவைக் குடும்பத்தின் பெரும்பாலான பறவைகள் மெழுகு தேடலில் மனிதர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படாத போதிலும் இவை "தேன வழிகாட்டிகள்" என்றே அழைக்கப்படுகின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

இண்டிகேட்டர் மற்றும் புரோடோடிசுகசு பேரினத்தில் உள்ள எட்டு சிற்றினங்களின் இனப்பெருக்க நடத்தை அறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அடைகாக்கும் ஒட்டுண்ணிகள் ஆகும், அவை ஒரு முட்டையை மற்றொரு இனத்தின் கூட்டில் இடுகின்றன, 5-7 நாட்களுக்குள் சுமார் ஐந்து தொடர் முட்டைகளை இடுகின்றன. பெரும்பாலான ஓட்டை-கூடு இனங்கள், பெரும்பாலும் தொடர்புடைய பார்பெட்கள் மற்றும் மரங்கொத்திகள், ஆனால் புரோடோடிஸ்கசு வெண்கண் மற்றும் கதிர்க்குருவி போன்றவற்றின் கோப்பை-கூடுகளை ஒட்டுண்ணிகளாக மாற்றுகிறது. தேன் வழிகாட்டியின் குஞ்சுகள் தங்கள் புரவலன்களின் குஞ்சுகளைக் கூடுகளிலிருந்து வெளியேற்றுவதாக அறியப்படுகிறது. இவற்றின் அலகுகளில் ஊசி போன்ற கூர்மையான கொக்கிகள் உள்ளன. இதன் மூலம் இவை புரவலன்களின் முட்டைகளைத் துளையிடும் அல்லது குஞ்சுகளைக் கொல்லும்.[6]

ஆப்பிரிக்கத் தேன் வழிகாட்டிப் பறவைகள் மற்ற தேன்-உண்ணும் பறவைச் சிற்றினங்களின் நிலக்கூடுகளில் முட்டையிடுகின்றன. தேன் வழிகாட்டி முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரித்தவுடன் கூடுகளில் இருக்கும் பிற குஞ்சுகளை தன்னுடைய ஊசி போன்ற அலகினைப் பயன்படுத்திக் கொன்றுவிடுகின்றன. இதன் மூலம் தன்னுடைய வளர்ச்சியினை உறுதிப்படுத்திக் கொள்கின்றன.[7]

மேற்கொள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Short, L.L. and J. F. M. Horne (2020). Greater Honeyguide (Indicator indicator), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA.
 2. Short, L.L., J. F. M. Horne, and G. M. Kirwan (2020). Cassin's Honeyguide (Prodotiscus insignis), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA.
 3. Spottiswoode, Claire N.; Begg, Keith S.; Begg, Colleen M. (July 22, 2016). "Reciprocal signaling in honeyguide-human mutualism". Science 353 (6297): 387–389. doi:10.1126/science.aaf4885. பப்மெட்:27463674. Bibcode: 2016Sci...353..387S. https://www.repository.cam.ac.uk/handle/1810/256963. 
 4. 4.0 4.1 4.2 Wood, Brian M.; Pontzer, Herman; Raichlen, David A.; Marlowe, Frank W. (2014-11-01). "Mutualism and manipulation in Hadza–honeyguide interactions" (in en). Evolution and Human Behavior 35 (6): 540–546. doi:10.1016/j.evolhumbehav.2014.07.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1090-5138. https://www.sciencedirect.com/science/article/pii/S1090513814000877. 
 5. Dean, W. R. J.; Siegfried, W. Roy; MacDonald, I. A. W. (1 March 1990). "The Fallacy, Fact, and Fate of Guiding Behavior in the Greater Honeyguide". Conservation Biology 4 (1): 99–101. doi:10.1111/j.1523-1739.1990.tb00272.x. https://archive.org/details/sim_conservation-biology_1990-03_4_1/page/99. 
 6. Short, Lester L. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85391-186-6. 
 7. Davies, Ella (7 September 2011). "Underground chick-killers filmed". BBC Nature. https://www.bbc.co.uk/nature/14802180. 
 • Friedmann, Herbert (1955). The Honeyguides. U.S. National Museum (Bulletin 208). 
 • Short, Lester, and Jennifer Horne (2002). Toucans, Barbets and Honeyguides. Oxford University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டிகேடோரிடே&oldid=3870890" இலிருந்து மீள்விக்கப்பட்டது