இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோயில்
இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°51′14″N 78°48′28″E / 10.853845°N 78.807845°E |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
அமைவிடம்: | இடையாற்றுமங்கலம் |
சட்டமன்றத் தொகுதி: | இலால்குடி |
மக்களவைத் தொகுதி: | பெரம்பலூர் |
ஏற்றம்: | 86.17 m (283 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாங்கலீசுவரர் |
தாயார்: | மங்களாம்பிகை |
குளம்: | கிணறு |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, பங்குனி உத்தரம், நவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மாங்கலீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் இடையாற்றுமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் மாங்கலீசுவரர் மற்றும் தாயார் மங்களாம்பிகை ஆவர்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 86.17 மீட்டர் உயரத்தில் (10°51′14″N 78°48′28″E / 10.853845°N 78.807845°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளி - சிதம்பரம் நெடுஞ்சாலையில், வாளாடி புறநகர்ப் பகுதியிலிருந்து இலால்குடி செல்லும் வழியில் சுமார் 8 கி. மீ. தொலைவிலும், இலால்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 4 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ள இடையாற்றுமங்கலம் பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[2]
சிறப்புகள்
[தொகு]இக்கோயிலின் இறைவி தெற்குத் திசையை நோக்கியவாறு தனி சன்னதியில் வீற்றிருப்பது சிறப்பாகும். (வழக்கமாக கோவில்களில் இறைவி கிழக்குத் திசை நோக்கியே அருள்பாலிப்பார்). மேலும் நவக்கிரக சன்னதியின் அமைப்பும் சூரியன் மேற்குத் திசை நோக்கி எழுந்தருளும் அமைப்பில் நிறுவப்பட்டுள்ளதும் சிறப்பாகும்.[3]
புராண முக்கியத்துவம்
[தொகு]மாங்கல்ய மகரிஷி என்பவர் இத்தலத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவன் அவருக்கு அருளினார். மேலும் இத்தலத்திலேயே கோயில் கொண்டு, பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்க அருளி, மாங்கல்ய ஈசுவரர் என்று போற்றப்பட்டு, பின்னர் பெயர் மருவி, மாங்கலீசுவரர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
மாங்கல்ய மகரிஷி உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அகத்தியர், வசிட்டர் மற்றும் பைரவ முனிவர் ஆகியோர் திருமணங்களில் மாங்கல்ய தாரண பூசைகள் நடத்தியவர். வானில் பறக்கும் மாங்கல்ய தேவதைகள் மற்றும் அட்சதை தேவதைகளுக்கு குருவாக விளங்குபவர் மாங்கல்ய மகரிஷி. உத்தரம் நட்சத்திரத்தன்று சூட்சும வடிவில் இக்கோயிலில் மாங்கலீசுவரரைப் பூசிப்பதாகக் கூறப்படுகிறது. இறைவன் அருளால் அவருடைய உள்ளங்கையில் தவ வலிமை உருவானது. எனவே, அவரும் பக்தர்களுக்கு அருளுவதால், இக்கோயிலில் அவருக்கும் சன்னதி உள்ளது. உத்தரம் நட்சத்திரத்தன்று மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதாக ஐதீகம். எனவே, தெய்வத் திருமணங்கள் உத்தரம் நட்சத்திரத்தில், குறிப்பாக பங்குனி உத்தரம் அன்று நடைபெறுகின்றன.[4]
திருவிழாக்கள்
[தொகு]மகா சிவராத்திரி, பங்குனி உத்தரம், நவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
இதர தெய்வங்கள்
[தொகு]தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நடராசர், அர்த்தநாரீசுவரர், பிட்சாடனர், சண்டிகேசுவரர், பிரம்மா, விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனா சமேத சுப்பிரமணியர், நந்தி, மாங்கல்ய மகரிஷி, நவக்கிரகம் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாலை மலர் (2022-07-05). "உத்திர நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்". www.maalaimalar.com. Retrieved 2024-10-05.
- ↑ கு. வைத்திலிங்கம் (2021-07-22). "மாங்கல்ய தோஷம் நீக்கும் இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் திருக்கோயில்". Dinamani. Retrieved 2024-10-05.
- ↑ மாலை மலர் (5 July 2022). "மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் சுவாமி கோவில்". www.maalaimalar.com. Retrieved 2024-10-05.
- ↑ "இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-10-05.
- ↑ "Mangalyeswarar Temple : Mangalyeswarar Mangalyeswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-10-05.