இடையன்குடி (திருநெல்வேலி மாவட்டம்)

ஆள்கூறுகள்: 8°18′50″N 77°52′55″E / 8.31389°N 77.88194°E / 8.31389; 77.88194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடையன்குடி
இடையன்குடி is located in தமிழ் நாடு
இடையன்குடி
இடையன்குடி
ஆள்கூறுகள்: 8°18′50″N 77°52′55″E / 8.31389°N 77.88194°E / 8.31389; 77.88194
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்19,557

இடையன்குடி, தமிழ் நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் திசையன்விளைக்கும், உவரிக்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் 18 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் கால்டுவெல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இடையன்குடிக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் நாங்குநேரி ஆகும். இவ்வூருக்கு அருகில் உள்ள விமான நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையம் ஆகும். இடையன்குடிக்கு வடமேற்கே 40 மைல் (65 கி.மி) தொலைவில் திருநெல்வேலி நகரம் அமைந்துள்ளது. இவ்வூர் உத்தமர் காந்தி விருதை 2008-இல் பெற்றது.[1]

இவ்வூரில் பெரும்பாலான மக்கள் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின் மிக அருகில் வங்காள விரிகுடா அமைந்துள்ளதால், இங்கு வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.

தூய திரித்துவ ஆலயம்[தொகு]

இடையன்குடி தூய திரித்துவ ஆலயம்

இடையன்குடியின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய திரித்துவ ஆலயம் , இவ்வூரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயம் ராபர்ட் கால்டுவெல் அவர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தை கோதிக் (இந்தோ - கிரேக்க முறை) கட்டடக்கலை அமைப்பில் வடிவமைத்துள்ளனர். இவ்வாலயம் 1880-ஆம் ஆண்டு சூலை 6 ஆம் தேதி திறக்கப்பட்டது. இவ்வூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான நிலங்கள் தேவாலயத்திற்கு சொந்தமானது.

ராபர்ட் கால்டுவெல்லும் இடையன்குடியும்[தொகு]

ராபர்ட் கால்டுவெல்

திராவிட மொழிகளின் தந்தையாக கருதப்படும் ராபர்ட் கால்டுவெல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை இவ்வூரில் மதபோதகராகக் கழித்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். சமயப்பற்றின் காரணமாக, கிறித்துவ மதம் பரப்பும் அமைப்பு (மிஷினரி) ஒன்றில் சேர்ந்தார். தொடர்ந்து கிறித்துவ மதம் பரப்ப இந்தியா வந்த இவர், இவ்வூரில் தங்கி கிறித்துவ மதத்தை பரப்பினார்.

ராபர்ட் கால்டுவெல் மறைந்த பிறகு, அவருடைய கல்லறை, அவர் கட்டிய தூய திரித்துவ ஆலயத்தின் திருவறையில் உள்ளது. தமிழுக்கு அவர் செய்த தொண்டைப் போற்றும் விதமாக, தமிழக அரசு இடையன்குடியிலுள்ள கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கி பராமரித்து வருகிறது.[2] .

கல்வி[தொகு]

கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி இக்கிராமத்தில் உள்ள குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இருப்பினும், பலர் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மாணவர்களுக்குச் செவிலியர் பணிக்குப் பயிற்சியளிப்பதற்காக, ஒரு நர்சிங் கல்லூரி இங்கு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (2008-12-19). "15 பஞ்சாயத்துக்களுக்கு உத்தமர் காந்தி விருது". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  2. "Caldwell 's memorial house".