இசைக் கலைஞர்கள் (கரவாஜியோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசைக் கலைஞர்கள்
The Musicians
ஓவியர்கரவாஜியோ
ஆண்டுசுமார் 1595
வகைசித்திரத் துணிமேல் எண்ணெய் ஓவியம்
இடம்பெருநகரக் கலைக்கூடம், நியூயார்க் நகரம்

இசைக் கலைஞர்கள் (The Musicians) என்பது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான கரவாஜியோ (முழுப்பெயர்: மிக்கேலாஞ்சலோ மெரீசி தா கரவாஜியோ) என்பவரால் வரையப்பட்ட ஓர் ஓவியம் ஆகும். இதை கரவாஜியோ என்னும் பரோக்கு கலை ஓவியர் சுமார் 1595இல் வரைந்தார். இந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நியூயார்க் நகரத்தின் பெருநகரக் கலைக்கூடத்தில் (Metropolitan Museum of Art) உள்ளது.

வரலாறு[தொகு]

கரவாஜியோவின் கலையை ஆதரித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே என்பவர். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க கரவாஜியோ "இசைக் கலைஞர்கள்" என்னும் ஓவியத்தை 1595 அளவில் வரைந்தார்.

ஓவியத்தின் அமைப்பு[தொகு]

கரவாஜியோ வரைந்த இந்த ஓவியத்தில் நான்கு இளைஞர்கள் இசை எழுப்புவதில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் கிரேக்க-உரோமைய செவ்விய காலத்தை நினைவூட்டுகின்றன. மூன்று இளைஞர்கள் இசைக் கருவிகளை மீட்டுவதும் பாடலைப் பாடுவதுமாக உள்ளனர். நான்காம் இளைஞன் (பின்புறம், இடது) காம தேவனைப் போல உடையணிந்து, திராட்சைப் பழத்தைக் கொய்து எடுப்பதுபோல ஓவியர் சித்தரித்துள்ளார். திராட்சை இரசம் உள்ளத்துக்குக் கிளர்ச்சியூட்டுவதுபோல, இசை உள்ளத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது என்னும் கருத்தோடு, இசை ஓவியங்களில் காம தேவனுக்கு இடம் கொடுப்பது அன்றைய வழக்கம்.

ஓவியத்தில் இருப்போர்[தொகு]

ஓவியத்தின் மையமாக இருக்கும் இளைஞன் கையில் யாழ் போன்ற நரம்புக் கருவி உள்ளது. அது கரவாஜியோவின் தோழன் மாரியோ மின்னீத்தி. அவனை அடுத்து, சற்றே பின்புறமாக, பார்வையாளரை நோக்கி இருக்கும் இளைஞன் ஓவியரின் சுய உருத்தோற்றம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

காம தேவனைப் போல் இருக்கும் இளைஞன் கரவாஜியோ வரைந்த "யாழ் இசைக்கும் கலைஞன்" (The Lute Player)[1], "புனித பிரான்சிசின் பரவச நிலை" (Saint Francis of Assisi in Ecstasy)[2] மற்றும் "பழம் உரிக்கும் இளைஞன்" (Boy Peeling Fruit)[3] ஆகிய ஓவியங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதே உருமாதிரி என்று தெரிகிறது. அவற்றை கரவாஜியோ சில ஆண்டுகளுக்கு முன் வரைந்திருந்தார்.

இசைப் பின்னணி[தொகு]

இந்த ஓவியம் வரையப்பட்ட கால கட்டத்தில் திருச்சபை இசைக் கலையைப் பெரிதும் ஆதரித்தது. கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே போன்ற கலை ஆர்வம் மிக்க திருச்சபைத் தலைவர்கள் பலர் கலைஞருக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தனர். இசையின் மறுமலர்ச்சி ஏற்பட்ட அதே சமயத்தில் புதுப்புது வித இசையமைப்புகளும் ஊக்கம் பெற்றன. இருப்பினும், கரவாஜியோவின் இந்த ஓவியம் சமயக் கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக உலகுசார் இசைப் பாணியையே முன்வைக்கிறது.

ஓவியத்தில் வரும் இளைஞர்கள் காதல் பாட்டு இசைக்கின்றனர். யாழ் இசைப்பவனின் கண்கள் கலங்கியிருக்கின்றன. ஒருவேளை காதல் தோல்வியின் இரேகைகள் அங்கே தெரியலாம். ஓவியத்தின் முன்னணியில் உள்ள வயலின் ஐந்தாம் கலைஞன் ஒருவன் இந்த ஓவியத்தில் இருப்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. ஒருவேளை ஓவியரின் மனத்தில் ஓவியத்தைப் பார்ப்பவரும் இசைக் குழுவில் இணைய அழைக்கப்படுவதாகக் கருதலாம்.

கரவாஜியோவின் சிறப்புமிக்க ஓர் ஓவியம்[தொகு]

அதுவரை கரவாஜியோ வரைந்த ஓவியங்களுள் "இசைக் கலைஞர்கள்" ஓவியமே அதிக செறிவு மிக்கது. நான்கு மனித உருவங்களை இணைத்து வரைந்தது ஒரு சவாலாகவே இருந்தது. நான்கு கலைஞர்களும் தனித்தனியே, ஒருவர் மற்றவரோடு தொடர்பின்றி இருப்பதுபோல் தோன்றுகிறது.

இந்த ஓவியம் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இசைக் குறிப்புகளைக் கொண்ட ஏடும் சேதமடைந்துள்ளதால் அதில் எழுதப்பட்ட குறிப்புகளை முற்றிலுமாக அடையாளம் காண இயலவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. "யாழ் இசைக்கும் கலைஞன்"
  2. "புனித பிரான்சிசின் பரவச நிலை"
  3. பழம் உரிக்கும் இளைஞன்