உள்ளடக்கத்துக்குச் செல்

இசிகாரா சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறமுணர் சோதனை
இசிகாரா நிற சோதனை தட்டு - ஓர் எடுத்துக்காட்டு. இயல்பான நிறப்பார்வை உடையோருக்கு '74' என்ற எண் தெளிவாகத் தெரிய வேண்டும். இரு வர்ண பார்வை அல்லது முரணான மூவர்ண பார்வை உடையோருக்கு '21'-ஆகத் தெரியலாம்; வர்ணமற்ற பார்வை உடையோருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை.
சிறப்புகண் மருத்துவம்
ICD-9-CM95.06
MeSHD003119
முழு நிறக்குருடானோரும் இச்சோதனை செயல்படும் முறையை உணரும் வண்ணம், இஷிஹாரா தட்டு எண் 1, இங்கு கருப்பு வெள்ளையில் வழங்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு நிறங்களால் ஆன புள்ளிகள் கருப்பிலிருந்து சாம்பல் வெள்ளை என்று மாறும்போது தெரிய வரும் எண்ணைக் கவனிக்கவும்.

இசிகாரா நிறச் சோதனை (Ishihara Test) என்பது சிவப்பு-பச்சை நிறமுணர் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படும் நோய் ஆய்வுச் சோதனை. இதனை வடிவமைத்த டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் மருத்துவருமான ஷிநோபு இஷிஹாரா என்பவரின் பெயரிலே இச்சோதனை வழங்கப்படுகிறது. இசிகாரா இச்சோதனைகளை முதலில் 1917-இல் வெளியிட்டார்.[1]

இசிகாரா தட்டுகள்[தொகு]

இசிகாரா தட்டுகள் என்று குறிக்கப்படும் பல நிறத் தட்டுகளை இச்சோதனை கொண்டிருக்கும். இதன் ஒவ்வோர் தட்டும், சீரற்ற முறையில் பரப்பப்பட்ட பல வண்ணங்கள் அளவுகளிலான வட்டப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். இது போல் பரப்பப்பட்டுள்ள புள்ளிகளுக்கிடையில் இயல்பான நிறப்பார்வை உடையோருக்கு ஒரு எண்ணோ வடிவமோ தெளிவாகத் தெரியும். சிவப்பு-பச்சை நிறப்பார்வை குறைபாடு உடையோருக்கு அவை அரைகுறயாகவோ முற்றிலுமாகவோ தெரியாமல் போகலாம். இச்சோதனை முழுவதாக 38 தட்டுகளைக் கொண்டது. எனினும் ஒரு சில தட்டுகளைக் கடக்கும்போதே குறைபாடுகளைத் தெளிவாக அடையாளம் காணலாம். 24 தட்டுகள் மட்டுமே கொண்ட சிறிய சோதனைகளும் பயன்பாட்டில் உண்டு.[2]

பலவாறான சோதனைகளுக்காக, இத்தட்டுகள், பின்வருமாறு, வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன:

  • உருமாற்றத் தட்டுகள்: நிறப்பார்வை குறை உடையோரும், இயல்பான நிறப்பார்வை உடையோரும் வெவ்வேறு உருவங்களைக் காணுமாறு வடிவமைக்கப்பட்டவை.
  • மறையும் தட்டுகள்: இயல்பான நிறப்பார்வை உடையோர் மட்டுமே உருவத்தை அடையாளம் காணுமாறு வடிவமைக்கப்பட்டது.
  • எண் ஒளித்துவைக்கப்பட்ட தட்டுகள்: நிறப்பார்வை குறை உடையோர் மட்டுமே உருவத்தை அடையாளம் காணுமாறு வடிவமைக்கப்பட்டது.
  • நோய் ஆய்வு தட்டுகள்: நிறக்குறையின் வகையையும் (பச்சை-சிவப்பு நிறக்குறை அல்லது பச்சை நிறமுணரா குறை) தீவிரத்தையும் தீர்மானிக்க வடிவமைக்கப்பட்டது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. S. Ishihara, Tests for color-blindness (Handaya, Tokyo, Hongo Harukicho, 1917).
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-04-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிகாரா_சோதனை&oldid=3593031" இலிருந்து மீள்விக்கப்பட்டது