ஆ கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனையூர் கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோயில், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள செக்கானூரணி அருகே ஏ. கொக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் மதுரையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏ. கொக்குளம் உள்ளிட்ட 6 கிராமங்களில் கருப்பசாமி, அய்யனார், ஆதிசிவன், பேச்சியம்மன், காமாட்சியம்மன் மற்றும் முத்தையா சுவாமிகளுக்கு தனித் தனி கோயில்கள் உள்ளன. 21 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவின் முதல் நாளில் குதிரை எடுப்பு திருவிழா, பாறைப்பட்டி கிராமத்திலிருந்து பேக்காமன் கருப்பசாமி, அய்யனார் மற்றும் முத்தையா சுவாமி மற்றும் ஆதிசிவன் கோவில்களுக்கு கொண்டு செல்லப்படும் சுடுமண் குதிரைகளை எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும். [1][2]மேலும் பன்றிக்குத்து, கிடா வெட்டுதல் மற்றும் எருதுகட்டும் திருவிழாக்களும் நடைபெறும்.

வரலாறு[தொகு]

பேக்காமன் கருப்பசாமி கோயில் பட்டியலினத்தவரின் குலசாமியாக பல ஆண்டுகள் இருந்ததது. கொக்குளம் கிராமத்தில் வசிக்கும் 15 குடும்பத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவரில் ஆண்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் பூப்படையும்வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது. ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பங்காளிகளில் ஒரு பங்காளி வகையறாவை மட்டும் வசப்படுத்தி, கோயிலுக்குள் அனுமதித்துவிட்டு, பிறரைக் கோவிலைவிட்டு வெளியில் நிறுத்திவிட்டனர். அவர்கள் கோயிலுக்கு வெளியில் நின்றவாறே சாமியை வணங்க வேண்டும்.

இந்தக் கோயிலுக்குள் அனைவரும் வந்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறிவிட்ட நிலையில், 30 சூலை 2021 அன்று 50 பட்டியலினத்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கோயிலில் நுழைந்து கருப்பசாமியை வழிபட்டனர். தங்கள் முன்னோர்கள் உருவாக்கிய கோயிலின் உள்ளே சென்று வழிபடும் உரிமையை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இழந்திருந்த ஆ. கொக்குளத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள், 30 சூலை 2021 அன்று தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினர். [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி எருதுகட்டு திருவிழா
  2. பேக்காமன் கருப்பசாமி
  3. பேக்காமன் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்
  4. "Dalits of A Kokkulam village enter, worship at Pekkaman temple". Archived from the original on 2021-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-06.