ஆ. சிங்காரவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. சிங்காரவேலு முதலியார் (A. Singaravelu Mudaliar) (1855 - நவம்பர் 1931), ஒரு கல்வியாளர் மற்றும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் ஆவார்.[1]. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளைப் படித்தவர். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். தமிழில் தோன்றிய முதற் கலைக்களஞ்சியங்களில் ஒன்றாகிய அபிதான சிந்தாமணி என்பதின் ஆசிரியர். அபிதான சிந்தாமணி தமிழின் முக்கியமான குறிப்புதவிநூல். இதில் இந்திய இலக்கியங்கள், புராணங்கள், சிந்தனைகள், ஆசாரங்கள், பழங்கதைகள், இலக்கியச் செய்திகள் ஆகியவை அகரவரிசையில் அளிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு பக்கம் உள்ள இந்தப் பெரிய நூலை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அபிதான சிந்தாமணியைத் தமிழ், இந்தியத் தொல்மரபைச் சேர்ந்த ஒருவகை கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம்.


சமசுக்கிருதத்தில் அகரவரிசைப்படி சொற்பொருள் கொடுத்திருக்கும் நூல் நிகண்டு எனப்படும். அகரவரிசைப்படி கருத்துகள், செய்திகள் கொடுக்கப்பட்ட நூல் கோசம் என்று சொல்லப்படும். கோசம் என்பது குறுவடிவிலான ஒரு கலைக்களஞ்சியம். அபிதானசிந்தாமணி கோசம் என்ற நூல்வகையைச் சேர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை நூல். அபிதான சிந்தாமணியை 1890 ஆம் ஆண்டில் இவர் தொகுக்கத் தொடங்கினார். இதன் முதற்பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு 1048 பக்கங்களுடன் வெளிவந்தது. உயர் நோக்குடன் வெளியிடப்பட்டாலும் தொழில்நுட்ப அளவில் தரம் குறைவாக இருந்தது. 1934 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பு 1634 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. சிங்காரவேலு முதலியார் தமிழ் அகராதியை வெளியிட்ட சைவ சித்தாந்தக் கழகத்துடனும் பணிபுரிந்தார்[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார் 1855ல் சென்னையில் பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1890 ல் இந்நூலை உருவாக்கத் தொடங்கினார். தன்னுடைய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருமான சி.கோபாலராயர் ஒருநாள் தன்னை அழைத்து எனமண்டாரம் வெங்கடராமய்யர் சமசுக்கிருதத்தில் எழுதிய "புராணநாம சந்திரிகை" என்ற நூலை அளித்து அதைப்போல ஒன்றைச் செய்யக்கூடாதா என்று கேட்டதாக பச்சையப்ப முதலியார் சொல்கிறார். அதை முதல்நூலாகக் கொண்டு சிங்காரவேலு முதலியார் அதையே புராண நாமாவளி என்று பெயரிட்டு எழுதத் தொடங்கினார்[3].

ஆனால் விரைவிலேயே புராணநாம சந்திரிகை போதாமைகள் மிக்க சிறிய நூலே என்று கண்டு கொண்டு மேலும் மேலும் நூல்களை வாசிக்கத் துவங்கினார். நூல்கள் மிகவும் குறைவென உடனேயே உணர்ந்தார். ஊர் ஊராகச் சென்று சிறு வெளியீடுகளையும் ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கின்னார். செவிவழிக்கதைகளையும் திரட்டினார். தலபுராணங்களை ஓதுவார்களிடமிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதைசொல்லிகள், அரிகதைச் சொற்பொழிவாளர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டே இருந்தார்.

இவ்வாறு பல்லாயிரம் பக்கங்கள் கையெழுத்துப்படியாக எழுதிச்சேர்த்தார் சிங்காரவேலு முதலியார். இன்றைய அபிதான சிந்தாமணி ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாலான மிகப்பொடிய எழுத்து. இதனைக்கொண்டு கணித்தால் கடைசிக் கைப்படி (கைப்பிரதி) 9000 பக்கங்களுக்கு இருந்திருக்க வேண்டும். தனித்தனிக்குறிப்புகளாக எழுதியவற்றை கட்டுரைகளாக ஆக்கி அவற்றை மீண்டும் அகராதி மொழிக்கு சுருக்கி எழுதினார் சிங்காரவேலு முதலியார். அதாவது மூன்றுமுறை நகல் எடுத்திருக்கிறார். அகரவரிசைப்படி இவற்றைக் கோப்பதற்கே சில மாதங்கள் ஆகினவாம்.

சிங்காரவேலு முதலியார், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி இந்தப் பெரும்பணியைச் செய்து முடித்தார். சொற்களுக்கு நடுவே போடும் கட்டை இல்லாமல் நெருக்கி ஏறத்தாழ 1050 பக்கங்கள் அச்சுக்கோத்து ஒரு சில நகல்கள் எடுத்துக்கொண்டார். அவற்றுடன் சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.

சென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணத்தை நாடினார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைப்பிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டிப் பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவவேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார். அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேசகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது ‘நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை குயுரேட்டரும் (curator) பச்சையப்பன் கல்லூரி தருமகர்த்தாவுமான வ.கிருட்டிணமாச்சாரியிடம் சென்று மன்றாடினார் சிங்காரவேலு முதலியார். அவர் சில அச்சுக்கூடத்தவர்களிடம் கேட்டுவிட்டு இதற்கு செலவு நிறைய ஆகுமே என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இதற்கிடையே சிங்காரவேலு முதலியார் மீது பச்சையப்பா பள்ளி மேலாளர்களுக்கு பொறாமையும் கோபமும் உண்டாயிற்று. அவர் ஆசிரியப்பணியைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டார். உயர்கல்வித் தகுதி இருந்தும் பச்சையப்பா அறக்கட்டளையைச் சேர்ந்த பி.டி. செங்கல்வராய நாயக்கர் துவக்கப்பள்ளி, கோவிந்த நாயக்கர் துவக்கப்பள்ளி ஆகியவற்றில் கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். துவக்கப்பள்ளி ஆசிரியருக்கான மிகக்குறைவான வருமானத்தில் சென்னையில் வாழவே முடியாத நிலை.

மனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை வெளியிடுவதற்கு பணம் வேண்டி இதழ்களில் ஓர் கைச்சாத்து அறிக்கையை வெளியிட எண்ணி பலரிடம் கையெழுத்து கோரினார். அக்கால வழக்கப்படி ஒரு நூலை அச்சிடும் முன் அதன் முதல் அச்சு நகலைப் பார்வையிட்டு, வெளியிடப்படும்போது அதைப் பணம் கொடுத்து வாங்கிகொள்கிறோம் என்று கையெழுத்திட்டு கொடுக்கும் வழக்கம் இருந்தது. பெரிய நூல்கள் அந்நாளில் அவ்வாறு அச்சில் வந்தன. ஆனால் பெரும்பாலானவர்கள் இது தேவையற்ற ஆடம்பர முயற்சி என்று சொல்லி ஒதுங்கினர். சிலரே கையெழுத்திட்டனர். இரண்டு அறிக்கைகளை பிரசுரித்துப் பார்த்தார். அம்முயற்சியும் வீணாயிற்று.

மனம்சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார். இக்காலகட்டத்தில் பல கோசங்கள் அரைகுறையாக எழுதப்பட்டு அவசரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய அபிதானகோசம் மட்டுமே ஓரளவேனும் முக்கியமானது. இந்நிலையில்தான் தான் வழிபட்ட முருகக் கடவுள் தன்னைப் பார்த்து கனிந்தார் என்று சிங்காரவேலு முதலியார் எழுதுகிறார். நாலாவது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் பாலவநத்தம் சமீந்தாருமான பாண்டித்துரை தேவர் சிங்காரவேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையைப் பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார்.

அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் மிகமகிழ்ச்சி அடைந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார். கைப்பிரதியை மதுரைக்குக் கொண்டுசென்று மீண்டும் செம்மையாக்கி எழுதுவித்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அச்சகம் இருந்தும் கூட சிங்காரவேலு முதலியாரின் வசதிக்காக அந்நூல் சென்னையிலேயே அச்சாகியது. சிங்காரவேலு முதலியார் அதன் முதல் பதிப்புக்கு மெய்ப்பு பார்த்தார். அக்கால் வழக்கப்படி தினமும் அச்சகம் சென்று பிழைதிருத்தம் செய்ய வேண்டும். பத்துமுறைக்குமேல் பிழை நோக்கப்பட்ட இந்த மாபெரும் நூலில் அச்சுப்பிழை என்பதே கிடையாது.

இந்நூலில் இருவருக்கு தனியாக நன்றி சொல்கிறார் சிங்காரவேலு முதலியார். ஒருவர் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர். சமணமதம் சார்ந்த தகவல்களைச் சொல்லித்தந்த அப்பாசாமி நயினார் இன்னொருவர். 1910ல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுபோன செய்திகளை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932ல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்.

சிங்காரவேலு முதலியாரின் மைந்தர் ஆ.சிவப்பிரகாச முதலியார் இரண்டாம் பதிப்பை தந்தை மரணமடைந்தபின் வெளியிட்டார். திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இதன் இரண்டாம்பதிப்புக்கு பிழை திருத்தம்செய்தார். இந்நூல் சி.குமாரசாமி நாயிடு ஆன்ட் சன்ஸ் நிறுவனம் 1934ல் வெளியிட்டது. அதன்பின் நெடுநாட்கள் அபிதான சிந்தாமணி மறு அச்சு வரவேயில்லை. 1981ல் ஆசிய கல்விச் சேவை நிறுவனம் டெல்லி சிவப்பிரகாச முதலியாரின் இரண்டாம் பதிப்பை அப்படியே ஒளிநகல் எடுத்து நூலாக்கியது. அதன் 11 ஆவது மறு அச்சு 2006ல் வெளிவந்ததுது

முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் அனேகமாக எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே இரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை. ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.

இரண்டாவதாக, தொன்மையான சாத்திரநூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தொன்மையான தமிழ் வாழ்க்கையை அறிய முற்பட்டால் நெடுக விரிவது.தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப்பற்றிய தகவல்கள் என இந்நூல் அளிக்கும் தகவல்கள் மிகப்பல.

மூன்றாவதாக, தொல்தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கபப்ட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் தமிழ்நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.

நான்காவதாக, தமிழரின் அன்றாட வாழ்வியல் குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உட்சாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள்,போன்றவை கூறப்படுகின்றன.

இதைத்தவிர அன்றைய அறிவியல்தகவல்களையும் அளித்திருக்கிறார் சிங்காரவேலு முதலியார். அவை இந்நூலில் போதாமையுடன் உள்ளன. அவற்றை முழுக்க உதாசீனம் செய்ய முடியாது. பல அறிவியல் செய்திகள் அக்காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதற்கான ஆதாரம் அவை.

இதன் தலைப்புகளைப் பார்த்தால் வியப்பூட்டும். உதாரணமாக, க வரிசையில் ககந்தன், ககபதி, ககமுகன்,ககனமூர்த்தி,ககுத்சதன்,ககுத்து,ககுத்தன்,ககுத்மி,ககுபு,ககுபை,ககுப்தேவி,ககேந்திரன்,ககோலன்,ககோளர்,ககோள விவரணம்…என்று போகிறது சொல் வரிசை. ஒரு தலைப்பின்கீழ் செய்திகளை மிகச்சுருக்கமான மொழியில் கொடுத்திருப்பதில் நவீன கலைக்களஞ்சியங்களுக்கெல்லாம் இது வழிகாட்டியாக சொல்லலாம்.

உதாரணம்: கண்ணகி என்ற தலைப்பில் இரண்டு பத்திகள். கண்ணகி- 1. பத்தினிக்கடவுள். மங்கல மடந்தை, திருமாபத்தினி ,வீரபத்தினியென்பன இவளுக்குரிய பர்யாய நாமங்கள். கோவலன் மனைவி[கோவலனைக் காண்க] 2. வையாவிக் கோப்பெரும்பேகனுக்குரியவள். இவள் ஒரு காலத்தில் இன்னாதுறக்கப்பட்டு கபிலர் பரணர் அரிசிற்கிழார் முதலியவர்களை நோக்கி அரசனைப்பாடி அரசனுடன் சேர்த்து வைக்க வேண்டியவள் [புற.நா]

கண்ணகியில் இருந்து கோவலனுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இளங்கோவுக்கும் சென்றால் மிக விரிவாகவே மொத்தக் கதையும் கிடைக்கும். இத்தகைய செறிவான நூலில் இந்திரன், ஔவையார் போன்ற தலைப்புகளில் இரண்டு மூன்று பக்கங்கள் அளவுக்குக் கூட தகவல்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சிங்காரவேலு&oldid=3683185" இலிருந்து மீள்விக்கப்பட்டது