ஆஸ்னட் எல்கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நடன நிகழ்ச்சியில் ஆஸ்னட் எல்கபீர்

ஆஸ்னட் எல்கபீர் (Osnat Elkabir) ஒரு இசுரேலியப் பாடகரும், நடனக் கலைஞரும், ஓவியரும், நாடக இயக்குனரும் ஆவார். இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பாரம்பரிய இந்திய நடனத்தையும், இசையையும் பயின்றார். தற்போது இவர் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் இந்திய நாடகம், நடனம் மற்றும் இசையைக் கற்பிக்கிறார் .

படிப்பும், ஆரம்பகால வாழ்க்கையும்[தொகு]

1990 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இவர் உத்தரபாராவில் (கொல்கத்தாவுக்குஅருகிலுள்ள ஒரு சிறிய நகரம்) புத்ததேவ் சைதன்யா என்பவரிடமிருந்து பிரமாரி ஓவியம் படிக்கத் தொடங்கினார். [1] புகழ்பெற்ற கலைக் குடும்பத்திலிருந்து வந்த புத்ததேவ் ஒரு ஓவியரும், நடனக் கலைஞரும், இசைக்கலைஞருமாவார். அவர் தனது தந்தையின் பிரமாரி ஓவியத்தின் நுட்பத்தை உருவாக்கினார். இது தாந்த்ரீக தாக்கங்களுடன் மேம்பட்ட முறைகளை அடிப்படையாகக் கொண்டது. தனது ஓவியப் பாடங்களைத் தொடர்ந்து, ஆஸ்னட், புத்ததேவிடமிருந்து பிரமாரி கதக் நடனத்தைப் படிக்கத் தொடங்கினார். இவர் தனது ஆசிரியருடனும், அவரது மனைவியான, ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டா சைதன்யா ஆகியோருடன் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

1990 களில் இவர் பிஜ்னாவின் மறைந்த இராஜாவான சத்ரபதி சிங்கிடமிருந்து பக்கவாத்தியம் கற்றுக் கொண்டார் . இந்திய இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். மேலும் புகழ்பெற்ற துருபாத் பாடகரும், மறைந்த ஜியா மொஹியுதீன் தாகரின் சீடரும், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இசை பீடத்தின் தலைவருமான பேராசிரியர் இரித்விக் சன்யால் என்பவரிடமிருந்து துருபாத் பாடலைப் பயின்றார்.

கலைச் செயல்பாடு[தொகு]

கங்கை ஆற்றில் துருபாத் பாடுகிறார்

1990களின் பிற்பகுதியிலிருந்து, இவர் தனது நேரத்தை இந்தியாவிற்கும் இசுரேலுக்கும் இடையில் பிரித்து வருகிறார். இவர் இசுரேல் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் துருபாத் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். ரிமோன் ஜாஸ் இசை மற்றும் தற்கால இசைக்கானப் பள்ளி, லெவின்ஸ்கி கல்லூரி, டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் விரிவுரை மற்றும் கற்பித்தல் பணிகளையும் மேற்கொள்கிறார்..

2002, 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில், இசுரேலின் அக்கோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் "மாற்று நாடகத்திற்கான பொது மொழி" என்ற தலைப்பில் நாடக நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். இந்த திட்டத்தில் இளம் இசுரேலிய முஸ்லீம், யூத மற்றும் கிறிஸ்தவ நடிகர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இந்திய நாடக நுட்பங்கள் மற்றும் கருப்பொருள்களைப் பயன்படுத்தினர்.

2003ஆம் ஆண்டில், வேர் தி டூ ரிவர்ஸ் மீட், என்ற இவரது இந்திய நினைவுக் குறிப்புகளைப் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. 2004ஆம் ஆண்டில் இவர் தொடக்கப் பள்ளிக்கான இந்திய புவியியல் பாடப்புத்தகத்தின் வடிவமைப்பில் ஸ்வியா பைன் என்பவருட இணைந்து பணியாற்றினார். தற்போது இவர் டெல் அவிவில் வசிக்கிறார். தற்போது குழந்தைகள் பல்லூடகத் திட்டத்தில் பணிபுரிகிறார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்னட்_எல்கபீர்&oldid=3320904" இலிருந்து மீள்விக்கப்பட்டது