உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரூயாவில் அமைந்துள்ள யூரோபொடல்லா ஷயர் அமைப்பு
நியூ சவுத் வேல்ஸ் மாநில உள்ளூராட்சிகளின் வரைபடம்
குயின்ஸ்லாந்து மாநில உள்ளூராட்சிப் பகுதிகள்
தெற்கு ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிகள்
தாஸ்மானியாவின் உள்ளூராட்சிகள்
விக்டோரியாவின் உள்ளூராட்சிகள்
மேற்கு ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிகள்
வடமண்டலத்தின் உள்ளூராட்சிகள்

உள்ளூராட்சிப் பகுதிகள் (Local Government Area, LGA) எனப்படுவது ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட உள்ளூராட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் குறிக்கும். மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூராட்சிகளின் பெயர்கள் மாறுபடுகின்றன. தன்னாட்சி நகரம் (Borough), நகரம் (city), மாவட்டம், நகராட்சி (municipality), வட்டாரம் (Region), கிராமிய நகரம் (Rural City), ஷயர் (Shire), மற்றும் சிறுநகரம் (Town) ஆகியவை ஆகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பெரும்பாலான உள்ளூராட்சிகள், மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் சில உள்ளூராட்சிகள் உள்ள்ளூராட்சிப் பகுதிகள் (areas) என அழைக்கப்படுகின்றன. இவற்றின் அமைப்புகள் மன்றம் (council) என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் தற்போது கிட்டத்தட்ட 700 உள்ளூராட்சிகள் உள்ளன[1].

இவ்வுள்ளூராட்சிகளை நிறுவுவதும், அவற்றின் எல்லைகளை மீளமைப்பதும் அந்தந்த மாநிலங்களினதும் ஆட்சிப்பகுதிகளினதும் பொறுப்பாகும்.

மாநில/ஆட்சிப்பகுதிகள் வாரியாக[தொகு]

நியூ சவுத் வேல்ஸ்[தொகு]

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 152 உள்ளூராட்சிகள் உள்ளன. இவற்றை விட தூர மேற்கு வட்டாரம் (Far West Region), மற்றும் லோர்ட் ஹவ் தீவு ஆகிய இணைக்கப்படாத (unincorporated) உள்ளூராட்சிகளும் உள்ளன. இம்மாநிலத்தின் அனைத்து உள்ளூராட்சிகளும், சட்டப்படி நகரங்கள் (ந) அல்லது பகுதிகள் (ப) என வகுக்கப்பட்டுள்ளன.

குயின்ஸ்லாந்து[தொகு]

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மொத்தம் 73 உள்ளூராட்சிகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 2007 இல் உள்ளூராட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடிகளின் சபைகளும் அடங்கும். இங்குள்ள உள்ளூராட்சிகள் நகரங்கள் (C), ஷயர்கள் (S), சிறுநகரங்கள் (T) மற்றும் தீவுச் சபைகள் (IC) எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ஆஸ்திரேலியா[தொகு]

தெற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 69 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C), கிராமிய நகரங்கள் (RC), நகராட்சிகள் (M), மாவட்ட சபைகள் (DC), பிரதேச சபைகள் (RegC), மற்றும் பழங்குடிகளின் சபைகள் (AC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் அரைப்பகுதிக்கு மேல் உள்ள Outback Areas Community Development Trust என்ற பகுதி எந்தவொரு உள்ளூராட்சிக்குள்ளும் அமையவில்லை.

தாஸ்மானியா[தொகு]

தாஸ்மானியாவில் மொத்தம் 29 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C) மற்றும் நகராட்சிகள் (M) என வகுக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா[தொகு]

விக்டோரியா மாநிலத்தில் 79 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C), கிராமிய நகரங்கள் (RC), தன்னாட்சி நகரங்கள் (B), மற்றும் ஷயர்கள் (S) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலேயே ஒரேயொரு தன்னாட்சி நகரமான குயீன்ஸ்கிளிஃப் தன்னாட்சி நகரம் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆஸ்திரேலியா[தொகு]

மேற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 143 உள்ளூராட்சிகள் அமைந்துள்ளன. இவை நகரங்கள் (C), சிறுநகரங்கள் (T), மற்றும் ஷயர்கள் (S) ஆகும். கிறிஸ்துமஸ் தீவு, கொக்கோஸ் தீவுகள் ஆகியனவும் மேற்கு ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிகளில் அடங்கியுள்ளன.

வட மண்டலம்[தொகு]

வடமண்டலத்தில் 17 உள்ளூராட்சிகள் உள்ளன. அத்துடன், டார்வின், மற்றும் நடு ஆஸ்திரேலியா பகுதிகளில் இணைக்கப்படாத உள்ளூராட்சிகள் இயங்குகின்றன. இங்குள்ள உள்ளூராட்சிகள் நகரங்கள் (ந), சிறுநகரங்கள் (T), ஷயர்கள் (ச) என அழைக்கப்படுகின்றன.

வேறு ஆட்சிப்பகுதிகள்[தொகு]

ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், ஜேர்விஸ் குடா பிரதேசம், மற்றும் வெளிவாரி ஆட்சிப்பகுதிகள் ஆகியனவற்றில் உள்ளூராட்சி அமைப்புகள் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About the Australian Local Government Association". Archived from the original on 2003-04-11. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]