ஆழ்கடல் உயிரினங்கள்
கடலின் சூரிய ஒளி மண்டலத்திற்குக் கீழே வாழும் உயிரினங்கள் ஆழ்கடல் உயிரினங்கள் (Deep sea creature) என்பதை குறிக்கும். இந்த உயிரினங்கள் நூற்றுக்கணக்கான பார் (அளவை) அழுத்தம், மிக சிறிய அளவு ஆக்சிஜன், மிக சிறிய உணவு, இருட்டு, அதீதக் குளிர் என கடினமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டும். அதாவது கடலின் 1000 மீ ஆழத்தில், 3 முதல் 100C வெப்ப நிலையில், 2 முதல் 1000 பார் (அளவை) அழுத்தத்தில் இந்த உயிரினங்கள் வாழ்கின்றன.
அழுத்த சுழ்நிலை
[தொகு]இந்த உயிரினங்கள் சூரிய ஒளி மண்டலத்திற்கு கீழே அதீத அழுத்தத்தில் வாழப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த அதீத அழுத்தத்தைச் சமாளிக்கும் வண்ணம் பெரும்பாலும் மீன்கள் 25 செ.மீ நீளம் மட்டுமே இருக்கும். மேலும், இவை வழவழப்பான சதையையும், குறைந்த பட்ச எலும்பு அமைப்பையும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இவை காற்றுப் பைகளை கொண்டிருப்பதில்லை.
ஒளி பற்றாக்குறை
[தொகு]இந்த உயிரினங்களுக்கு இருட்டினில் உணவினைக் கண்டுபிடிக்கவும் மற்ற உயிரினங்களிடமிருந்து தப்பிக்கவும் , சிறப்புத் தகவமைப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான உயிரினங்கள் மிகப் பெரிய கண்களும் கூம்பு போன்ற அமைப்பும் மற்றும் அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்கின்றன. இதில் சில வகை உயிரினங்கள் புறப்பார்வைக்குப் பதிலாக பெரிய உணர்வுப்புழைகளைக் (கரப்பான் பூச்சியின் மீசை போன்ற அமைப்பு) கொண்டுள்ளன. மேலும் இவை இனப்பெருக்கம் செய்ய தனது துணையைக் கண்டுபிடிக்கும் தேவையை நீக்குவதற்காக பெரும்பாலும் இருபால் உயிரினங்களாகவே உள்ளன. சில உயிரினங்கள் தனது துணை உயிரினம் வெளியிடும் இரசாயன வாசனையைக் கண்டறிய வலுவான உணர்திறனைப் பெற்றுள்ளன.
வளங்கள் பற்றாக்குறை
[தொகு]இந்த ஆழ் பகுதியில், ஒளிச்சேர்க்கை செய்ய போதுமான சூரிய ஒளியும் மீன்களின் உயர் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆக்சிஜனும் போதுமானதாக இல்லை. எனவே ஆக்சிஜன் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு ஏற்ப அவைகளுக்கு மெதுவாகவே உயர் வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. மேலும் பல மாதங்கள் கூட உணவு இல்லாமல் வாழ்கின்றன. பெரும்பாலான உணவு கடலின் மேல் பகுதியில் இருந்து விழும் கரிம பொருட்களாலும் அல்லது கடலில் வாழும் உயிரினங்கள் இறந்து விழும்பொழுதும் கிடைக்கிறது.
இந்த இறந்த உயிரினங்களின் உடல் சிதையும் பொழுது சிறிதளவு ஆக்ஸிஜனும் இவற்றிற்குக் கிடைக்கும். மேலும், உணவு தேட ஆற்றலை வீணாக்காமல் இருக்க பதுங்கியிருந்து இரையைத் தாக்குகிறது.
ஒளிர்தல்
[தொகு]ஒளிர்தல் (Bioluminescence) என்பது வேதியியல் வினைகள் மூலம் ஒளி உருவாக்கக்கூடிய திறன் ஆகும். அதாவது, தாங்கள் செல்லும் பாதையின் வெளிச்சத்திற்காகவும், இரையை ஈர்க்கவும் மற்றும் தன் துணையை ஈர்க்கவும் எனப் பல வழிகளில் இந்த ஒளியை இவை பயன்படுத்துகின்றன. இந்த ஒளியின் காரணமாக சில உயிரினங்கள் வைப்பர் மீன், பிரகாச ஒளி மீன் (flashlight fish) எனப் பெயரிடப்பட்டுள்ளன[1]. மேலும், ஒளிர்தலின் மூலம் எதிரிகளைக் குழப்பி அவைகளின் போக்கினை மாற்றவும் உதவுகிறது. இந்த ஒளிர்தலுக்கு தேவையான ஒளியை உருவாக்குகின்ற இரசாயன செயல்முறையில், குறைந்தது இரண்டு இரசாயனங்கள் தேவைப்படுகிறது. அந்த இரசாயனத்திற்கு லூசிஃபெரின் (luciferin) என்று பெயர். அந்த இரசாயன செயல்முறைக்கு லூசிஃபெரஸ் (luciferase) என்று பெயர்[2].
ஆழ்கடல் ஆராய்ச்சி
[தொகு]ஆராய்ச்சியாளர்கள் ஆழமான கடல் தரையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான உயிரினங்களை மட்டுமே ஆராய்ந்துள்ளனர். இன்றளவும் ஒவ்வொரு புதிய ஆராய்ச்சியின் போதும் பல புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. கடலில், தரை மற்றும் மேற்பரப்பிற்கு இடையே தீவிர அழுத்த வேறுபாடு உள்ளது. எனவே இந்த ஆழ்கடல் உயிரினங்கள் மேற்பரப்பில் வாழ்வது சாத்தியமற்றது. இந்த உயிரினங்களை மேலே கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ய இயலாது. எனவே நாம் கடலின் உள்ளே சென்றுதான் ஆராய முடியும். தற்போதைய, நவீன கண்டுபிடிப்புகள் மூலம் நாம் இந்த உயிரினங்களை அருகிலும், நீண்ட நேரமும் பார்க்க இயலும்.
ஜெஃப்ரி ட்ராஜென் (Jeffery Drazen) என்ற கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர், இந்த உயிரினங்களை மேலே கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ய, ஒரு அழுத்த மீன் பொறி (a pressurized fish trap) என்ற அமைப்பை உருவாக்கினார். ஆழ்கடல் உயிரினம் பிடிக்கப்பட்டு மேற்பரப்பிற்குக் கொண்டுவரும் பொழுது அதன் உள் அழுத்த மட்டம் மெதுவாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களைச் சரிசெய்து கொள்ளும் என நம்பப்படுகிறது[3].
மற்றொரு அறிவியல் குழு, பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்திலிருந்து, PERISCOP என்று அழைக்கப்படும் ஒரு நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், உயிரினங்களை மேலே கொண்டு வந்த பிறகும் அதே அழுத்த சூழலில் மாதிரிகள் வைத்து பராமரிக்கமுடியும். இந்த மாதிரிகளில், எந்த அழுத்தம் பாதிக்கும் தொந்தரவுகளும் இல்லாமல் மேற்பரப்பில் நெருக்கமான ஆய்வு செய்ய முடியும்[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Monterey Bay Aquarium: Online Field Guide
- ↑ BL Web: Chemistry
- ↑ New Trap May Take Deep-Sea Fish Safely Out of the Dark
- ↑ Lever, Anna-Marie (31 July 2008). "Live fish caught at record depth". BBC News. http://news.bbc.co.uk/2/hi/7525552.stm. பார்த்த நாள்: 18 February 2011.
மேலும் படிக்க
[தொகு]- Kupriyanova, E.K.; Vinn, O.; Taylor, P.D.; Schopf, J.W.; Kudryavtsev, A.B.; Bailey-Brock, J. (2014). "Serpulids living deep: calcareous tubeworms beyond the abyss". Deep-Sea Research Part I 90: 91–104. doi:10.1016/j.dsr.2014.04.006. Bibcode: 2014DSRI...90...91K.