ஆழித்தேர்
ஆழித்தேர் தமிழகத்திலுள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேராகும். மிகவும் பெரியதாகவும் அழகாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு ”திருவாரூர் தேரழகு” என்ற சிறப்பைப் பெற்றது. ஆசியாவிலேயே இரண்டாவது உயரம் கொண்ட தேர் ஆகும்.[1][2]
திருவாரூரை ஆண்ட மனுநீதிச் சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.
இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
சிறப்புகள்
[தொகு]பண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப்பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் என்று திருவாரூர்க் கோவையும், உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன. ஆடாதும் ஆடிப்பாகற்காய் பறிக்கும் தியாகர் என்ற பழமொழி இறைவன் ஆழித்தேரில் ஆடி வரும் அழகை உணர்த்துகிறது. முன்னர் பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர்.[3]
20ஆம் நூற்றாண்டு
[தொகு]திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1927இல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930இல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. 1930இல் வடிவமைக்கப்பட்ட தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன.[4] 1943ஆம் ஆண்டில் தேரோட்டச் செலவு ரூ.7,200 ஆயிற்று. திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது. அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. பல கலை நயந்துடன் கூடிய வேலைப்பாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனப் நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது. காலமாற்றத்தின் காரணமாக தேரிழுக்க வரும் பக்தர்களின் பற்றாக்குறை காரணமாக இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, 1988இல் 2000 பேர் தேரை இழுத்தனர். [3]
முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது நான்கு புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து வரப்படுகிறது.
21ஆம் நூற்றாண்டு
[தொகு]ஆழித்தேரோட்டம் சூலை 9, 2009இல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். 300 டன் எடையுள்ள இத்தேரில், திருச்சியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. தேரின் வேகம், திசை ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு, முன்புறம் 4 வடங்களை பக்தர்கள் இழுக்க, பின்புறமுள்ள இரு சக்கரங்களையும் இரு புல்டோசர்கள் தள்ளிக்கொண்டு சென்றது. அடுத்த தேர்த் திருவிழா சூலை 16, 2010இல் நடைபெற்றது.[5] [6] பின்னர் தேர் பழுதடைந்ததால் பின்வந்த ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. [7]தற்போது இத்தேர் புதுப்பிக்கப்படுகிறது. [8]புதுப்பிக்கப்படும் தேர் ஏழு அடுக்குகளைக் கொண்டமைந்துள்ளது. 30 அடி உயரத்தில் 31 அடி நீளமும் 31 அடி அகலமும் கொண்ட இது சுமார் 300 டன் எடையுள்ளதாகும். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது 400 டன்னாகும். [4] அக்டோபர் 26, 2015இல் இத்தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. [9] [10]
சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ "ஆழித்தேர்; ஆரூர்த் தேர்; நாளை தேரோட்டம்". இந்து தமிழ் (மார்ச் 31, 2019)
- ↑ 3.0 3.1 த.நாகராஜன், விண்ணவர் தொழ நின்ற வீதிவிடங்கன் திருத்தேர்,அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா மலர், 4.4.1988, திருவாரூர், பக்.38-42
- ↑ 4.0 4.1 Renovation of 'Azhi Ther' nearing completion, The Hindu, 21.4.2015
- ↑ திருவாரூரில் ஆழித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர், தினமணி, 10.7.2009
- ↑ Tiruvarur big car festival held with religious fervour, The Hindu, 16.7.2010
- ↑ திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தகவல், தினமலர், 30.6.2014
- ↑ திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் வெள்ளோட்டம் விரைவில் நடைபெறும் அறநிலையத்துறை ஆணையர் பேட்டி, தினத்தந்தி, 1.7.2014
- ↑ Thousands take part in trial run of car at Tiruvarur, The Hindu, 27.10.2015
- ↑ திருவாரூரில் ஆழித்தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தினமணி, 10.7.2009