ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி (Olcott Memorial High School) என்பது தமிழ்நாட்டின், தலைநகரான சென்னையின் ஒரு பகுதியான பெசன்ட் நகரில் உள்ள ஒரு தமிழ்வழி மேல்நிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளி பிரம்மஞான சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இலவசத் தனியார் பள்ளி ஆகும்.

வரலாறு[தொகு]

1894 இல் இப்பள்ளியைத் துவக்கியவர் பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆவார். இப்பள்ளி ஆல்காட்டின் மறைவுக்குப்பறகு ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி என்கிற பெயரில் அழைக்கப்பட்டது.[1] இப்பள்ளி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்ட துவக்கப்பட்ட ஒரு பள்ளியாகும்.[2] சென்னை நகரில் இம்மக்களுக்காக துவக்கப்பட்ட முதல் பள்ளி இதுவே.[3] பள்ளியைத் துவக்கியபிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் ஈடுபடும் ஆசிரியர் பணிக்கு யாரும் முன்வராத நிலையில், வேறுவழியின்றி கிறிஸ்தவ வேதாந்திகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 1907 இல் ஆல்காட் இறந்தபோது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஐயா கண்ணு அந்தப் பள்ளியின் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படும் அளவுக்குப் பள்ளி நிலைபெற்றுவிட்டது. துவக்கத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்ட பஞ்சமர் பள்ளி ஆல்காட் இறப்புக்குப் பிறகு அடையாறில் ஒரே பள்ளியாக நிறுவப்பட்டது. ஆல்காட் நினைவுப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அன்னி பெசண்ட் அம்மையாரின் தலைமையில் செயல்படத் தொடங்கியது. 2017 ஆண்டுவாக்கில் இப்பள்ளியில் 374 மாணவ-மாணவிகள் படித்துவருகிறார்கள்.

பள்ளியின் சிறப்பு[தொகு]

இப்பள்ளி தனியார் பள்ளியாக இருப்பினும், இன்று சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்னால் இப்பள்ளி அமெரிக்கரால் பள்ளி நிறுவப்பட்டபோதும் அன்றைய ஐரோப்பிய அல்லது அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அது நகல் எடுக்கவில்லை. ‘How We Teach The Pariah’ என்றே ஒரு நூல் எழுதப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தனித்துவமான பாடத்திட்டம் அப்போதே வரையறுக்கப்பட்டது. 1906 இல் அப்பள்ளியின் கண்காணிப்பாளர் பொறுப்பை வகித்த கோர்ட்ரைட் என்ற பெண் இப்புத்தகத்தை எழுதினார். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதாலும் இதைத் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளியாக நடத்த வேண்டும் என ஆல்காட் தன்னுடைய உயிலில் எழுதிய காரணத்தால் இப்பள்ளி தமிழ்வழிப் பள்ளியாகவே நடத்தப்பட்டு வருகிறது.[4] இப்பள்ளியில் பல வறிய கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வி, சீருடைகள், புத்தகங்கள் இருவேளை தினசரி சாப்பாடு வழங்குகிறது. 1935 முதல் 1998 வரை, அரசு உதவிபெறும் பள்ளியாக இருந்துவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து பிரம்மஞானசபை மீண்டும் பள்ளியின் பொறுப்பை எடுத்துக்கொண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gandhi, Thaatha, ThaLapathy, Kudumbar…". LankaWeb (Sri Lanka). 16 November 2009. http://www.lankaweb.com/news/items/2009/11/16/gandhi-thaathathalapathy-kudumbar/. 
  2. 2.0 2.1 "A school for the poor that the rich may envy". Good News India (India). http://www.goodnewsindia.com/index.php/magazine/story/olcott/P0/. பார்த்த நாள்: 6 August 2015. 
  3. "Caste back into Tamil literary domain". The New Indian Express (Chennai, India). 5 December 2013. http://www.newindianexpress.com/cities/chennai/Caste-back-into-Tamil-literary-domain/2013/12/05/article1927893.ece. 
  4. ம. சுசித்ரா (22 ஆகத்து 2017). "ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் பள்ளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்[தொகு]