உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ (பிறப்பு 1926) அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார்.[1] இவர் கால்பந்து மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ரியல் மாட்ரிட் அணியுடன் படைத்த சாதனைகளால் அதிகமாக அறியப்படுகிறார். அந்த அணி 1950களில் ஸ்பெயின் நாட்டு கோப்பைகளிலும் ஐரோப்பிய அளவிலான கோப்பைகளிலும் அதிக ஆதிக்கம் செலுத்துவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். ரியல் மாட்ரிட் 1956 முதல் 1960 வரை தொடர்ந்து 5 ஐரோப்பிய கோப்பைகளை வென்றது. இவர் அந்த ஐந்து இறுதிப் போட்டி களிலும் பங்கேற்றது மட்டுமல்லாமல் அந்த ஐந்து போட்டிகளிலும் கோல்களை அடித்து சாதனை புரிந்தார். தொடர்ந்து ஐந்து இறுதிப்போட்டிகளில் கோல் அடித்த இவரது இச்சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. தேசிய அணிக்கான போட்டிகளில் பெரும்பாலும் இவர் ஸ்பெயின் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் இவர் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா தேசிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இவர் மிகவும் வலுவான உடலமைப்பைக் கொண்டு திறமைமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்நிலை வீரராக அணியில் விளையாடுவார். இதனால் இவர் பல கோல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் 1953 முதல் 1964 வரை ஸ்பெயின் நாட்டிலுள்ள போட்டிகளில் ஈடுபட்டு பல கோல்களை அடித்ததன் மூலம் கோல் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். மற்றும் ரியல் மேட்ரிட் பட்டியலில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் நாட்டு கால்பந்து பத்திரிக்கை அனைத்து கால்பந்து வீரர்களை கருத்தில் கொண்டு மிகச்சிறந்த வீரர்களுக்கான பட்டியலை தயார் செய்தது. அப்பட்டியலில் இவர் நான்காம் இடத்தை பெற்றார். ஐரோப்பிய சம்மேளனம் மற்றும் ரியல் மாட்ரிட் அணி இவரது பங்களிப்பை பாராட்டி கௌரவ தலைவர் பதவிகளை அளித்தன.

இளமைக்காலம்[தொகு]

டி ஸ்டெபனோ அர்ஜென்டினா நாட்டு தலை நகரான ப்யூனோஸ் எயர்ஸ் பகுதியில் 1926 ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டு தந்தைக்கும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தார். இவர் தனது 17 வயது முதல் கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்தார். அர்ஜென்டினா நாட்டில் கால்பந்து வீரர்கள் போராட்டம் செய்த பொழுது அண்டை நாடான கொலம்பியா சென்று அங்குள்ள அணிக்காக கால்பந்து விளையாடினார். அர்ஜென்டினா மற்றும் கொலம்பிய நாட்டு அணிகளுக்கு 12 ஆண்டுகள் விளையாடி 6 கோப்பைகளை இவர் வென்றுள்ளார்.

ரியல் மாட்ரிட்[தொகு]

அதன்பிறகு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்கு இவர் விளையாட ஆரம்பித்தார். அந்த அணியில் பல சாதனைகள் நிகழ்த்தினார். தொடர்ந்து 5 முறை ஐரோப்பிய கோப்பைகளை அந்த அணி வென்றது. குறிப்பாக 1960 நடந்த இறுதிப் போட்டியில் இவர் மூன்று கோல்கள் அடித்து சாதனை செய்தார். மிகச் சிறந்த ஐரோப்பிய வீரருக்கான வருடாந்திர விருதினை 1957 மற்றும் 1959 ஆகிய ஆண்டுகளில் இவர் பெற்றார்.

தேசிய அணிகள்[தொகு]

இவர் அர்ஜென்டினா தேசிய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 கோல் அடித்துள்ளார். 1947 ஆம் ஆண்டு நடந்த தென் அமெரிக்க கோப்பையை அர்ஜென்டினா அணி வெற்றி பெற துணை புரிந்தார். ஸ்பெயின் தேசிய அணிக்காக 31 போட்டிகளில் விளையாடி 23 கோல் அடித்துள்ளார். இருப்பினும் இவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாடியது இல்லை. 1950 மற்றும் 1954 நடந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு பங்குபெற அர்ஜென்டினா அணி மறுத்துவிட்டது. பின்னர் இவர் ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற்று ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடினார். 1958 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகளில் ஸ்பெயின் அணிக்காக விளையாடினார் ஆனால் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை. அடுத்து 1962 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயின் அணியை உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற செய்தார். ஆனால் காயம் காரணமாக இவரால் 1962 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

வெனிசுலா நாட்டில் கடத்தல்[தொகு]

ரியல் மாட்ரிட் அணி 1963ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றது. அப்போது அங்குள்ள தீவிரவாத அமைப்பினால் இவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். கடத்தலுக்கு காரணம் ஸ்பெயின் நாட்டு சர்வாதிகார அரசு அந்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவரை கொன்றது ஆகும். கடத்தப்பட்ட இரண்டு நாட்கள் பிறகு இவர் எந்த காயமும் இன்றி ஸ்பெயின் தூதரகம் அருகில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு இவர் கடத்தல்காரர்கள் எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை என்று கூறினார். விடுதலை ஆன பிறகு பிரேசில் நாட்டு அணிக்கு எதிராக இவர் விளையாடினார் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இவரை கண்டு களித்தனர். இவரது கடத்தல் பற்றிய சம்பவங்கள் 2005 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அப்பொழுது வினோத விளம்பரம் நிகழ்வாக இவரையும் இவரது கடத்தல் காரரையும் சந்திக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Di Stéfano Profile" (in ஸ்பானிஷ்). Realmadrid.com. Archived from the original on 15 சூலை 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஃபிரடோ_டி_ஸ்டெபனோ&oldid=3586113" இலிருந்து மீள்விக்கப்பட்டது