ஆற்றுக்கால்
ஆற்றுக்கால் | |
|---|---|
இந்து புனிதத் தலம் | |
ஆற்றுக்கால், திருவனந்தபுரம், கேரளம் | |
| ஆள்கூறுகள்: 8°28′14″N 76°57′24″E / 8.47056°N 76.95667°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| ஏற்றம் | 22.04 m (72.31 ft) |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 695005 |
| தொலைபேசி குறியீடு | +91471xxxxxxx |
ஆற்றுக்கால் (Attukal) என்பது கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது கிள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு இந்து புனிதத் தலமாகும். இது பத்மநாபசாமி கோயிலிலிருந்து தென்கிழக்கில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தென்னிந்தியாவின் பழமையான கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி கோயில் இங்கு உள்ளது. இதன் பக்தர்களில் பெரும்பகுதியினர் பெண்களாக இருப்பதால். இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றுக்கால் பகவதி அனைத்து உயிரினங்களின் தாயாகவும், படைப்பவராகவும், பாதுகாப்பவராகவும், அழிப்பவராகவும் எண்ணி வணங்கப்படுகிறார்.
தொன்மம்
[தொகு]தலபுராணத்தின் படி, தமிழ்ப் புவலரான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காவியத்தின் நாயகியான கண்ணகியின் தெய்வீக வடிவமே ஆற்றுக்கால் பகவதி தெய்வம் எனப்படுகிறது. மதுரையை அழித்த பிறகு, கண்ணகி பாண்டிய நாட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரி வழியாக சேர நாட்டை அடைந்து, கொடுங்கல்லூருக்குச் செல்லும் வழியில் ஆற்றக்காலில் தங்கினார் என்ற கதை உள்ளது. பக்தர்கள் தங்கள் துயரங்களை நீக்கி, பாதுகாக்கும் தாய் தெய்வமாக இவரை வணங்குகின்றனர்.
நிகழ்வுகள்
[தொகு]பொங்கல் மகோத்சவம் என்பது ஆற்றுக்கால் பகவதி கோயிலின் மிக முக்கியமான திருவிழாவாகும். ஆற்றுக்கால் திருவிழாவில்தான் உலகில் மிகப்பெருமளவு பெண்கள் கூடுகின்றனர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] [2] பொங்கலிடுவது என்பது தென் கேரளப் பகுதியிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் ஒரு கோயில் விழிபாட்டு நடைமுறையாகும். இது மலையாள மாதமான மகரம்-கும்பத்தின் (பிப்ரவரி-மார்ச்) கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி இரவில் குருதிதர்ப்பணம் எனப்படும் பலிபீடத்துடன் முடிவடையும் பத்து நாள் நிகழ்ச்சியாகும். ஒன்பதாம் நாளில், அதாவது மலையாள மாதத்தில் மகரம்-கும்பத்தின் பூரம் நட்சத்திரத்தில், உலகப் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் மகோத்சவம் நடைபெறுகிறது. கோயில் வளாகத்தைச் சுற்றி சுமார் 8 கிலோமீட்டர் சுற்றுப் பகுதியில் உள்ள நகரத்தின் பெரும்பகுதி, அனைத்து சாதி, சமயத்தைச் சேர்ந்த மக்கள் திறந்தவெளிகள், சாலைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலக வளாகங்கள் போன்றவற்றில் கூடுகின்றனர். கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலில் இருந்து கூடும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பெண் பக்தர்கள் பொங்கல் வைக்கும் ஒரு புனிதமான இடமாக இது இருக்கிறது. ஆண்களும் இந்த சடங்குகளைச் செய்யலாம் என்றாலும், இந்த விழா பெரும்பாலும் பெண் மக்களுக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. அதே நாள் மாலையில், கோயிலிலிருந்து மணக்காடு தர்ம சாஸ்தா கோயிலுக்கு ஊர்வலம் நடைபெறும், இதில் குத்தியோட்ட சிறுவர்களும், பல்வேறு கலைஞர்களும் பல்வேறு வகையான நாட்டுப்புற கலைகளை நிகழ்த்துவார்கள், இது ஊர்வலத்தை மிகவும் வண்ணமயமாக்கும். இந்த நாளில் திருவனந்தபுரத்தில் கூடும் பெரும் கூட்டமானது வட இந்தியாவின் கும்பமேளா விழாவை நினைவூட்டுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guinness revises 'pongala' record". The Hindu. 2009-10-17. Retrieved 2013-10-20.
- ↑ S. Anil Radhakrishnan (2010-02-28). "Pongala fascinates foreigners". The Hindu. Retrieved 2013-10-20.