ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க நூலான பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.

பாடியவர்[தொகு]

இப்பாடல்களைப் பாடியவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். காக்கை விருந்து வரக் கரையும் என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் 'காக்கை பாடினியார்' என்னும் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

பாடப்பட்டவர்[தொகு]

இப்பத்தில் பாடப்பட்ட அரசன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (சேரல் ஆதன்). பாட்டுக்குப் பரிசிலாக நச்செள்ளையாருக்கு அணி செய்து அணிந்துகொள்ளும் பொருட்டு 9 கா என்னும் நிறையளவு பொன் கொடுத்தான். அத்துடன் 1,00,000 (நூறாயிரம்) காணம் காசு கொடுத்தான். மேலும் அரசவைப் புலவராக அவையில் தனக்குச் சமமாக அமர இடம் கொடுத்தான்.

பாடல்கள்[தொகு]

பாடல் 51 - வடு அடு நுண் அயிர்[தொகு]

(சேரலாத!) வண்டு மொய்க்க அடும்பு பூத்திருக்கும் கானலில் நண்டு நடந்த கோடுகளை ஊதைக்காறு நூண்மணலைத் தூவி மறைக்கும். அந்த இடத்தில் விறலியரின் பாடலைக் கேட்டுக்கொண்டே நீ காலம் கழிப்பதைப் பார்த்த நிலத்தலைவர்கள் நீ மெல்லியன் போலும் என்று நினைபராயின் அவர்கள் உன்னை உணராதவர்களே ஆவர். இளையரின் தண்ணுமை முழக்கத்துடன் நீ போருக்கு வந்துவிட்டால் உன் நோக்கம் கூற்றுவன் வலை விரித்தது போல் இருக்கும். அரவைக் கொல்லும் மழைமேகத்து இடி போன்றவன் நீ. உன் படைவீரர் பனைமடல் மாலை சூடிக்கொண்டு செல்லும்போது இரை உண்டு என்ற நம்பிக்கையுடன் கழுகுகள் வட்டமிடும்.

பாடல் 52 - சிறு செங்குவளை[தொகு]

(சேரலாத!) மகளிர் தோள்விலாவைப் புடைத்துக்கொண்டு துணங்கை ஆடினர். அப்போது அவர்கள் தழுவிக்கொள்ளும் புணையாக நீ அவர்களுடன் சேர்ந்து ஆடினாய். களிறு பிடிக்குத் தலைக்கை தந்து தழுவுவது போல அவர்களைத் தழுவிக்கொண்டாய். அதனைப் பார்த்து உன் மனைவி நடுங்கி ஒதுங்கினாள். அங்கே சிலர் உன்மேல் குவளைப் பூக்களை எறிந்தனர். உன்மேல் எறிந்த குவளைப் பூக்களை உன் மனைவி பிடித்துக்கொண்டாள். அதனை எனக்கே திருப்பித் தா என்று எறிந்தவர்கள் கேட்டதையும் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன் மனைவி ஒதுங்குவதைப் பார்த்து நீ அவளிடம் சென்றாய். அவள் 'நீ எமக்கு யாரையோ' என்று சொல்லி விலகினாய். உன் மனைவியுடன் ஒரு பால், மற்றவர்களிடம் ஒரு பால். இப்படிப் பால் செய்ய வல்ல நீ பகைவர் மதில்மீது பால் செய்யவும் வல்லவனாய் இருக்கின்றாய்.

பாடல் 53 - குண்டுகண் அகழி[தொகு]

(சேரலாத!) நீ நின் முன்னோர் சென்ற வழியிலேயே சென்று அவர்கள் வென்ற கோட்டைகளையே மீண்டும் வெல்ல எண்ணாமல் விலகிச் சென்று புதிய நாடுகளைக் கைப்பற்றுவாயாக. உன் முன்னோரால் வெல்லப்பட்டவர்கள் உன் குண்டுகண் அகழிக் (ஆழமும் அகலமும் மிக்க அகழி) கோட்டைக்கு வந்து திறை தந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா.

பாடல் 54 - நில்லாத் தானை[தொகு]

(ஒன்றிப் போகாதவரை 'ஒல்லார்' என்பது பழந்தமிழ்) (சேரலாத!) ஒல்லார் படையை யானையொடு காணின் நின் படை நில்லாது தாக்கும். விறலியர் நின் வீரத்தைப் பாடுவர். அவர்களுக்கு நன்கலப் (=நன்கு பயன்படும் பொருள்கள்) பொருள்களை நீ வரையறை இல்லாமல் வழங்க வேண்டும். உயர்நிலை உலகம் செல்லாது இந்த உலகத்திலேயே நெடிது வாழ வேண்டும்.

பாடல் 55 - துஞ்சும் பந்தர்[தொகு]

பந்தர் என்பது கடலுக்கு நடுவே இருந்த ஊர். அங்கு 'நன்கல வெறுக்கை' (பெரிதும் கையாளப்படும் செல்வம்) கேட்பாரற்றுக் கிடந்தது. அவ்வூர் 'கானலம்பெருந்துறை' என்றும், 'தண்கடல் படப்பை' என்றும் போற்றப்படும் சிறப்பினைப் பெற்றிருந்தது. அந்நாட்டை வென்று நேரலாதன் தன் நாட்டுடன் பொருத்திக் கொண்டான்.
மழவர் பெருமக்களுக்குக் கவசமாக விளங்கினான்.
அவன் குடநாட்டு அரசன்.
இரப்பதற்குக் கூசி இரவலர் வராவிட்டால் தன் தேரை அனுப்பிக் கொண்டுவரச் செய்து அவர்களுக்குப் 'பதம்' (நல்வாழ்வு) கொடுப்பது இவன் வழக்கம். இவன் விரும்பத்தக்க உண்மைகளையே பேசிப் புகழ் பெற்றவன். வேண்டிய அளவு பெய்யும் அவன் நாட்கள் கழிய வேண்டும் என்பது புலவர் வாழ்த்து. போரிடும் ஆண்மையை அவன் தணியவைத்துக்கொண்டான்.

பாடல் 56 - வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி(வாழ்க்கை)[தொகு]

தெருவில் நடக்கும் ஊர் விழாவில் யாழிசைக்கும் கோடியரோடு (கோடியர் = யாழ்த் துணைமையோர் - தொல்காப்பியம் 1038) கூடி முழவிசைக்கு எற்ப ஆடவும் வல்லவன். வேந்தர் தம் மெய்யை மறந்துபோன (மாண்ட) போர்க்களத்தில் ஆடவும் வல்லவன்.

பாடல் 57 - சில்வளை விறலி[தொகு]

புறமுதுகிடாத மறவரைக் கொன்று போர்க்களத்தில் தோன்றியவன் இப்போது துணங்கை ஆடிக்கொண்டிருக்கிறான். மனைவி ஊடும் கண், இரவலரின் புன்கண் (துன்பம்) இந்த இரண்டு கண்களில் முன்னதற்கு அவன் அஞ்சமாட்டான். பின்னதற்கு அஞ்சுவான். விறலி! அவனைக் கண்டுவர மெல்ல நடந்து செல்வோமா!

பாடல் 58 - ஏ விளங்கு தடக்கை[தொகு]

விறலியர் ஆடுக. பரிசிலர் பாடுக. 'இன்று உண்டோம், நாளை மதில் கடந்து அல்லது உண்ணமாட்டோம்' என்று பொய் சொல்லத் தெரியாத நாவால் கூறும் சான்றோருக்கு அவன் கவசம்.
அவனை 'வான வரம்பன்' என்று கூறுவர்.
வேல மரம் இருக்கும் புன்செய் வயலில் ஏர் பூட்டி உழுது விதைத்து விளையும் கதிர்மணி பெறும் நாடு அவன் நாடு.

பாடல் 59 - மா கூர் திங்கள்[தொகு]

அவன் வில்லோர் மெய்ம்மறை (கவசம்!) செல்வர்க்குச் செல்வன்.

செல்வ! பகைவர் பணிந்து திறை தந்தால் சினம் தணிக. மலையிலும், கடலிலும் பெற்ற வளங்களைப் பகிர்ந்துகொண்டு தட்டுப்பாடின்றி அறம் செய்யும் நாட்டைக் காப்பாற்ற வேண்டியது நீன் கடன்.

மாசி என்னும் வேண்மேகம் மேயும் மாசி மாத்ததில் விடியற் காலத்துக் குளிர்நடுக்கத்தில் ஞாயிறு தோன்றுவது போல நீ இரவல் பெருமக்களின் சிறுகுடியை வளம்பெறச் செய்ய வேண்டும்.

பாடல் 60 - மரம்படு தீங்கனி[தொகு]

'நறவூர்' என்னும் ஊரினைப் புலவர் 'துவ்வா நறவு' என்று குறிப்பிடுகிறார். துவ்வும் (உட்கொள்ளும்) நறவு என்பது கள். அங்கே தென்னை மரங்கள் மிகுதி. இது மறுபயிர் செய்யாமல் விளைவு தரக்கூடியது. கத்தியால் குறுக்கே அறுக்க முடியாத காயினை உடையது. மண்டை என்னும் ஓட்டுக்குள் அழகிய சேறு (தேங்காய்ச்சோறு) கொண்டது. வழியில் செலவோரின் களைப்பைப் போக்கக் கூடியது. போர்மறவரும் இங்கு வாடைப் பனியால் நடுங்குவர். மகளிர் இந்த நறவு போன்றவர். இத்தகைய மகளிர் இனத்தின் நடுவேதான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் உள்ளான். பாண்மகளே! அவனிடம் செல்வோமா! - என்று விறலியை ஆற்றுப்படுத்துவது போல் புலவர் பாடுகிறார்.