ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆர். வெங்கட்ராமன் (திசம்பர் 6, 1918 - ஆகத்து 29, 2008) தமிழகத்தின் ஒரு மூத்த எழுத்தாளர். கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்த இவர், பிறகு கலைமகள் காரியாலயம் தொடங்கிய கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஆர்வி என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் என கிட்டத்தட்ட எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழக அரசு ஆகியவற்றால் பரிசும், பாராட்டும் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர்வி தேசிய இயக்கத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர். 1941 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் கைதாகி தஞ்சாவூர் பாபநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்த க. சந்தானத்துடன் பத்திரிகைத் துறையில் சேருவதற்காக 1942 இல் சென்னை வந்தார்.

சென்னைக்கு வந்த மறுநாள் மயிலாப்பூரில் இருந்த கலைமகள் காரியாலயத்தில் கி. வா. ஜகந்நாதனைச் சந்தித்து பத்திரிகைத் துறையில் தனக்கிருந்த ஈடுபாட்டைக் கூறினார். உடனேயே கா.ஸ்ரீ.ஸ்ரீநிவாசாச்சாரியாருக்கு அருகில் இடம் தந்தார்கள். பத்திரிகைக்கு வரும் கதைகளைப் பதிவு செய்வதோடு அவற்றைப் படித்துவிட்டு, தேறக்கூடிய கதைகளை ஆசிரியரின் பார்வைக்காக எடுத்து வைக்கும் வேலையை முதலில் தந்தார்கள்.

அதைத் தொடர்ந்து 1950 இல் சிறுவருக்கென்று கண்ணன் பத்திரிகையும் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். "கண்ணனில்" ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் புதினக்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவரது புதினங்கள் கல்கி, சுதேசமித்திரன் ஆகிய வார இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரது மிகச் சிறந்த நாவல்கள் என்று பலராலும் பாராட்டப் பெற்ற அணையா விளக்கு, திரைக்குப் பின், ஆதித்தன் காதல் போன்ற நாவல்கள் சுதேசமித்திரனில் வெளியானது. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள், பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்திருக்கிறார் ஆர்வி.

1946 இல் கல்கியைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் செயலாளராக ஆர்வி திகழ்ந்தார். 1960 இல் தி. ஜானகிராமன், ந. சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க. சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கொண்டு தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கினார். இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாகச் செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய்ப் பல காலம் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, மற்றும் பாரதி லட்சுமணன் அறக்கட்டளையும், இலக்கியச் சிந்தனையும் இணைந்து வழங்கிய பம்பாய் ஆதி லட்சுமணன் நினைவுப் பரிசான ரூ 15000 (2003) என்று பலவற்றைப் பெற்றிருக்கிறார்.

ஆர்வியின் புதினங்கள் குறித்த ஆய்வு[தொகு]

ஆர்வியின் சிறுவர் இலக்கியப் புதினங்களை விரிவாக ஆய்வு செய்து 2008 இல் 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் "ரேவதி" என்ற புனைபெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளையும், நாவல்களையும் எழுதிய குழந்தை எழுத்தாளர் ஈ. எஸ். ஹரிஹரன்.

மொத்தம் 14 உள்ளுறைகளை கொண்டுள்ளது இந்நூல். ஆர்வியின் அசட்டுப்பிச்சு, சைனா சுசூ!, ஐக்கு, ஐக்கு துப்பறிகிறான், சந்திரகிரிக் கோட்டை, காளி கோட்டை இரகசியம், புதிய முகம், ஜம்பு, காலக் கப்பல்,ஒருநாள் போதுமா?, லீடர் மணி ஆகிய நாவல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறைவு[தொகு]

சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த ஆர்வி 29/08/2008 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

வெளியான நூல்கள்[தொகு]

  • லீடர் மணி
  • சந்திரகிரி கோட்டை
  • அசட்டுப் பிச்சு
  • இருளில் ஒரு தாரகை
  • காலக்கப்பல்
  • திரைக்குப் பின்
  • அணையா விளக்கு
  • ஆதித்தன் காதல்
  • யுவதி
  • சவிதா
  • குங்குமச் சிமிழ் (சிறுகதைத் தொகுப்பு தமிழ் நாடு அரசின் பரிசைப் பெற்றது)

வெளி இணைப்புகள்[தொகு]