ஆர்மோசுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹார்மோஸ்ட் (Harmost, கிரேக்கம்: ἁρμοστής‎) என்பது இராணுவ ஆளுநரைக் குறிக்கும் ஒரு எசுபார்த்தன் சொல் ஆகும். கிமு 404 இல் பெலோபொன்னேசியன் போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் போது எசுபார்த்தன் தளபதி லைசாந்தர் பல ஆர்மோசுட்டுகளை நியமித்தார். அவர்கள் தங்கள் நியமிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டனர் அல்லது எசுபார்த்தன்களால் கைப்பற்றப்பட்ட நகர அரசுகளுக்கு அனுப்பப்பட்டனர். அந்த நகர அரசுகளை தங்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாக வைத்திருக்கவும், அந்த நகர அரசுகளில் இருந்துவரும் சனநாயக அரசு வடிவத்தை அகற்றி, அதற்குப் பதிலாக சிலவர் ஆட்சியை பதவியில் நிலைநிறுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளித்தோற்றத்தில் ஒரு நகர அரசில் நிலவும் கொடுங்கோல் அரசாங்கத்தை ஒழிப்பதற்கும், சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும் என்ற காரணங்களைக் கூறி அனுப்பப்பட்டாலும், அவர்கள் அரசர்களாகவோ அல்லது கொடுங்கோலர்களாகவோ நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். கி.பி முதல் நூற்றாண்டு இலக்கண அறிஞர் டியோனீசியஸ் ஆர்மோஸ்ட் என்பது "அரசர்" என்ற சொல்லுக்கான மற்றொரு சொல் என்று கருதினார்.

அண்டால்சிடாசின் அமைதி உடன்பாட்டில், எசுபார்த்தன்கள் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நகர அரசுகளில் சுதந்திர அரசாங்கங்களை மீண்டும் நிறுவுவதாக உறுதியளித்தனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஆர்மோசுடுகளையே நிறுவினர். [1] பொதுவாக எசுபார்த்தனுக்கு ஆதரவான செனபோன் கூட, எசுபார்த்தன்கள் தங்கள் ஆர்மோசுடுகளை ஆள அனுமதித்த விதத்திற்காக பழித்தார். [2]

நகர அரசுகளில் ஒரு ஆர்மோசுடின் பதவிக் காலம் எவ்வளவு காலம் நீடித்தது என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் சைதெராவில் லேசிடெமோனியர்களால் நியமிக்கப்பட்ட அதே வகையான ஆளுநர், சைத்தரோடைக்ஸ் என்ற பட்டத்துடன், ஒரு ஆண்டு மட்டுமே தனது பதவியில் இருந்தார் என்பதைக் கருத்தில் கொண்டால், [3] ஆர்மோஸ்ட் பதவி அதே கால அளவு இருந்தது என்பதற்கு சாத்தியம் உள்ளது.

தீபசின் மேலாதிக்கத்தின் போது தீப்சும்ன் இந்தச் சொல்லை பயன்படுத்தியது.


குறிப்புகள்[தொகு]

  1. Polybius 4.27
  2. Xenophon De Rep. Lac. C. 14
  3. Thucydides 4.53
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மோசுடு&oldid=3509720" இருந்து மீள்விக்கப்பட்டது