ஆர்க்குட் புயுக்கோக்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்க்குட் புயுக்கோக்டன்
பிறப்பு6 பெப்பிரவரி 1975 (அகவை 49)
கொன்யா
படித்த இடங்கள்
  • Bilkent University
பணிஅபுனைவு எழுத்தாளர்
வேலை வழங்குபவர்

ஆர்க்குட் புயுக்கோக்டன் (Orkut Büyükkökten) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இவர் உருவாக்கிய ஆர்க்குட் என்னும் இணையவழி நடத்தும் குமுகவலையால் (சமூக வலையால்) புகழ் பெற்றவர். இவர் துருக்கி நாட்டின் கொன்யா என்னும் இடத்தில் இருந்து வந்தவர். இவர் அங்க்காராவில் உள்ள பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல், தகவலியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது கிளப்நெக்சஸ் (ClubNexus) என்னும் பெயரில் தொடங்கி பின்னர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது ஆர்க்குட் என்னும் குமுகவலை அமைப்பை நிறுவினார். கூகுளில் பணி புரிவோர் பொதுவாக 70% நேரம் தம் நிறுவனத்தின் கருவாய குறிக்கோளுக்கான பணிகளிலும், 20% நேரம் தனக்கு விருப்பமான, ஆனால் கூகுள் நிறுவனத்திற்கு ஏதேனும் ஒருவாறு பயன் தர வாய்ப்புள்ள, பணிகளிலும், மீதம் இருக்கும் 10% நேரம் தனக்குப் பிடித்த எந்தத் துறையிலும் செலவிடலாம் என்னும் திட்டத்தின் பயனாக இந்த ஆர்க்குட் குமுகவலை உருப்பெற்றதாகக் கூறுவர்.

கூகுளில் சேர்வதற்கு முன்பு, பல்கலைக்கழக பழைய மாணவர்கள் தொடர்ந்த தொடர்பு கொண்டிருக்க ஏதுவாய் "உள்வட்டம்" அல்லது "வட்டத்திற்குள்" என்னும் பொருள் படும்படி இன்சர்க்கிள் (InCircle) என்ற ஒரு குமுகவலை அமைப்பை அஃவ்வினிட்டி எஞ்சின்சு (Affinity Engines) என்னும் நிறுவனத்திற்காக உருவாக்கினார். பின்னர் 2004ல், அஃவ்வினிட்டி எஞ்சின், கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது. வழக்கு என்னவென்றால் ஆர்க்குட் புயுக்கோக்டனும் கூகுளும் சேர்ந்து அஃவ்வினிட்டி எஞ்சினுக்குச் சொந்தமான இன்சர்க்கிள் மென்பொருள் கூறுகளைப் பயன்படுத்தினர் என்பதாகும். ஆர்க்குட்டிலும் இன்சர்க்கிளிலும் ஒரே வகையான 9 மென்பொருட் பிழைகள் இருப்பதாகக் காட்டினர். பின்னர் கூகுள் நிறுவனமும் அஃவ்வினிட்டி எஞ்சின் நிறுவனமும் அறமன்றத்திற்கு வெளியே தங்களுக்குள் ஏற்புடைய ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

வெளி இணைப்புகள்[தொகு]