ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்யங்காவு தர்மசாஸ்தா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கொல்லம்
அமைவு:ஆரியங்காவு
கோயில் தகவல்கள்

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் பரசுராமன் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு அய்யப்பன் சௌராட்டிர குலப் பெண்ணான புஷ்கலா தேவியுடன் அரசராக காட்சி அளிக்கிறார். கோயிலின் இடப்புறம் அய்யப்பனின் காவல் தெய்வங்களாகிய கருப்பசாமியும் கருப்பாயி அம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒற்றைக்கல்லில் தீர்த்த திருக்கல்யாண மண்டபம். திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது. கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய வேண்டும். பத்து முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் நுழையக் கூடாது.

ஆரியங்காவு ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இக்கோவில் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்து சமயக் கடவுளான ஐயப்பன் இக்கோவிலின் முதன்மைக் கடவுள் ஆவார். சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார்.

தனு மாதத்தில் (மார்கழி) அய்யப்பன் - புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். ஆர்யங்காவு கோயில், கேரளம் – தமிழ்‌நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எனவே அம்பலத்தினுள் மலையாள ஆச்சாரங்களும், உற்சவத்தின்போது தமிழ் ஆச்சாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.

அமைவிடம்[தொகு]

கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் உள்ள இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.திருவனந்தபுரம்-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.

கோவில் அமைப்பு[தொகு]

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுகின்றன. கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற தொன்நம்பிக்கை உள்ளது.

மரபுவழி வரலாறு[தொகு]

மதுரையிலிருந்து திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.

திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்ன என்பதை வினவ, அவன் அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படிக் கேட்டான். அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்.

ஆரியங்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவிலில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

ஐயப்பனின் பரவலாக அறியப்பட்ட கோவில்களில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. குளத்துப்புழா, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள் ஆகும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று, ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். சபரிமலையைப் போன்றே இங்கும் பூசைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]