ஆம்பிபோலிஸ் சமர்
ஆம்பிபோலிஸ் சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
![]() துசிடிடீஸ் குறிப்புகளின்படி போர் ஏற்பாடுகளை விளக்கும் 1825 ஆம் ஆண்டு வரைபடம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்சு | எசுபார்த்தா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Cleon †, துசிடிடீஸ், Eucles | Brasidas †, Clearidas |
||||||
பலம் | |||||||
சுமார் 2,000 | சுமார் 2,500 | ||||||
இழப்புகள் | |||||||
சுமார் 600 | 7 | ||||||
ஆம்பிபோலிஸ் சமர் (Battle of Amphipolis, கிரேக்கம்: Μάχη της Αμφίπολης ) என்பது இரண்டாம் பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 422 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்த ஒரு சமர் ஆகும். இது கிமு 424 இல் எசுபார்த்தன்கள் ஆம்பிபோலிசைக் கைப்பற்றியதன் மூலம் உச்சமடைந்த நிகழ்வுகள் ஆகும்.
முன்னுரை
[தொகு]கிமு 424 இல், பைலோஸ் சமருக்குப் பிறகு பைலோஸ் மற்றும் சைத்தெராவில் இருந்து பெலோபொனேசியன் ஏதெனியன் தொல்லைகளுக்கு பதிலடி அளிக்கும் விதமாக, எசுபார்த்தன் தளபதி பிரசிடாஸ், திரேசில் உள்ள ஏதெனியப் பகுதிகளைத் தாக்குவதற்காக வடக்கில் இராணுவத்தை அழைத்துச் செல்ல அனுமதி பெற்றார். [1] கொரிந்துக்கு அருகிலுள்ள பெலோபொன்னீசிலிருந்து ஆயுதம் ஏந்திய 700 எலட்கள் மற்றும் 1,000 கூலிப்படை ஹாப்லைட்டுகள் என படைகளைத் திரட்டினார். [2] மெகாராவைக் கைப்பற்றும் ஏதெனியன் முயற்சியை முறியடித்த பிறகு, [3] பிரசிடாஸ் தனது இராணுவத்தை தெசலி வழியாக அழைத்துச் சென்றார். மேலும் இவர்களுடன் எசுபார்த்தாவின் வடக்கு கூட்டாளிகளில் ஒருவரான மாசிடோனின் இரண்டாம் பெர்டிக்காசும் இணைந்தார். [4] ஆகத்தின் பிற்பகுதியில் சிறுசிறு இராச்சியங்களைக் கைப்பற்றிக் கொண்டு, [5] இறுதியில் 424 திசம்பர் துவக்கத்தில், ஏதென்சால் முக்கியமானதாகக் கருதப்பட்டுவந்த ஆம்பிபோலிசு நகரத்துக்கு வந்தடைந்தனர். [6]
ஆம்பிபோலிசை கைப்பற்றுதல், கிமு 424-423
[தொகு]424-423 குளிர்காலத்தில், டெலியம் சமர் நடந்த அதே நேரத்தில், ஸ்ட்ரூமா ஆற்றை ஒட்டியுள்ள திரேசில் ஏதெனியன் குடியேற்றமான ஆம்பிபோலிசை பிரேசிடாஸ் முற்றுகையிட்டார். [7] திரேஸ் பகுதியில், ஏதென்சின் நலன்களைப் பாதுகாக்கவென்று படைத்தலைவர்கள் இருவர் நியமிக்கபட்டிருந்தனர். இவர்களில் ஏழு கப்பல்களுடன் கடற்படைக்கு பொறுப்பானவராக தாசோசுக்கு அருகில் தங்கி இருந்த துசிடிடீஸ் (பின்னர் பிரபலமான ஒரு வரலாற்றாசிரியரானார்) ஆவார். துசிடிடீசை ஏதென்சின் உதவியை நாட அனுப்பிய ஏதெனியன் ஜெனரல் யூகிள்ஸ் நகரத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். [8]
துசிடிடீஸ் வருவதற்கு முன்பே நகரத்தைக் கைப்பற்ற விரும்பினார் பிரேசிதாஸ். அதனால் நகரில் தொடர்ந்து வாழ விரும்பும் அனைவரும் தங்களுடைய சொத்துக்களோடு இருக்கலாம், வெளியேற விரும்புவோர் பாதுகாப்பாக வெளியேறலாம் என்ற வாய்ப்பை அளித்தார். [9] அந்த அறிவிப்பினால் ஏதெனிய தளபதி யூகிள்சின் எதிர்ப்பையும் மீறி ஆம்பிபோலிஸ் நகரம் சரணடைந்தது. [10] நகரம் சரணடைந்த அதே நாளில், துசிடீஸ் உள்ள இயோன் துறைமுகத்துக்கு வந்து, ஆம்பிபோலிசை விட்டு வெளியேறியவர்களின் உதவியுடன் அதைப் பாதுகாத்தார். [11] இதற்கிடையில், பிராசிடாஸ் திரேசிய நகரங்களுடன் கூட்டணி வைத்து, டோரோன் போன்ற பகுதியில் உள்ள மற்ற நகரங்களையும் தாக்கத் தொடங்கினார். பிரேசிடாஸ் அந்த நகரங்களுக்கும் சாதகமான சலுகைகளை அளித்தால், ஆம்பிபோலிடன்களைப் போல, தங்கள் மற்ற கூட்டாளி நகரங்களும் விரைவில் சரணடைவார்கள் என்று ஏதெனியர்கள் அஞ்சினர்.
இஸ்ட்ரி ஆர் த பெலோபொன்னேசியன் வார் நூலிலை எழுதியவரும் அதில் ஆம்பிபோலிஸ் வீழ்ந்ததைப் பற்றி எழுதியவரும் கடற்படையின் தளபதியுமான துசிடிடீஸ்தான் ஆம்பிபோலிசின் வீழ்ச்சிக்கு ஓரளவோ அல்லது முழுமையாகவோ காரணமாகக் கருதப்படுகிறார். சிலர் அவரது நடவடிக்கைகளை "மொத்த அலட்சியம்" என்று பார்த்தனர். இருப்பினும் அவர் நகரத்தை பாதுகாக்க சரியான நேரத்தில் வர முடியவில்லை என்று கூறுகிறார். இதனால் துசிடிடீ ஏதென்சுக்கு திரும்ப அழைக்கப்பட்டார், அங்கு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். [12]
கிமு 423 இல் போர் நிறுத்தம்
[தொகு]நகரம் வீழ்ந்ததின் எதிரொலியாக, ஏதென்சு மற்றும் எசுபார்த்தா இடையே ஒரு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தில் எதிர்காலத்தில் பிராசிடாசினால் தாக்கத் திட்டமிட்டுள்ள பல நகரங்களை பலப்படுத்த முடியும் என்று ஏதென்சு நம்பியது. அதேபோல கிமு 425 இல் ஸ்ப்பாக்டீரியா சமரில் ஏதென்சிடம் கைதிகளாக பிடிபட்ட எசுபார்த்தன்களை ஏதென்சு இறுதியில் திருப்பி ஒப்படைக்கும் என்று எசுபார்த்தன்கள் நம்பினர். போர்நிறுத்தத்தின் விதிமுறைகளின்படி, "ஒவ்வொரு தரப்பும் தங்கள் சொந்த பிரதேசத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது, இந்தப். . . போர்நிறுத்தம் ஒரு ஆண்டு நீடிக்கும்." [13] என்று முடிவானது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, பிரேசிதாஸ் சியோனைக் கைப்பற்றினார் மேலும் ஒப்பந்தம் பற்றிய செய்தி வந்தடைந்தபோது நகரத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்துவிட்டார். அதனால் ஏதெனியன் தலைவர் கிளியோன் உடன்படிக்கை இருந்தபோதிலும், நகரை திரும்பப் பெற ஒரு படையை அனுப்பினார்.
இரண்டாம் ஆம்பிபோலிஸ் சமர், கிமு 422
[தொகு]ஓராண்டு போர் நிறுத்தம் 422 இல் முடிவடைந்தபோது, ஏதென்சின் கூட்டாளிகளின் பல துருப்புக்களுடன் 30 கப்பல்கள், 1,200 ஹோப்லைட்டுகள், 300 குதிரைப்படைகள் கொண்ட படையுடன் கிளியோன் திரேசுக்கு வந்தார். அவர் டோரோன், சியோன் ஆகிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார்; மோதலின்போது சியோனில், எசுபார்த்தன் தளபதி பசிடெலிடாஸ் கொல்லப்பட்டார். பின்னர் அவர் ஈயோனில் நிலைப்படுத்திக் கொண்டார். அதே சமயம் பிராசிடாஸ் ஸ்ட்ரைமோனின் வலது கரைக்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பில் ( செர்டிலியம் என்றும் லத்தீன் மொழியில் அழைக்கப்படுகிறது) செர்டிலியோனில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். பிராசிடாசிடம் சுமார் 2,000 ஹோப்லைட்டுகள் மற்றும் 300 குதிரைப்படைகள் மேலும் சில துருப்புகள் அம்பிபோலிசில் இருந்தன. ஆனால் அவர் கிளியனை கடும் போரில் தோற்கடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. இதனால் பிரசிதாஸ் தனது படைகளை மீண்டும் ஆம்பிபோலிசுக்கு அணிவகுத்துச் சென்று தாக்கத் தயாரானார்; ஒரு தாக்குதல் வரப்போவதை கிளியோன் உணர்ந்ததும், எதிர்பார்த்த வலிவாக்கம் வருவதற்கு முன்பு போரிடத் தயங்கியதும், அவர் பின்வாங்கத் தொடங்கினார்; பின்வாங்கல் ஒழுங்கற்றதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அச்சமயம் பிரசிதாஸ் ஒரு ஒழுங்கற்ற எதிரிபடைக்கு எதிராக தைரியமாக தாக்கி, வெற்றியை ஈட்டினார்.
தோல்வியடைந்த ஏதெனியப் படைகளுக்கு பலத்த சேதம் உண்டானது. போரில் கிளியன் மடிந்துபோனார். பிரசிதாசின் படைகளுக்கு உயிர்சேதம் அவ்வளவாக இல்லை ஆனால் பிராசிதாசே போர்க களத்தில் படுகாயமுற்றார். எஞ்சிய முழு ஏதெனிய இராணுவமும் மீண்டும் ஈயோனுக்கு தப்பி ஓடியது, இருப்பினும் அவர்களில் 600 பேர் துறைமுகத்தை அடைவதற்கு முன்பே கொல்லப்பட்டனர். எசுபார்த்தன் தரப்பில் ஏழு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். [14]
முடிவுகள்
[தொகு]பிரசிதாஸ் போரில் வெற்றிபெற்றாலும் படுகாயத்தால் இறந்தார். ஆம்பிபோலிசின் அகோரா பகுதியில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். ஆம்பிபோலிட்டன்கள் அவரை ஒரு நாயகனாகக் கருதி போற்றினர். அவரது நினைவாக விளையாட்டுகள் மற்றும் ஆண்டு படையல் போன்றவற்றை நடத்தினர். அவர்கள் அவரை நகரத்தின் நிறுவனராக்கி அவருக்கு அர்ப்பணித்தனர். ஏதெனிய தளபதி ஹக்னானால் நகரில் எழுப்பப்பட்ட கட்டிடங்களை இடித்து, எதிர் காலத்திற்கு எந்த நினைவுச்சின்னங்களையும் விடாமல் அழித்தார்கள். [15] போருக்குப் பிறகு, ஏதெனியர்களும், எசுபார்த்தன்களும் போரைத் தொடர விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக நிசியாஸ் அமைதி உடன்பாடு கிமு 421 இல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமும் இறுதியில் முறிந்தது. துசிடிடீஸ் ஆம்பிபோலிசைப் பாதுகாக்கத் தவறியதற்காக நாடு கடத்தப்பட்டார், இதனால் அவர் நேரடியாகப் போரில் கலந்து கொள்வது முடிவுக்கு வந்தது.
ச. கௌகௌலி-கிரிசாந்தகி ஆம்பிபோலிசில் நடத்திய மூன்று தசாப்தகால ஆராய்ச்சியில், பண்டைய ஆம்பிபோலிசின் அகோராவில் பிராசிடாஸ் புதைக்கப்பட்டதை கண்டறிந்து மீட்டெடுத்தற்கான சான்றுகளை வழங்குகின்றார். [16] ஆம்பிபோலிஸில் நடத்தப்பட்ட ஒரு தொல்லியல் அகழ்வாய்வில் ஒரு சிறிய கட்டிடத்தின் அடித்தளங்ககள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் பிரசிடாஸ் புதைக்கப்பட்ட உடல் எச்சங்கள் இருப்பதாக நம்பப்படும் எலும்புகளும் தங்க மலர் வளையம் கொண்ட ஒரு கல்லறைத் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. [17] இந்த எலும்புக்கூடு தற்போது ஆம்பிபோலிஸ் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது . [18] இந்தக் கல்லறையானது ஏற்கனவே இருக்கும் ஒரு பாறையில் கொத்தி உருவாக்கபட்ட குழியில், சுண்ணாம்புத் அமைக்கப்பட்டது. [17]
பிளாட்டோவின் அப்பலாஜில், மெய்யியலாளர் சாக்ரடீசு இந்தப் போரில் தானும் ஈடுபட்டதாக கூறுகிறார். [19]
குறிப்புகள்
[தொகு]- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, pp 287–288; Thucydides, 4.78.1.
- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, p. 288; Thucydides, 4.80.5.
- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, p. 288; Thucydides, 4.70.1.
- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, pp 288–290.
- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, pp 291–293.
- ↑ Kagan, Donald (1974), The Archidamian War, p. 293.
- ↑ Thucydides 4.102.1
- ↑ Thucydides 4.104.4-5
- ↑ Thucydides 4.105.1-2
- ↑ Thucydides 4.106.1-2
- ↑ Thucydides 4.106.3-4.107.1:,
- ↑ Thucydides 5.26.5
- ↑ Thucydides. 4.118
- ↑ Thucydides, History of the Peloponnesian War, Book V, XI.
- ↑ Thucydides, History of the Peloponnesian War, Book V, XI
- ↑ Agelarakis 2002 pp. 72-73.
- ↑ 17.0 17.1 Chaido, Koukouli-Chrysanthaki,; P.A. (2002). "Escavating Classical Amphipolis On the Lacedaemonian General Brasidas".
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Amphipolis Museum". பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
- ↑ Plato, ப. 28e.