உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்டர் த தின் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்டர் த தின் மேன்
சுவரொட்டி
இயக்கம்டபிள்யூ. எஸ். வான் டைக்
தயாரிப்புஹன்ட் ஸ்ட்ரோம்பர்க்
திரைக்கதை
  • பிரான்சஸ் குட்ரிச்
  • ஆல்பர்ட் ஹாக்கெட்
இசை
  • ஹெர்பர்ட் ஸ்டோதார்ட்
  • எட்வர்ட் வார்ட்
நடிப்பு
  • வில்லியம் பவல்
  • மிர்னா லாய்
  • ஜேம்ஸ் ஸ்டுவர்ட்
  • எலிசா லாண்டி
  • ஜோசப் கால்லியா
  • ஜெஸ்ஸி ரால்ப்
  • ஆலன் மார்ஷல்
  • டெடி ஹார்ட்
ஒளிப்பதிவுஆலிவர் டி. மார்ஷ்
படத்தொகுப்புராபர்ட் ஜே. கர்ன்
கலையகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
விநியோகம்லோஸ் இன்க்.
வெளியீடுடிசம்பர் 25, 1936 (1936-12-25)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$673,000 (மதிப்பீடு.)[1]
மொத்த வருவாய்$3,165,000 (உலகளாவிய மதிப்பீடு.)[1]

ஆஃப்டர் த தின் மேன் (After the Thin Man, மெலிந்த மனிதனுக்குப் பிறகு) என்பது 1936-ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க நகைச்சுவை மருமத் திரைப்படமாகும். டபிள்யூ. எஸ். வான் டைக் இயக்கிய இப்படத்தில், வில்லியம் பவல் , மிர்னா லாய் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1934-ஆம் ஆண்டு வெளியான த தின் மேன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அமைந்த இத்திரைப்படத்தில், டேஷியல் ஹேமெட்டின் கதாபாத்திரங்களான நிக் மற்றும் நோரா சார்லஸ் ஆகியோராக பவலும், லாயும் நடித்துள்ளனர். இது தின் மேன் திரைப்படத் தொடரின் இரண்டாம் பாகமாகும். இத்திரைப்படத்தில் ஜேம்ஸ் ஸ்டுவர்ட், எலிசா லாண்டி, ஜோசப் கலேயா, ஜெஸ்ஸி ரால்ஃப், ஆலன் மார்ஷல் , டெடி ஹார்ட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை

[தொகு]

புத்தாண்டுக்கு முந்தைய நாள், நிக்கும், நோரா சார்லசும் விடுமுறை முடிந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். பிறகு, நோராவின் உயர்குடி குடும்பத்தினரின் இரவு விருந்திற்கு அந்த இணையர் அழைக்கப்படுகின்றனர். நோராவின் உறவினரான செல்மா லாண்டிஸ், பெண் பித்தனான தன் கணவன் ராபர்ட் மூன்று நாட்களாகக் காணவில்லை என்று நோராவிடம் கூறுகிறாள். நிக்கை அவ்வளவாக விரும்பாத நோராவின் அத்தை கேத்தரின் ஃபாரஸ்ட், ராபர்ட் காணாமல் போனதைப் பற்றி இரகசியமாக விசாரிக்குமாறு அவனிடம் கேட்டுக்கொள்கிறாள். செல்மாவுக்கும் டேவிட் கிரஹாம் என்பவனுக்கும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டு நின்றுபோயிருக்கிறது. அவன் செல்மாவை மறக்க முடியாமல் இருக்கிறான். சில நாட்களுக்கு முன்பு, டேவிட் தனக்கு 25,000 டாலர் கொடுத்தால் செல்மாவை விட்டுப் பிரிந்து செல்வதாக ராபர்ட் கூறியதாக நிக் மற்றும் நோராவிடம் டேவிட் கிரஹாம் தெரிவிக்கிறான்.

ஆஃப்டர் தி தின் மேன் (1936) திரைப்படத்திற்கான விளம்பர அட்டை

ராபர்ட், லிச்சி கிளப் எனப்படும் தரக்குறைவான சீன இரவுவிடுதியில் தங்கி இருந்து, அவ்விடுதியின் நட்சத்திரப் பாடகியும், துள்ளல் ஆட்டக்காரியுமான பாலியுடன் கள்ள உறவில் இருந்து வருகிறான். டேவிட், ராபர்ட்டிற்குக் கொடுக்கவிருக்கும் பணத்தைத் திருட, பாலியும் அவ்விடுதியின் உரிமையாளர்களில் ஒருவரான டான்சரும் திட்டமிடுகின்றனர். பாலியின் சகோதரனான ஃபில் பைர்ன்ஸ் அவளிடமிருந்து மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறான், ஆனால் டான்சர் அவனை வெளியேற்றுகிறான். அதே சமயம், ராபர்ட்டைத் தேடி நிக்கும் நோராவும் அங்கு வருகிறனர். ராபர்ட், செல்மாவிடம் திரும்பி வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று அந்த இணையரிடம் கூறுகிறான். பின்னர், டேவிட் ரகசியமாக ராபர்ட்டைச் சந்தித்து, அவரிடம் பணமாக மாற்றக்கூடிய பிணைப்பத்திரங்களைக் கொடுக்கிறான்.

ராபர்ட் ஃபாரஸ்ட் மாளிகைக்கு வந்து சில ஆடைகளை எடுப்பதுக்கொண்டு திரும்புகிறான், அதிர்ச்சி அடைந்த செல்மா அவனை துப்பாக்கியுடன் பின்தொடர்கிறாள். ராபர்ட் பனிபடர்ந்த இரவில் நடந்து செல்கிறான், அங்கே அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். டேவிட் அங்கு வந்து, செல்மா தன் கையில் துப்பாக்கியுடன் ராபர்ட்டை குனிந்து பார்த்தபடி நிற்பதைக் காண்கிறான். லெப்டினன்ட் ஏப்ராம்ஸ், செல்மாவை முக்கிய சந்தேக நபராகக் கருதுகிறார், மேலும் அவளது பலவீனமான மனநிலை அவரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. செல்மா, தான் துப்பாக்கியால் சுடவே இல்லை என்று கூறுகிறாள். ஆனால் அவள் குற்றவாளி என்று நினைத்த டேவிட் அந்தத் துப்பாக்கியை விரிகுடாவில் வீசிவிட்டதால், அவளது கூற்றை நிரூபிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் குறிப்பு இணைக்கப்பட்ட ஒரு கல்லை நிக், நோராவின் அறையின் சாளரம் வழியாக எறிகிறார். ஃபில் என்பவன் ஒரு முன்னாள் குற்றவாளி என்றும், அவன் பாலியின் கணவன் என்றும் அந்தக் குறிப்பில் உள்ளது. ராபர்ட் பாலிக்குக் கொடுத்த பல காசோலைகளை, அதில் $20,000 மதிப்புள்ள ஒரு காசோலை உட்பட, ஏப்ராம்ஸ் நிக்கிடம் காட்டுகிறார். நிக் அதில் உள்ள கையொப்பங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த $20,000 காசோலை போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிசெய்கிறார்.

ஃபில்லைத் தேடி அவரது விடுதி அறைக்கு நிக்கும், ஏப்ராம்சும் செல்கின்றனர். அங்கு ஃபில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை காண்கிறனர். பின்னர், ஆண்டர்சன் என்ற பெயருடைய ஒருவர் பாலியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மேலே உள்ள குடியிருப்பிலிருந்து ஒட்டுக்கேட்கும் கருவியைப் பொருத்தியிருந்ததை நிக் கண்டுபிடிக்கிறார். நிக் மாடியில் இருக்கும்போது, டான்சர் பாலியின் குடியிருப்புக்குள் நுழைகிறான். நிக், டான்சரை அடித்தளத்திற்கு துரத்திச் செல்கிறான். அப்போது டான்சர் நிக்கைப் பார்த்து சுட்டுவிட்டு தப்பிவிடுகிறான். துப்பாக்கி குண்டுபட்டு பழைய பெட்டி ஒன்று திறக்கிறது. அதில் கட்டடத்தின் துப்புரவுப் பணியாளரான பெட்ரோவின் உடலை நிக் காண்கிறான். பெட்ரோ தன் தந்தையின் தோட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய தோட்டக்காரர் என்று நோரா அடையாளம் காட்டுகிறாள். பெட்ரோ கொல்லப்படுவதற்குச் சற்று முன்பு, கட்டடத்திலிருந்து யாரோ நிக்கை அழைக்க முயன்றதாக ஏப்ராம்ஸ் கூறுகிறார்.

ஏப்ரம்சின் உதவியுடன் நிக், சந்தேக நபர்கள் அனைவரையும் ஆண்டர்சன் குடியிருப்புக்கு வரவழைக்கிறான். அனைவரிடமும் நிக் சில கேளவிகளை கேட்கிறான். அப்போது டான்சரும் பாலியும், ராபர்ட்டின் பணத்தைத் திருடுவதற்காக ஒரு போலி காசோலையைப் பயன்படுத்தும் தங்கள் திட்டத்தை ஒப்புக்கொள்கிறனர், ஆனால் கொலைக் குற்றத்துக்கும் தாங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒவ்வொருவரும் கூறுகிறனர். டேவிட், தான் ஆறு ஆண்டுகளாக பெட்ரோவைப் பார்க்கவில்லை என்றும், ஆனால் அவனது நீண்ட வெள்ளை மீசையை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறுகிறான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பெட்ரோவின் ஒளிப்படத்தைப் பார்த்த நிக், அப்போது அவனுக்குக் குட்டையான கருமையான மீசை இருந்ததைக் கண்டு, டேவிட் பொய் சொல்கிறான் என்பதை புரிந்துகொள்கிறான்.

செல்மாவைத் தன்னிடம் இருந்து பிரித்ததற்காகப் பழிவாங்கும் நோக்கில் ராபர்ட்டைக் கொன்ற டேவிட்தான் ஆண்டர்சன் என்பதை நிக் வெளிப்படுத்துகிறான். பாலியின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்காக அவன் மேல்மாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்தான். ஒரு தற்காலிக ஏணியைப் பயன்படுத்தி அவளது குடியிருப்புக்குள் இறங்கி, ராபர்ட்டைக் கொன்று, குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரங்களை வைக்கும் நோக்கத்தில் அவன் இருந்தான். பழுதுபார்க்கும் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது, டேவிட்டின் கருவிகளைப் பெட்ரோ கண்டுபிடித்து நிக்கை அழைத்தான். அந்தத் தொலைபேசி அழைப்பைக் கேட்ட டேவிட், பெட்ரோவைக் கொன்றான். ஃபாரஸ்ட் மாளிகைக்கு வெளியே டேவிட் ராபர்ட்டைக் கொல்வதைக் கண்ட ஃபில், டேவிட்டை மிரட்ட முயன்றான். அதனால், டேவிட் ஃபில்லைக் கொன்று, கவனத்தைத் திசை திருப்புவதற்காக அந்தக் குறிப்பை நிக்கின் அறையின் சாளரம் வழியாக உள்ளே எறிந்தான்.

தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்காக செல்மாவை வெறுத்ததால், ராபர்ட்டின் கொலைக்கு அவள் மீது பழி சுமத்தத் திட்டமிட்டிருந்ததாக டேவிட் ஒப்புக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவன் துப்பாக்கி ஒன்றை எடுத்து, செல்மாவைச் சுட்டுவிட்டுப் பிறகு தன்னையும் சுட்டுக்கொள்வதாக மிரட்டுகிறான். கிளப்பில் டான்சரின் கூட்டாளியான லும் கீ, தனது தொப்பியை டேவிட்டின் முகத்தில் வீசி, டேவிட் நிலைகுலைய வைக்கிறான். இது நோராவை ஆச்சரியப்படுத்துகிறது, ஏனெனில் லும் கீயின் சகோதரன் வங்கிக் கொள்ளைக்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டதற்கு நிக்தான் காரணம். ஆனால், தனக்குத் தன் சகோதரனைப் பிடிக்காது என்றும், அவனது காதலியைப் பிடிக்கும் என்றும் லும் கீ ஒப்புக்கொள்கிறான்.

நிக்ககும் நோராவும், செல்மாவுடன் தொடருந்தில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படுகிறனர். பின்னர், நோராவுடன் தனித்திருக்கும்போது, அவள் ஒரு குழந்தையின் காலுறையைப் பின்னிக்கொண்டிருப்பதை நிக் கவனிக்கிறான். மேலும், மிகுந்த வியப்புடன், அவள் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்துகொள்கிறான்.

தயாரிப்பு

[தொகு]

இப்படத்தின் கதையை, டாஷியல் ஹேமெட் ஒரு குறிப்பிட்ட புதினத்தையோ அல்லது சிறுகதையையோ அடிப்படையாகக் கொள்ளாமல், தனது கதாபாத்திரங்களான நிக் மற்றும் நோராவை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். ஆல்பர்ட் ஹாக்கெட் மற்றும் ஃபிரான்சஸ் குட்ரிச் ஆகியோர் மூலத் திரைக்கதையை எழுதினர்.

நிக் மற்றும் நோரா கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆறு முழு நீளத் திரைப்படங்களில் இது இரண்டாவது ஆகும்.

வரவேற்பு

[தொகு]

இந்தத் திரைப்படம் 1937 ஆண்டு சிறந்த எழுத்து, திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [2] விமர்சனத் தொகுப்பு இணையதளமான அழுகிய தக்காளிகள் 27 தொழில்முறை விமர்சகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இப்படத்திற்கு 96% மதிப்பெண்ணையும், சராசரியாக 10க்கு 7.65 என்ற தரவரிசையையும் வழங்கியது. [3]

ஆஃப்டர் தி தின் மேன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மொத்தம் $3,165,000 வசூலித்தது: இதில் அமெரிக்கா, கனடாவிலிருந்து $1,992,000 இம், மற்ற இடங்களிலிருந்து $1,173,000. கிடைத்தது. இப்படம் $1,516,000 லாபத்தை ஈட்டியது.

வானொலி தழுவல்

[தொகு]

ஆஃப்டர் தி தின் மேன் -இன் ஒரு மணி நேர வானொலித் தழுவல் 1940 சூன் 17 அன்று சிபிஎஸ் லக்ஸ் ரேடியோ தியேட்டரில் ஒலிபரப்பானது. இதில் பவல் மற்றும் லாய் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்று நடித்தனர். [4]

வீட்டு ஊடகம்

[தொகு]

ஆஃப்டர் தி தின் மேன் திரைப்படம் 26 ஜனவரி 2021 அன்று வார்னர் ஆர்கைவ் கலெக்‌ஷனால் நீலக்கதிர் வட்டில் வெளியிடப்பட்டது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Sedgwick, John (2000). Popular Filmgoing in 1930s Britain: A Choice of Pleasures. University of Exeter Press. ISBN 9780859896603.
  2. "After the Thin Man". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். Retrieved November 13, 2025.
  3. "After the Thin Man". அழுகிய தக்காளிகள். Fandango Media. Retrieved June 28, 2019.
  4. "Those Were the Days". Nostalgia Digest. Vol. 43, no. 1. Winter 2017. p. 39.
  5. "Warner Archive Press Release: After The Thin Man (1936) (Blu-ray)". Home Theater Forum. December 11, 2020. Retrieved December 27, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்டர்_த_தின்_மேன்&oldid=4527278" இலிருந்து மீள்விக்கப்பட்டது