ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பு (Democratic Women's Organisation of Afghanistan) என்பது 1965இல் ஆப்கானித்தானில் நிறுவப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பாகும். இது ஆப்கானித்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு அங்கமாக இருந்தது.[1] ஆப்கானித்தானில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது

அறக்கட்டளை[தொகு]

ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பானது காபுலில் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அனாகிதா ரதேப்சாத், சொரையா பெர்லிகா, கோப்ரா அலி, அமிதா செர்சாய், மொமினா பசீர், ஜமீலா கேத்மந்த் ஆகியோரால் நிறுவப்பட்டது. அனாகிதா ரதேப்சாத் 1965-1986 வரை இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

1978 க்கு முன்[தொகு]

ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பானது பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெண்களை ஏற்பாடு செய்தது. இவை 1964 அரசியலமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டன. பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் பெண்களின் ஆர்ப்பாட்டங்களையும் இவர்கள் ஏற்பாடு செய்தனர். இது ஆப்கானித்தானில் முதல் முறையாக நடந்தது. 1968ஆம் ஆண்டில், பாராளுமன்றத்தின் பழமைவாத உறுப்பினர்கள் பெண்கள் வெளிநாட்டில் படிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தபோது, இந்த அமைப்பு ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இது அரசியலமைப்பில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. அவர்களின் போராட்டத்தின் விளைவாக பரிந்துரைக்கப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தால் திரும்பப் பெறப்பட்டது. 1970ஆம் ஆண்டில், காபுலில் பல தாக்குதல்கள் நடந்தன. அடிப்படைவாத முல்லாக்கள் பெண்கள் நவீன மேற்கத்திய ஆடை அணிந்து தெருக்களில் நடப்பதைக் கண்டித்தனர். இவ்வகையான ஆடைகளை அணிந்த பெண்களை ஆண்கள் தாக்கினர். சிலர் பெண்கள் மீது அமிலத் தாக்குதலையும் மேற்கொண்டனர். இந்த அமைப்பு 5000 பெண்கள் கலந்து கொண்ட ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது. குற்றவாளிகளை கைது செய்து விசாரிக்கக் கோரியது. இதன் விளைவாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தாக்குதல்களின் விசாரணை நடந்தது .

பொதுவுடைமை சகாப்தம்[தொகு]

1978 சௌர் புரட்சிக்குப் பிறகு ஆப்கானித்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, ஆப்கானித்தான் ஜனநாயகக் குடியரசில் ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. "சௌர் புரட்சியின்" கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக போராடுவதே ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பின் முதன்மையான குறிக்கோள் என்று அனாகிதா ரதேப்சாத் அறிவித்தார். 1979க்கும் 1980க்கும் இடையில் இந்த அமைப்பு ஆப்கான் பெண்களின் மக்கள் அமைப்பு என்று அழைக்கப்பட்டது. அமைப்பு ஜானான்-இ-ஆப்கானித்தான் (ஆப்கானித்தானின் பெண்கள்) தனது சொந்த மாத இதழை வெளியிட்டது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து வயதினருக்கும் வகுப்புகளுக்கும் பெண்களுக்குக் கல்வி கிடைக்கச் செய்வதற்கும், சௌர் புரட்சியின் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவிப்பதற்கும் அமைப்பு ஒரு எழுத்தறிவு பிரச்சாரத்தைத் தொடங்கியது. 1981ஆம் ஆண்டில் அமைப்பு பத்தொன்பது மாவட்டங்களில் உள்ளூர் அலுவலகங்கள், ஏழு நகராட்சி குழுக்கள் மற்றும் 209 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது. அதன் முக்கிய செயல்பாடு புரட்சிக்கு ஆதரவாக அமைப்பின் மூலம் பெண்களை கட்சிக்கு ஈர்ப்பதாகும்.

பொதுவுடைமை ஆட்சியின் போது, ஆயிரக்கணக்கான நகர்ப்புற பெண்கள் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பு மற்றும் இராணுவ வீரர்களாக பணியமர்த்தப்பட்டனர். மேலும் இராணுவப் போர் பயிற்சியையும் மேற்கொண்டனர்.[2]

1990 ல், ஆப்கானித்தானின் ஜனநாயக பெண்கள் அமைப்பு ஒழிக்கப்பட்டது, ஏனெனில் அது குடியரசுத் தலைவர் நஜிபுல்லா ஆட்சியிலிருந்த காலத்தில் மிகவும் மார்க்சிய அரசியல் என்று கருதப்பட்டது. அவர் இசுலாமிய எதிர்ப்பை சமாதானப்படுத்த விரும்பினார். எனவே இசபை என மாற்றப்பட்டது. இது இலாப நோக்கற்ற மிகவும் அரசியலற்ற பெண்கள் அமைப்பாக இருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moghadam, Valentine M. Modernizing Women: Gender and Social Change in the Middle East. Boulder, CO: Lynne Rienner Publishers, 1993.
  2. Afghanistan under Soviet Domination, 1964–91
  3. Valentine Moghadam: From Patriarchy to Empowerment: Women’s Participation, Movements, and Rights