ஆன்மவாதம்
ஆன்மவாதம் அல்லது உயிர்ப்பொருள் வழிபாடு (Animism) என்பது தாவரங்கள், உயிரற்ற பொருள்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகளுக்கு ஒரு உயிருள்ள ஆன்மாவைக் கற்பிப்பதாகும். மேலும் பொருள்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு தனித்துவமான ஆன்மீக சாரத்தைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையாகும். விலங்குகள், தாவரங்கள், பாறைகள், ஆறுகள், வானிலை அமைப்புகள், மனித கைவேலைப்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சொற்கள் ஆன்மவாதம் ஆகும்[1].மேலும் பௌதீகப் பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்து உயிரூட்டும் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் மீதான நம்பிக்கை ஆகும்.
இயற்கை சார்ந்த ஆன்மவாதிகள் உண்மையில் ஆவிகள் அல்லது கடவுள்களை நம்புவதில்லை; மாறாக ஆன்மவாதத்தை ஒரு சட்டமாகவும், உலகக் கண்ணோட்டமாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களின் நிலப்பரப்பு மற்றும் அதன் தாவரங்கள், விலங்குகள், மலைகள், ஆறுகள், நாட்டுப்புறக் கதைகளுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்குகிறார்கள்[2].
உயிர்ப்பொருள் வழிபாடு என்பது பலவிதமான மதங்களிலும், தத்துவங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான நம்பிக்கை. உயிர்ப்பொருள் வழிபாட்டை நம்புபவர் அல்லது அதைப் பின்பற்றுபவர் உயிர்ப்பொருள் வழிபாட்டாளர் எனப்படுகிறார். உயிர்ப்பொருள் வழிபாடு என்பது, காணக்கூடிய மற்றும் தொடக்கூடிய பௌதீகப் பொருட்களைத் தவிர, இயற்கையில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன என்ற நம்பிக்கையாகும்.
பௌதீகமற்ற பகுதிகளாக ஆன்மா, உயிர் சக்தி அல்லது ஆவி என்றும் அழைக்கலாம். பௌதீகப் பொருட்கள் இரண்டு வகைப்படும்: உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை. விலங்குகளும், தாவரங்களும் உயிருள்ளவை. பெரும்பாலான உயிர்ப்பொருள் வழிபாட்டாளர்கள் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் ஒரு ஆவி இருப்பதாக நம்புகிறார்கள்.[1] சில உயிர்ப்பொருள் வழிபாட்டாளர்கள் இயற்கையின் சில உயிரற்ற பகுதிகளுக்கும் ஆவிகள் இருப்பதாக நம்புகிறார்கள்[1]. இயற்கையின் இந்த உயிரற்ற பகுதிகளில் காற்று, மழை மற்றும் மலைகள், ஆறுகள் போன்ற புவியியல் அம்சங்கள் அடங்கும்.
"உயிர்ப்பொருள் வழிபாடு" (Animism), மற்ற மத நம்பிக்கை அமைப்புகளைப் போன்றது அல்ல. உயிர்ப்பொருள் வழிபாடு வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்டது அல்ல. உயிர்ப்பொருள் வழிபாடு என்ற கருத்தியல் ஐரோப்பிய மானுடவியலாளர்களின் ஒரு கருத்தாகும்.
உயிர்ப்பொருள் வழிபாட்டை முதன்முதலில் விவரித்த மானுடவியலாளர் எட்வர்ட் பி. டெய்லர் (Edward Burnett Tylor) ஆவார்.[1] டெய்லர், உலகம் முழுவதும் உள்ள பல தொல்குடி குழுக்களிடையே உள்ள ஒற்றுமைகளை விவரிக்க முயன்றார். "உயிர்ப்பொருள் வழிபாடு" என்ற சொல் மிகவும் புதியது: இது முதன்முதலில் 1832ல் பயன்படுத்தப்பட்டது.[3] நமது மூதாதையர்கள் முதன்முதலில் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியதிலிருந்து, அனைத்து மனித சமூகங்களிலும் உயிர்ப்பொருள் வழிபாடு ஒரு மேலாதிக்க மரபாக இருந்து வருகிறது" என்று கூறுகிறது.[4]
ஆன்மவாத வகை
[தொகு]ஆன்மவாதம் எனும் "உயிர்ப்பொருள் வழிபாடு" என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்த அனிமா என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது.[1] அனிமா என்றால் மூச்சு, உயிர் அல்லது ஆவி என்று பொருள். வெவ்வேறு உயிர்ப்பொருள் வழிபாட்டுக் குழுக்களில் வரையறைகள் வேறுபடுகின்றன. சில குழுக்கள் பொருட்களில் உள்ள ஆவியின் காரணமாகவே இயற்கை இயங்குகிறது மற்றும் இடைவினை புரிகிறது என்று நம்புகின்றனர். மற்ற குழுக்கள் இயற்கையில் இயக்கத்தின் ஆவியை விட மேலான ஒன்று இருப்பதாக நம்புகின்றன.[4] இயற்கையில் உள்ள ஆவிகள், மனிதர்களைப் போலவே ஆளுமை கொண்டவை என்று அவர்கள் நம்புகிறார்கள். இயற்கையின் ஆளுமைகள் மற்ற ஆளுமைகளுடன் ஒரு "சமூக உறவைக்" கொண்டிருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மற்ற குழுக்கள் இயற்கையின் ஆளுமைகள் உயிருடன் இருக்கும் மனிதர்களின் இறந்த உறவினர்கள் என்று நம்புகிறார்கள்.[4]
வேறு சில குழுக்கள் ஒரு தனித் தாவரம் அல்லது விலங்கு பல ஆவிகளின் தொகுப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றன. சுருக்கமாக கூறினால் அனைத்து ஆன்மவாதிகளைப் பின்பற்றுபவர்களும் 'ஆவி' என்பதை ஒரே மாதிரியாக வரையறுப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒத்த விஷயங்களையே நம்புகிறார்கள். மனிதர்கள் அல்லாத பல பொருட்களில் ஒரு ஆவி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். மனிதரல்லாத பொருட்கள் அசைவதற்கும், ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதற்கும் இந்த ஆவிகளே காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள்
ஆன்மவாத நம்பிக்கையின் வகைகள்
[தொகு]ஆன்மவாதத்திற்கும் ஒத்த நம்பிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்
[தொகு]ஆன்மவாதம் மற்ற ஒத்த நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இது பெரும்பாலும் மற்ற ஒத்த நம்பிக்கைகளுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது.
முதலாவதாக ஆன்மவாதம் என்பது இயல் உயிர்வாதம் அல்லது இயற்பொருளும் உயிரும் வேறல்ல (Hylozoism) என்ற கோட்பாடு அல்ல. இயல் உயிர்வாதம் என்பது முழு பிரபஞ்சமும் உயிருடன் இருப்பதாகவும், ஒரு ஆவியைப் போன்ற உயிரூட்டும் சக்தியைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. பிரபஞ்சம் உயிருடன் இருப்பதாக ஆன்மவாதம் கூறுவதில்லை. எல்லாப் பொருட்களும் உயிருடன் இருப்பதாக ஆன்மவாதம் நம்புவதில்லை.[4]
இரண்டாவதாக ஆன்மவாதம் அனைத்து மனவாதம் (Panpsychism) அல்ல. அனைத்து மனவாதம் என்பதில் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு மனம் இருப்பதாகவும், அந்த மனத்தன்மையே பிரபஞ்சம் இருப்பதற்கு காரணம் என்றும் கூறுகிறது. சில பொருட்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக ஆன்மவாதம் கூறுகிறது. பொருட்கள் இருப்பதற்கு மனம் இருக்க வேண்டும் என்று ஆன்மவாதம் நம்புவதில்லை.[4]
மூன்றாவதாக ஆன்மவாதம் உயிர்ப்புக்கொள்கை (Vitalism) அல்ல. உயிர்ப்புக்கொள்கை என்பது உயிருள்ள பொருட்களை ஓர் ஆன்மீக மற்றும் உடல்ரீதியான காரணம் இல்லாமல் விளக்க முடியாது என்று கூறுகிறது. உயிருள்ள எல்லாவற்றிற்கும் ஒரு ஆவி இருக்கிறது என்று ஆன்மவாதம் எப்போதும் நம்புவதில்லை. சில சமயங்களில் உயிரற்ற பொருட்களுக்கும் ஆவிகள் இருப்பதாக ஆன்மவாதம் நம்புகிறது.[4][5]
ஆன்மவாதம் - இறைக் கோட்பாட்டு வேறுபாடுகள்
[தொகு]ஆன்மவாதம் பெரும்பாலும் இறைக் கோட்பாட்டுடன் இணக்கமானது. இறைக் கோட்பாடு என்பது தெய்வீகத்தின் மீதான நம்பிக்கை ஆகும். தெய்வீகம் என்பது ஒரே கடவுள் (ஏகத்துவவாதம்), பல கடவுள் கோட்பாடு (பன்மைத்துவவாதம்) அல்லது இருப்பதெல்லாம் இறைவனே (சர்வவியாபகவாதம்) என்பதாக இருக்கலாம்.[6] இறைக் கோட்பாட்டாளர்கள் "கடவுள் காலம் கடந்தவர்", மனித வாழ்க்கையிலிருந்து வேறுபட்டவர் என்று நம்புகிறார்கள். இருப்பினும் ஆன்மவாதம் ஏகத்துவவாதமும் அல்ல, பன்மைத்துவவாதமும் அல்ல. ஆன்மவாத நம்பிக்கையின் ஆவிகள் காலம் கடந்தவை அல்ல. அதனால்தான் மனிதர்கள் அவற்றுடன் தொடர்பு கொள்கிறார்கள்.[4] மேலும் ஆன்மவாதம் சர்வவியாபகவாதமும் அல்ல. ஆன்மவாதத்தின் ஆவிகள் அனைத்தும் ஒன்றல்ல (ஒருமைவாதம்), மாறாக ஆவி கொண்ட ஒவ்வொரு பொருள்களும் தனித்துவமானவை.
பழைய ஆன்மவாதம் & புதிய ஆன்மவாதம்
[தொகு]ஆன்மவாதம் என்பது மானுடவியலாளர்களால் விவரிக்கப்பட்ட ஒரு கருத்து, ஆன்மீகவாதிகளைப் பற்றியது அல்ல. மானுடவியலாளர்கள் ஆன்மவாதத்தைப் பற்றி ஆய்வு செய்தபோது, அதை எவ்வாறு விவரிப்பது என்பது குறித்த தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். இதன் பொருள் ஆன்மவாதத்தின் முதல் வரையறை தற்போது "பழைய ஆன்மவாதம்" என்று அழைக்கப்படுகிறது.
முதல் வரையறை 1800-களில் எர்ன்ஸ்ட் ஸ்டாலால் (Ernst Stahl) வழங்கப்பட்டது. இருப்பினும், எட்வர்ட் டைலர் உலகின் பிற பகுதிகளில் உள்ள மத நம்பிக்கைகளுக்குப் பயன்படுத்த அவரது சொல்லைக் கடன் வாங்கினார்.[4] இந்த நம்பிக்கைகள் டைலர் நம்பியவற்றிலிருந்து வேறுபட்டதாகவும் பழமையானதாகவும் இருந்தன. அவை வேறுபட்டவையாகவும் பழமையானவையாகவும் இருந்ததால், டைலர் தனது நம்பிக்கைகள் ஆவி வழிபாட்டு நம்பிக்கைகளிலிருந்துதான் வளர்ந்திருக்க வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து மக்கள் குழுக்களும் இந்த வழியில்தான் வளர்ச்சி அடைகின்றன என்றும் அவர் வாதிட்டார். மக்கள் உலகின் மீதான மத விளக்கங்களிலிருந்து அறிவியல் விளக்கங்களுக்கு மாறுகிறார்கள் என்பதே அவர் முன்மொழிந்த முக்கிய மாற்றம். இது மானுடவியலில் சமூகப் பரிணாம அணுகுமுறை என்று அழைக்கப்பட்டது.[4] 1920-களிலிருந்து இது மானுடவியலாளர்களிடையே பிரபலமாக இல்லை.[4]
தற்போது மானுடவியலாளர்கள் ஆவி வழிபாட்டை உலகத்தை விளக்கும் ஒரு வழியாகக் கருதுவதை நிறுத்திவிட்டனர். ஆவி வழிபாடு என்பது உலகத்துடன் உறவுகொள்வதற்கான ஒரு வழியாக விவரிக்கப்படுகிறது. பழைய ஆவி வழிபாடு அறியப்படாதவற்றை விளக்கியது, ஆனால் புதிய ஆவி வழிபாடு மனிதரல்லாதவற்றுடன் உறவுகளை உருவாக்குகிறது.[4] வரையறைகளில் இந்த மாற்றம் பெரும்பாலும் ஆல்ஃபிரட் இர்விங் ஹாலோவெல் (Alfred Irving Hallowell) என்பவரால் சாத்தியமானது. ஹாலோவெல் 1930-களில் வட அமெரிக்காவின் பெரன்ஸ் ரிவர் ஓஜிப்வே எனும் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்தார். அவர் அவர்களுடன் வாழ்ந்தார். எல்லா நேரங்களிலும் எல்லாப் பொருட்களிலும் ஒரு ஆவி இருப்பதாக ஓஜிப்வே மக்கள் நினைப்பதில்லை என்பதை அவர் அறிந்துகொண்டார். ஒவ்வொரு கேள்விக்கும் ஆவிகள்தான் விளக்கம் அளிக்கின்றன என்று அவர்கள் நம்புவதில்லை. மாறாக மனிதர்களுடன் நபர்களைப் போல தொடர்பு கொள்ளும் பொருட்களின் ஆவிகளே உள்ளன. ஓஜிப்வே மக்களுக்கு ஆவி வழிபாடு என்பது உறவுகளைப் பற்றியது. இந்த புதிய ஆவி வழிபாட்டைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, அதையும் நம்புவதுதான் என்று ஹாலோவெல் கூறியுள்ளார்.[4] ஆவி வழிபாட்டின் இந்த வரையறையைத்தான் இன்றைய மானுடவியலாளர்கள் எழுதி வருகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Swancutt, Katherine (2019-06-25). "Animism" (in en). Cambridge Encyclopedia of Anthropology. https://www.anthroencyclopedia.com/entry/animism.
- ↑ animism
- ↑ "Definition of ANIMISM". www.merriam-webster.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-11.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 Smith, Tiddy. "Animism". Internet Encyclopedia of Philosophy (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 2161-0002. Retrieved 2022-11-11.
- ↑ "Pantheism Explained". Learn Religions (in ஆங்கிலம்). Retrieved 2022-11-11.
- ↑ "PBS Faith and Reason Glossary". www.pbs.org. Retrieved 2022-11-11.