உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்த லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த லால்
Ananda Lal
2016 ஆம் ஆண்டில் ஆனந்த லால்
பிறப்புஆனந்த லால்
1955 (அகவை 7071)
கொல்கத்தா, இந்தியா
அறியப்படுவதுநாடகம்
பெற்றோர்புருசோத்தம லால்
சியாமாசிறீ தேவி
வாழ்க்கைத்
துணை
சுவாதி லால்
பிள்ளைகள்2
உறவினர்கள்சிறீமதி லால் (சகோதரி)
காளிதாசு நாக் (தாய்வழி தாத்தா)
வலைத்தளம்
https://kolkatatheatre.com/

ஆனந்த லால் (Ananda Lal) (பிறப்பு 1955) ஓர் இந்தியக் கல்வியாளரும் நாடக விமர்சகரும் ஆவார். இவர், 1958-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டதும் இந்தியாவின் மிகப் பழமையான படைப்பு இலக்கியப் பதிப்பகங்களில் ஒன்றுமான 'எழுத்தாளர்கள் பட்டறை' அமைப்பின் நிறுவனரான புருசோத்தம லால் அவர்களின் மகன் ஆவார்.[1][2][3] கல்கத்தாவில் உள்ள இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், இரவீந்திரநாத் தாகூர் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். தற்போது இவர் அப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது கொல்கத்தா தியேட்டர் இணையதளத்திற்காக எழுதி வருகிறார்.[4] தற்போது ரைட்டர்சு ஒர்க்‌சாப்பு என அழைக்கப்படும் எழுத்தாளர்கள் பட்டறை அமைப்பைத் தலைமையேற்று நடத்தி வருகிறார். வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தி டைம்சு ஆப் இந்தியா கொல்கத்தா பதிப்பு நாளிதழின் நாடக விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார். இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், ஆங்கிலத் துறையின் சார்பில் மாணவர்களையே நடிகர்களாகவும் தொழில்நுட்பக் குழுவினராகவும் கொண்டு பல நாடகங்களை இயக்கியுள்ளார்.[5]

இவரது நூல்களில் "ஆங்கிலத்தில் இந்திய நாடகம்:தொடக்கங்கள்" (2019), "இந்திய நாடகத்திற்கான ஆக்சுபோர்டு துணைநூல்" (நாடகத்துறையில் அப்பொருள்பற்றிய அமைந்த முதல் மேற்கோள் நூல்), இரவீந்திரநாத் தாகூர்: மூன்று நாடகங்கள் (1987 மற்றும் 2001) ( தாகூரின் நாடகங்கள் குறித்து ஆங்கிலத்தில் வெளியான முதல் முழுமையான ஆய்வு நூல்), "இந்தியாவின் நாடகக்கலைகள்" (2009), "நாட்டுப்புறக் கதையில் ஒரு திருப்பம்" (2004), "கொல்கத்தா மேடையில் சேக்சுபியர்" (2001) மற்றும் "இரசா: இந்திய நிகழ்த்துக்கலைகள்" (1995) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.[6] தற்போது கொல்கத்தா தியேட்டர் என்ற பெயரிலான ஓர் இணையதளத்தை இவர் நடத்தி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

1955-ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில், பி.லால் மற்றும் சியாமாசிறீ தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர், புனித சவேரியார் பள்ளி, அக்காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த பிரசிடென்சி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். கலைஞரும், கவிஞருமான சிறீமதி லால் இவரது இளைய சகோதரி ஆவார்.[7]

தொழில்

[தொகு]

ஆனந்த லால் கொல்கத்தாவில் உள்ள இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கு முன்னதாக, அதே பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறையிலும் (1991–93), கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையிலும் (1989–91), இலினொய் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையிலும் (1981–86) கற்பித்துள்ளார். கேம்பிரிட்ச்சு உறுப்பினராகவும் (1994) புல்பிரைட்டு உறுப்பினராகவும் (2005) திகழ்ந்த இவர், அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, ஆத்திரேலியா மற்றும் இந்தியாவிலும் பரவலாகச் சொற்பொழிவாற்றியுள்ளார்.

"இந்தியா டுடே: ஓர் கலைக்களஞ்சியம்", "சமகால இந்தியாவைப் புரிந்துகொள்ளுதல்", "இந்தியக் கலைக்களஞ்சியம்" (சார்லசுசிக்ரிப்னர்சு, 2005), "நாடகம் மற்றும் நிகழ்த்துகலைக்கான ஆக்சுபோர்டு கலைக்களஞ்சியம்" (2003), "இருபதாம் நூற்றாண்டு நாடகத்திற்கான தொடர்ச்சித் துணைநூல்" (2002), மைக்ரோசாப்ட் என்கார்ட்டா கலைக்களஞ்சியம் (குறுந்தகடு பதிப்பு, 2000), "ஆங்கிலத்தில் பின்-காலனித்துவ இலக்கியங்களின் கலைக்களஞ்சியம்" (ரவுட்லெட்ச்சு, 1994, 2005) மற்றும் "நாடகத்தின் திறனாய்வு ஆய்வு" (சேலம், 1986) போன்ற மதிப்புமிக்க சர்வதேசக் குறிப்புதவித் திட்டங்களுக்கு இவர் கட்டுரைகளை வழங்கியுள்ளார். பல்வேறு நூல்களிலும் ஆய்விதழ்களிலும் 40-எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், இந்தியச் செய்தித்தாள்களிலும் பருவ இதழ்களிலும் 1000-எண்ணிக்கைக்கும் மேற்பட்ட விமர்சனங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இரவீந்திரநாத் தாகூரின் குரல் பதிவுகளைக் கொண்ட, இந்துசுத்தான், 1997 எனும் தலைப்பிலான ஒரு குறுந்தகட்டை இவர் கருத்தாக்கம் செய்து, அதற்கான முன்னுரை, விளக்கவுரை மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட உரைகளை வழங்கியுள்ளார். வங்கமொழி கவிதைகளை மொழிபெயர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர், ஆக்சுஃபோர்டு தாகூர் மொழிபெயர்ப்புகள் திட்டத்திற்குப் பங்களிப்பதோடு, சிபானந்த தாசின் படைப்புகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ஆங்கிலத் துறையின் முதுகலை பாடத்திட்டத்தில் 'மொழிபெயர்ப்பியல்' எனும் பாடத்தை கற்பித்துள்ளார்.

முப்பது நாடகத் தயாரிப்புகளை லால் இயக்கியுள்ளார். இவற்றில் பல, இயாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்காக இயக்கப்பட்டவை ஆகும். அங்கு இவர் ஆங்கிலத் துறை மாணவர்களுக்கான விருப்பப் பாடமாகிய 'நாடகப் பயிற்சி' எனும் பாடத்தைக் கற்பித்தார். மேலும், டிம் சப்பிள் இயக்கிய சர்வதேசப் புகழ்பெற்ற படைப்பான நடுவேனிற்கால இரவின் கனவு உட்பட, வேறு இருபது நாடகத் தயாரிப்புகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் திரைக்கதை ஆசிரியர், ஆய்வாளர், விமர்சகர், வர்ணனையாளர் மற்றும் வசன வரிகள் அமைப்பாளர் என முப்பது ஆண்டுகாலப் பணி அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் பிபிசி, ரேடியோ நெதர்லாந்து மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு-தூர்தர்சன் ஆகிய நிறுவனங்களால் இவர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளார்.

முனைவர் லால், கல்கத்தாவின் முன்னணி நாடக விமர்சகர் ஆவார். 1986 முதல் 2018 வரை தி டெலிகிராஃப் இதழில் நாடகம் குறித்த தொடர் பத்தியை எழுதி வந்தார்; அதன் பிறகு தி டைம்சு ஆஃப் இந்தியா இதழுக்காக எழுதி வருகிறார். 2000-ஆம் ஆண்டில், இந்திய நாடக அகாதமியால் சிறந்த நாடக ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Writers' Workshop completes 50 years of literary glory". The Indian Express. 4 October 2008. http://www.indianexpress.com/news/writers-workshop-completes-50-years-of-lite/369360/.
  2. "P Lal and the Writer's Workshop story". Business Standard. 9 November 2010. http://www.business-standard.com/india/news/nilanjana-s-roy-p-lalthe-writer%5Cs-workshop-story/414127/.
  3. "City remembers a great scholar & human". The Times of India. 14 November 2010 இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104122306/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-14/kolkata/28213705_1_purushottama-lal-chinmoy-guha-english.
  4. Chakraborty, Shamayita (12 March 2018). "Theatre education is almost missing in India: Ananda Lal". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/theatre/theatre-education-is-almost-missing-in-india-ananda-lal/articleshow/63269494.cms.
  5. "Biblio-beauties". Mint. 9 December 2010. https://www.livemint.com/2010/12/09191359/Bibliobeauties.html.
  6. Santhanam, Kausalya (15 October 2004). "All about Indian Theatre". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 January 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050126101045/http://www.hindu.com/fr/2004/10/15/stories/2004101502590400.htm. பார்த்த நாள்: 28 September 2010.
  7. Joshi, Ruchir (28 November 2010). "BEYOND THE ORDINARY - The calligrapher of Calcutta-45". The Tribune.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_லால்&oldid=4501835" இலிருந்து மீள்விக்கப்பட்டது