ஆனந்ததாண்டவபுரம்
ஆனந்ததாண்டவபுரம் (Ananthathandavapuram) தமிழ்நாட்டில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே வடக்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 3587 ஆகும். இவர்களில் பெண்கள் 1852 பேரும் ஆண்கள் 1735 பேரும் உள்ளனர். இவ்வூரின் மொத்த பரப்பளவு 550.33 ஹெக்டேர். இவ்வூர் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்படதாகும். நாடாளுமன்றத் தொகுதியும் மயிலாடுதுறையே.
இவ்வூருக்கு மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேரூந்து வசதி உண்டு. மயிலாடுதுறை சென்னை இரயில்வே மார்கத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன்கோவில் மற்றும் சொக்காயி கோயில் என அழைக்கப்படும் ஆற்காடு அய்யனார் கோயிலும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆற்காடு கிராமத்திலும் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது...[1]
இவ்வூரின் பெருமைகள்
[தொகு]தமிழில் கருநாடக இசைப் பாடல்களை இயற்றி நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மூலம் புகழ்பெற்ற கோபாலகிருஷ்ண பாரதியார் இவ்வூரில் வசித்தவர். இவர் தனது நந்தன் வரலாற்றுக் கீர்த்தனைகளுக்கு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாயிரம் பெற்றார். இவரின் நினைவாக தமிழ் இசை நிகழ்ச்சிகள் ஒவ்வோராண்டும் சிவராத்தரி அன்று இவ்வூரில் நடத்தப்பட்டு வருகிறது.
நவீன தமிழிலக்கியத்திற்கு அருந்தொண்டாற்றிய மணிக்கொடி இதழ்களில் முற்போக்கு சிறுகதைகளை எழுதிய ’மணிக்கொடி எழுத்தாளர்” ஆனை. சூ. குஞ்சிதபாதம் அவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்.[சான்று தேவை]