ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவீவ் தேசிய அருங்காட்சியகம்
Національний музей у Львові імені Андрея Шептицького
Map
அமைவிடம்லிவீவ்
நிறுவியவர்ஆண்ட்ரி செப்தீத்சுக்கி
வலைத்தளம்nml.com.ua/en

லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் உக்ரைனியன்: Національний музей у Львові імені Андрея Шептицького ) என்பது உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும், இந்த அருங்காட்சியகம், உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 1905 ஆம் ஆண்டில் பெருநகர பேராயர் ஆண்ட்ரே செப்தீத்சுக்கி என்பவரால் தேவாலய அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது மற்றும் தொடக்கத்தில் லிவீவ் எக்லெசியாஸ்டிகல் அருங்காட்சியகம் என்று அறியப்பட்ட இது தற்போது அதன் நிறுவனரான செப்தீத்சுக்கி வின் பெயரையே கொண்டு இயங்கி வருகிறது.

வரலாறு[தொகு]

அருங்காட்சியகத்தின் முகப்பு தோற்றம்

இந்த அருங்காட்சியகத்திற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலை மற்றும் புராதன பொருட்களை நன்கொடையாக வழங்கியே ஆண்ட்ரே செப்தீத்சுக்கி இதனை நிறுவியுள்ளார். மேலும் அதனை பராமரிக்கவும் மென்மேலும் பொருட்களை வாங்கி காட்சிப்படுத்தவும் தேவையான நிதியை திரட்டி அருங்காட்சியத்திற்கு வழங்கியுள்ளார். ஒரு ஆடம்பரமான பரோக் மறுமலர்ச்சி கட்டிடக்கலை மிக்க மிகப்பெரும் மாளிகை இந்த பொருள் சேகரிப்புகளை வைக்க வாங்கப்பட்டு அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் ஆட்சியின் கீழ் இந்த அருங்காட்சியகம் உக்ரேனிய கலையின் லிவிவ் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது. அந்த சமயங்களில் இது சோவியத் சோசலிச-யதார்த்தவாத கலைத் துறை என்பது உட்பட ஏழு துறைகளைக் கொண்டு இயங்கி வந்தது. மேலும் மற்ற லிவீவ் அருங்காட்சியகங்களிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளால் "கருத்தியல் ரீதியாக தீங்கு விளைவிப்பவை" என்று பறிமுதல் செய்யப்பட்ட பல பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதன் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்படி சேகரிக்கப்பட்ட உக்ரேனிய சின்னங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளின் துணையோடு இந்த அருங்காட்சியகம் நாட்டில் மிகப்பெரியதாக அறியப்பட்டது.

சோவியத் காலத்தில் லெனின் அருங்காட்சியகம் இருந்த முன்னாள் லிவிவ் தொழில்துறை அருங்காட்சியகத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்டிடத்தில் இப்போது இந்த தேசிய அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. செர்வொனோஹ்ராட்டில் உள்ள நினைவு இல்லங்கள் மற்றும் சோகல்ஷினா அருங்காட்சியகம் ஆகியவை தற்போது இந்த தேசிய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக லிவீவ் ஆந்திரே செப்தீத்சுக்கி தேசிய அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது, இதில் சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் பாதுகாப்புக்காக படைப்புகள் காட்சியிலிருந்து அகற்றப்பட்டன; அவைகளில் போகோரோட்சனி ஐகானோஸ்டாஸிஸ் போன்ற அரிய கலைப்படைப்புகளும் அடங்கும். . [1] [2] புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் கண்காணிப்பாளர், அன்னா நௌரோப்ஸ்கா, இந்த உக்ரேனிய கலாச்சார தொகுப்புகளின் முக்கியத்துவத்தை பின்வருமாறு கூறியுள்ளார்: "இது எங்கள்(உக்ரேனின்) கதை; இது எங்கள் வாழ்க்கை. இந்த சேகரிப்புகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது." [3]

சேகரிப்பு[தொகு]

தற்போது உக்ரேனிய கலை மற்றும் தேசிய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளைக் குறிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 100,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் நான்கு நிரந்தர கண்காட்சிகளைக் கொண்டுள்ளது: அவையாவன,

  • பழைய உக்ரேனிய கலை;
  • பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலான கலை
  • இருபதாம் நூற்றாண்டின் உக்ரேனிய கலை மற்றும்
  • நாட்டுப்புற கலை ஆகியவையாகும். இவற்றில் 1,800 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [2] மேலும் பல தற்காலிக கண்காட்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.

பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுகளின் நடுபகுதி வரையிலான உக்ரேனிய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்  நான்காயிரத்திற்கும் அதிகமான கலீசிய சிலைகள், மரத்தால் செதுக்கப்பட்ட சிலுவைகள், சீருடைகள், சின்னங்கள், சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள் (ஹோரோடிஷ்சே அல்லது புச்சாச் நற்செய்தி உட்பட) உட்பட உக்ரேனின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய மிகப் பெரிய மற்றும் மிக அற்புதமான சேகரிப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. [4] அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் மிகவும் முக்கியமானதாக குறிப்பிடப்படுவது பதினான்கு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான இன்குனாபுலா, புத்தகங்கள், ஷ்வைபோல்ட் ஃபியோல், ஃபிரான்ட்சிஸ்க் ஸ்கோரினா, இவான் ஃபெடோரோவிச் (ஃபெடோரோவ்) திருத்தூதர், ஜாப்லுடோவ் நற்செய்தி (1569), கைவான் குகை படேரிகான் (1703) என்பது போன்ற கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகள், பல்வேறு ஆரம்பகால வரைபடங்கள் மற்றும் செதுக்கல்கள் மற்றும் உக்ரேனிய மற்றும் பிற ஸ்லாவிக் மொழி கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை அடங்கும். பாதிரியார் இல்லரியன் ஸ்விக்கி என்பவர், பாய்கிவ், எம்ஷானெட்ஸ் என்ற கிராமத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியின் தேவாலயத்திலிருந்து சில பழைய சின்னங்களை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல நேரடியாகவே வந்தார் என்பது அதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது.

உக்ரேனிய மறுமலர்ச்சி மற்றும் பரோக் காலங்கள், இவான் ருட்கோவிச் (17 ஆம் நூற்றாண்டின் ஜோவ்க்வா ஐகானோஸ்டாசிஸ்) மற்றும் ஜோவ் கோண்ட்செலிவிச் (போகோரோட்சான்ஸ்கி ஐகானோஸ்டாஸிஸ், 1698-1705) ஆகியோரின் கலை படைப்புகளால் குறிப்பிடத்தகுந்தவையாகும். [2]


இந்த அருங்காட்சியகத்தில் ஜொஹான் ஜியோர்க் பின்செல், இவான் ருட்கோவிச், செர்ஹி வாஸில்கிவ்ஸ்கி, ஆன்டின் மனாஸ்டிர்ஸ்கி , இவான் ட்ரஷ், ஓலேனா குல்ச்சிட்ஸ்கா , மைக்கைலோ போச்சோஹோச், ஜாகோய்வ் ஜாகோய்வோஸோஸ்கோஜ், ஒல்லிக்சா ஹ்ரியுபென்கோ, இலிச் பிலன், ஒலெக்சா நோவாகிவ்ஸ்கி, இவான் ட்ரஷ், ஒலெக்சாண்டர் முராஷ்கோ, தாராஸ் ஷெவ்செங்கோ மற்றும் பல பிரபலமான உக்ரேனிய ஓவியர்களின் படைப்புகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

லிவிவ் தேசிய அருங்காட்சியகத்தில் பல முக்கியமான கலைஞர்களின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன, அவற்றில் ஸ்வீபோல்ட் ஃபியோலின் க்ராகோ வெளியீடுகள் (1491-1493), ஃபிரான்சிஸ்க் ஸ்கரினாவின் ப்ராக் மற்றும் வியன்னா அச்சுப்பிரதிகள் மற்றும் இவான் ஃபெடோரோவின் பெரும்பாலான வெளியீடுகள் ஆகியவைகள் மிகவும் அரிதானவையாகும்,

அறக்கட்டளை[தொகு]

பெருநகர பிஷப் ஆண்ட்ரி ஷெப்டிட்ஸ்கியின் அறிவியல் மற்றும் கலை அறக்கட்டளை தற்போது இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது. கீழ்க்கண்ட அருங்காட்சியகங்கள் இந்த அருங்காட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • ஒலேனா குல்சிட்ஸ்கா நினைவு கலை அருங்காட்சியகம், லிவிவ்
  • ஒலெக்ஸா நோவாகிவ்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம், லிவிவ்
  • லியோபோல்ட் லெவிட்ஸ்கி நினைவு கலை அருங்காட்சியகம், லிவிவ்
  • மைக்கைலோ பிலாஸ் கலை அருங்காட்சியகம், ட்ரஸ்காவெட்ஸ்
  • இவான் ட்ரஷ் நினைவு கலை அருங்காட்சியகம், லிவிவ்
  • சோகல்ஷ்சினா கலை அருங்காட்சியகம், செர்வோனோஹ்ராட்
  • பாய்கிவ்ஷ்சினா கலை அருங்காட்சியகம், சம்பீர்

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சில படைப்புகளின் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lviv National Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Under threat of Russian bombs, Lviv hides away its priceless heritage". 2022-03-12. https://www.bbc.com/news/world-europe-60707531. 
  2. 2.0 2.1 2.2 Hammer, Joshua (5 May 2022). "The Race to Save Ukraine's Sacred Art". Smithsonian Magazine. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.
  3. "At Ukraine's largest art museum, a race to protect heritage". uk.sports.yahoo.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.
  4. Lvivbest.com பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Retrieved on June 13, 2008

வெளி இணைப்புகள்[தொகு]