ஆந்திரப் பிரதேசத்தின் நடன வடிவங்கள்
ஆந்திரப் பிரதேசத்தின் நடன வடிவங்கள் (Dance forms of Andhra Pradesh) என்பது பலவிதமான வண்ணங்களையும், உடைகளையும், வகைகளையும் பெறுகின்றன; மேலும், பல்வேறு அமைப்புகளையும், இசைக்கருவிகளையும் உள்ளடக்கியது. பொதுவாக இது மிகவும் பிரகாசமான மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களை உள்ளடக்கியது.
இந்த நடனங்கள் பெரும்பாலும் பாரம்பரிய இசையுடன் இயற்றப்படுகின்றன. பல நடனங்களில் தலையில் நெருப்புடன் நடனமாடுவது அல்லது மண் பானையில் நடனமாடுவது போன்ற பலவிதமான பாணிகளும் அடங்கும். அவை மிகவும் சுவாரஸ்யமானதும் அற்புதமான பொழுதுபோக்கும் ஆகும்.
விலாசினி நாட்டியம்
[தொகு]விலாசினி நாட்டியம் என்பது ஆந்திரப் பிரதேசத்தில் தேவதாசிகளின் நடன மரபாகும். இது தேவதாசி எதிர்ப்புச் செயலுக்குப் பிறகு அழிவை எதிர்கொண்டது. அதிர்ஷ்டவசமாக மீதமுள்ள சில நடனக் கலைஞர்களால் புத்துயிர் பெற்றது. ஆனாலும் இது இன்னும் இந்தியப் பாரம்பரிய நடன அந்தஸ்தைப் பெறவில்லை.
ஆந்திர நாட்டியம்
[தொகு]ஆந்திர நாட்டியம் என்பது இந்திய மாநிலங்களான ஆந்திராவிலும் தெலங்காணாவிலிருந்தும் தோன்றிய ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். இந்த பாரம்பரிய நடன வடிவம், 2000 வருடங்கள் வரலாற்றைக் கொண்டுள்ளது. முகலாயர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் பின்னடைவைச் சந்தித்து, 20ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. [1]
புர்ராகதை
[தொகு]புர்ராகதை என்பது ஜங்கம் கதை என்று அழைக்கப்படும் நாடகங்களின் புதிய பெயராகும் (இருபதாம் நூற்றாண்டு). ஜங்கங்கள் சிவ வழிபாட்டாளர்களாக அலைந்து கொண்டிருந்தனர்.
புர்ரா என்பது முக்கிய கதைசொல்லியின் இசைக்கருவியான தம்புராவைக் குறிக்கிறது. முக்கிய கலைஞர் தனது இசைக்கருவியை இசைத்துக் கொண்டே ஒரு கதையை விவரிப்பார். அதற்கேற்றவாறு நடனமும் ஆடுவார். சக-கலைஞர்கள் முரசு வாசிப்பார்கள். மேலும், கதை சொல்லியைத் தொடர்ந்து உரையாற்றுவார்கள். மேலும், கதையின் சில நிகழ்வுகளை தங்கள் சிறிய வாக்கியங்களால் மெருகூட்டுவார்கள். இது ஜனபத கலாலுவில் ஒன்றாகும்.
வீரநாட்டியம்
[தொகு]வீரநாட்டியம் என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மிகப் பழமையான நடன வடிவமான இது மத முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கண்கவர் நடன வடிவம் 'வீராங்கம்' எனவும் 'வீரபத்ர நிருத்தியம்' என்றும் அழைக்கப்படுகிறது. 'வீரா' என்ற சொல்லுக்கு வீரம் என்று பொருள். எனவே நடன வடிவத்தின் பெயரே இது துணிச்சலானவர்களின் நடனம் எனபதாகும்.
வீரநாட்டியத்தின் விளக்கம் இந்து புராணங்களில் காணப்படுகிறது. ஒருமுறை சிவபெருமானின் மனைவி சதிதேவி ஒரு விழாவில் அவமானப்படுத்தப்பட்டார். இது அழிவின் கடவுளான சிவனைக் கோபப்படுத்தியது. தனது மனைவி சந்தித்த அவமானத்தால் கோபமடைந்த சிவபெருமான், தனது தலைமுடியிலிருந்து வீரபத்ரனை உருவாக்கியதாக புராணக் கதை கூறுகிறது. சிவன்தீவிர நடனம் மூலம் அவரது தீவிர கோபத்தை சித்தரித்ததாக நம்பப்படுகிறது. இதனால் வீரநடனம் என்ற பெயரை நியாயப்படுத்தினார். அது 'பிராணாயம்' அல்லது அழிவின் நடனம் எனவும் அழைக்கப்படுகிறது.
புட்ட பொம்மலு
[தொகு]ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தணுக்குவில் பிரபலமான ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும். புட்ட பொம்மலு என்றால் "கூடை பொம்மைகள்" எனப் பொருளாகும். இது மர-உமி, உலர்ந்த புல், சாணம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நடனக் கலைஞரும் தலையிலும், தோள்களிலும் வெவ்வேறு முகமூடியை அணிந்து, கலையின் நோக்கத்தை விரிவுபடுத்துவார்கள். மேலும், அசைவுகளுக்கு வண்ணம் சேர்க்கும் சொற்கள் அல்லாத தாளத்திற்கு நடனமாடுவார்கள்.
தோல் பொம்மலாட்டம்
[தொகு]தோல் பொம்மலாட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உருவான பொம்மலாட்டத்தின் ஒரு வடிவமாகும். [2] இது முக்கியமாக காவியங்களில் இருந்து அத்தியாயங்களை சித்தரிக்கிறது.
கூத்துமுறை
[தொகு]ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே, தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும். பாவைகளின் மீது, விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். பாக்கூத்தைக் குடும்பமாத்தான் செய்வார்கள். கூத்தை நடத்துபவர் பலகுரலில் பேசி கூத்து காட்டுபவராகவும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் இசைக் கருவிகளை வாசிப்பவர்களாகவும் இருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து குடும்பத்தோடு கிளம்பி, பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி, மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.
பஞ்சாபி
[தொகு]ஆட்டின் தோலால் ஆன வந்திரதம் போன்ற மேளம் குச்சிகளால் அடிக்கப்படுகிறது. இது 16 முதல் 20 நடனக் கலைஞர்கள் தங்கள் கணுக்காலில் மணிகளைக் கட்டிக் கொண்டு நிகழ்த்துவார்கள். ஜாதகங்கள், திருவிழாக்கள் அல்லது திருமணங்கள் என எந்த ஊர்வலத்தின் முன்பும் இவ்வகை நடனக் கலைஞர்களைப் பார்ப்பது தெலங்காணா வழக்கத்தின் ஒரு பகுதியாகும். நிசாமாபாத் மாவட்டத்தில் கலகலப்பான இந்த கலை வடிவம் இன்றும் தொடர்கிறது. கலைஞர்கள் வண்ணமயமான அலங்காரத்துடன், வண்ணமயமான ஆடைகளை அணிந்து, சங்குகள், கைம்முரசு இணை, ஆர்மோனியம் மூலம் இசைக்கப்படும் இசை வடிவங்களுக்கு நடனமாடுகிறார்கள். புராணக் கருப்பொருள்கள் பொதுவாக இயற்றப்படுகின்றன. மேலும், பார்வையாளர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
தப்பெடா குல்லு
[தொகு]தப்பெடா குல்லு என்பது ஸ்ரீகாகுளம் , விஜயநகரம் மாவட்டங்களில் பிரபலமாக உள்ளது. திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் இந்த நடனத்தில், 15 முதல் 20 துடிப்பான கலைஞர்கள் கழுத்தில் மேளத்தைக் கட்டிகொண்டு இசையமைப்பார்கள்.
லம்பாடி
[தொகு]லம்பாடி நடனம் என்பது அறுவடை செய்தல், நடவு செய்தல், விதைத்தல் போன்ற அன்றாடப் பணிகளுடன் தொடர்புடையது. ஆந்திரப் பிரதேசம் முழுவதும் காணப்படும் அரை நாடோடி பழங்குடியினரான லம்பாடிகளால் இது நடத்தப்படுகிறது. கண்ணாடி மணிகள் கண்ணாடிகள், அலங்கரிக்கப்பட்ட நகைகள், தந்த வளையல்கள், பித்தளைக் கணுக்கால் நகைகள் பூத்தையல் செய்யப்பட்ட ஆடைகள் அணிந்து இந்த நடனத்தை மகிழ்ச்சியின் வண்ணமயமான வெளிப்பாடாக ஆக்குகின்றனர். இது பல பண்டிகை நிகழ்வுகளின் சிறப்பம்சமாகும்.
கோலாட்டம்
[தொகு]'கோலாட்டம்' அல்லது குச்சி நடனம் ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமான நடனக் கதைகளில் ஒன்றாகும். [3] இது கொலன்னாலு அல்லது கொல்கொலன்னாலு என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக கிராமிய திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒரு கிராமிய கலையாகும். கோலாட்டம் என்பது தாள அசைவுகள், பாடல்கள், இசை ஆகியவற்றின் கலவையாகும். இது குசராத்தில் தாண்டியா ராஸ் என்றும் ராஜஸ்தானில் கர்பா என்றும் அழைக்கப்படுகிறது. கோலாட்டக் குழுவில் 8 முதல் 40 வரையிலான நடனக் கலைஞர்கள் குழுவாக ஆடுவார்கள். இதில் குச்சி முக்கிய தாளத்தை வழங்குகிறது. தலைவர் போன்ற இரு கலைஞர்கள் இரண்டு வட்டங்களாக நகர்கிறார்கள். கோலாட்டம் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் பல்வேறு வகையான பொழுதுபோக்குகளை வழங்குகிறது.
கோலாட்டம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கோலன்னா என்றும் அழைக்கப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ Sinha, Aakriti (2006). Let's know dances of India. Star Publications.
- ↑ "Ramayana Casts Its Ancient Spell". https://www.nytimes.com/2010/02/04/arts/04iht-RAMAYANA.html?adxnnl=1&adxnnlx=1266988628-22lYPLxOUn9rOCsHXVoUxA.
- ↑ తెలుగుదనంలో కోలాటం గురించి వ్యాసం.