ஆத்தங்குடி அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தங்குடி அரண்மனை
ஆத்தங்குடி அரண்மனை, மற்றொரு கோணத்திலிருந்து

ஆத்தங்குடி அரண்மனை (Aththangudi Palace) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை அடுத்து அமைந்துள்ள ஆத்தங்குடி என்னும் செட்டிநாட்டுச் சிற்றூரில் அமைந்துள்ள ஓர் அரண்மனையாகும்.

அமைவிடம்[தொகு]

ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இந்த ஊரில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.

அரண்மனைகள்[தொகு]

தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் பகுதிகளில் போன்ற பகுதிகளில் செட்டிநாடு வீடுகள் உள்ளன. அவை அரண்மனையைப் போல் அமைந்துள்ளன. மிகுந்த வேலைப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு அவை புகழ் பெற்றவையாகும். [1]

பொதுக்கூறுகள்[தொகு]

உலகத்தர கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளதாகக் கூறுவர். 80 முதல் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவை புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் எனப்படுகின்ற அந்த அரண்மனைகள் மிகவும் கம்பீரமாக உள்ளன. செட்டிநாடு பகுதியில் நகரத்தார்கள் பல நாடுகளுக்குச் சென்று, கடல் கடந்து வியாபாரம் செய்துள்ளனர். இருந்தபோதிலும் அவர்கள் சொந்த ஊரில், தாம் சென்று வந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்துகொண்டு, உலகத் தரம் அமைந்த கட்டடக்கலையை எதிர் கொள்கின்ற வகையில் மிகப் பெரிய அரண்மனைக் கட்டடங்களை நிர்மாணித்தள்ளனர். அவற்றைக் கட்டுவதற்கு சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவை போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறான கூறுகளே அரண்மனையின் சுவற்றுக்கு பளபளப்பையும், உறுதியையும் தருகின்றன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப்படுவது இப்பகுதியின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. மின்விசிறி இல்லாமல் இதமாக இருக்கும் அளவிற்கு அவை அமைக்கப்பட்டுள்ளன. சில அரண்மனைகளின் முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ., தொலைவிற்கு நடக்க வேண்டிய சூழல் உள்ளது. பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். தரையில் ‘டச்சு’ நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்கள் காணப்படுகின்றன. மேலும் ஆத்தங்குடி டைல்ஸ் எனப்படுகின்ற கற்களையும் அவர்கள் பதித்துள்ளனர். பங்களாவின் உட்புறமேற்கூரையானது சந்திரவட்ட பிறை வடிவில் தேக்கு மரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அவற்றில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பங்கள் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயிலைப் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை ஆன்மிக சுற்றுலாத் தலங்களின் மீதான அவர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தவதோடு, ‘பச்சிலை ஓவியம்’ அவர்களின் ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. தரை தளத்த்தில் சுவற்றில் பொருத்தப்பட்டு அமைக்கப்படுகின்ற ஜப்பான் ‘பூ’ பாணியில் அமைந்த கற்கள் அழகுக்கு மெருகூட்டுகின்றன. அறையின் மேற்கூரையில் தேக்கு மரங்கள் உள்ளன. அவற்றைத் தாங்கும் வகையில் ‘பொருசு’ மர தூண்கள் கம்பீரமாகக் காணப்படுகின்றன. மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள லண்டன் ஓடுகள் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரயம் ஆக்காமல் ஆள் உயர அண்டா போன்ற கிடாரத்தில் சேகரிக்கின்றன. மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். [1]

ஆத்தங்குடி கற்கள்[தொகு]

இப்பகுதியில் கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இவ்வகை ஆத்தங்குடி தரைக் கற்கள் இந்த அரண்மனை அமைந்துள்ள இவ்வூரில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இவை சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகின்றன. இவை, முதலில் வடிவமைக்கப்படுகின்றன. பின்னர் வெயிலில் காய வைக்கப்பட்டு, கண் கவர் கலை வேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வகை வேலைப்பாடுகள் தான் இவ்வோடுகளுக்கு, அதன் தனிச்சிறப்பான கட்டமைப்பைக் கொடுக்கின்றன. [1] பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இந்த வகையான கற்களைக் காண முடியும். [2] செட்டிநாட்டில் ஆத்தங்குடி, அரிமளம், கண்டனூர், காரைக்குடி, கடியாபட்டி, கானாடுகாத்தான், கோட்டையூர், கோனாபட்டு, சிறுகூடல்பட்டி, தேவகோட்டை, பள்ளத்தூர், புதுவயல், ராங்கியம், ராயவரம், வலையபட்டி போன்ற ஊர்களில் கட்டப்பட்டுள்ள அழகிய வேலைப்பாடமைந்த வீடுகளில் இந்த ஆத்தங்குடி தரைக் கற்கள் மட்டுமே பதிக்கப்படுவது வழக்கம். இந்த வகை கற்கள் எட்டு சதுர அங்குலம், பத்து சதுர அங்குலம், பனிரெண்டு சதுர அங்குலம் என்ற மூன்று அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையான கற்கள் இந்த அரண்மனையில் அதிகமாக பொறிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு[தொகு]

நுழைவாயில், ஆத்தங்குடி அரண்மனை

பல வண்ண வடிவங்களால் ஆன டைல்ஸ் கற்களை இந்த அரண்மனையில் காணமுடியும். சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த அளவிலான நீர் உறிஞ்சு திறன், பரிமாண துல்லியம் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட கற்களைக் கொண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. [3] இந்த அரண்மனை சிறிய நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளைக் கடந்து உள்ளே சென்றதும் அரண்மனையில் உள்ள தோற்றத்தைத் தருகின்ற பெரிய செவ்வக வடிவிலான அறை அமைந்துள்ளது. அதன் கோயிலின் அமைப்பைப் போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன. மேல் கூரையில் ரசாயனக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. உள் பகுதியில் செல்லும்போது அங்கே நடுவில் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அதனைச்சுற்றி அமைந்துள்ள கூடத்தின் வலது மற்றும் இடது புறங்களில் பல சிறிய அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அறைக்கும் இடையே ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஜன்னல்களின் மேல் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்த நிலையைத் தாண்டிச் செல்லும்போது அடுத்தள்ள தளத்திலும் இவ்வாறான அமைப்புகள் காணப்படுகின்றன. சுவற்றிலும், கூரையிலும், ஜன்னல்களிலும் பலவித ஓவியங்கள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 சிவகங்கை மாவட்டம், காணத்தக்க இடங்கள்
  2. ஆத்தங்குடி, காரைக்குடி
  3. "ஆத்தங்குடி பேலஸ், காரைக்குடி". Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தங்குடி_அரண்மனை&oldid=3658550" இலிருந்து மீள்விக்கப்பட்டது