ஆதிநாராயண பெருமாள் கோவில், பழவேற்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிநாராயண பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காட்டில்[1] அமைந்துள்ள இந்து சமயக் கோவிலாகும். 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆதிநாராயணப் பெருமாள் கோவில் பழவேற்காட்டின் தொன்மைக்குச் சான்றாகத் திகழ்வது மட்டுமின்றி "கட்டிடக்கலையின் அற்புதம்" என்றும் போற்றப்படுகிறது.[2]

செம்புரைக்கல் (ஆங்கிலம்: laterite stone) விமானம், மண்டபங்கள், புடைப்புச் சிற்பங்கள், சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என்று வியக்கவைத்த இந்தக் கோவில் வளாகம், 15 ஆண்டுகளுக்கு முன்பு, புதர் நிறைந்து பாழடைந்த நிலையில் காணப்பட்டது.[3] [4]

வரலாறு[தொகு]

கி.பி. 300 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை பழவேற்காடு ஒரு பெரிய துறைமுக நகரமாக இருந்துள்ளது. இது சோழர்கள், பாண்டியர்கள், சங்கம் சேரர்கள், பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டிருந்தது. எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவண நூலில், போடூகே (பழவேற்காடு), இந்தியக் கிழக்குக் கடற்கரையிலிருந்த மூன்று துறைமுகங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [5] தாலமியின் தன்னுடைய பண்டைய துறைமுக நகரங்கள் குறித்த பதிவுகளில் போடூகே (பழவேற்காடு) இடம்பெறுள்ளது. [6] 14 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் விஜயநகர பேரரசின் ஆட்சியின் கீழ் இந்நகரம் வந்தது. அப்போது இதற்கு ஆனந்தராயன் பட்டினம் என்று பெயர். கிருஷ்ணதேவராயர் இதன் பெயரை பழவேற்காடு என்று மாற்றினார்.[7] இந்தக் காலகட்டத்தில் ஆதிநாரயணப் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.[2] இகோவிலுக்கு அருகிலுள்ள சமையேசுவரர் (சிவன்) கோவிலும் இதே காலத்தில் செம்புரைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலும் அழிவின் விளிம்பில் உள்ளது. இங்குள்ள படிக்கிணறு (ஆங்கிலம்: Stepwell) கட்டுமானம் தனித்துவமானது. குசராத் மாநிலத்தில் இது போன்ற கலைநயமிக்க படிக்கிணறுகள் பல உள்ளன.[8]

கோவில் அமைப்பு[தொகு]

கருவறைக்கு முன்பு ஒரு சிறு மண்டபம் உள்ளது. கருடன் சிலை மூலவரை நோக்கியவாறு காணப்படுகிறது. இங்கு ஆழகிய இராமன், இலக்குமணன் சீதை சிற்பத்தொகுப்பும் காணப்படுகிறது. தூண்களில் தசாவதாரக் காட்சிகள், நடன மங்கையர், தேவதைகள், பலதலை மனிதன் ஆகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

மூலவர் ஆதிநாரயணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சூழ, சங்கு சக்கரம் ஏந்தி, நின்ற கோலத்தில், காட்சி தருகிறார். தாயார் மற்றும் ஆண்டாள் தனிச் சன்னதிகள் முதன்மை மண்டபத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இவையும் சிதைந்துள்ளன. அர்த்தமண்டபத்தின் குறுக்கு உத்தரங்களின் மீது இராமாயணக் கதை குறுஞ்சிற்பத் தொகுதிகளாக வடிக்கப்படுஉள்ளது. இவை இன்றுவரை நிலைகுலையாமல் உள்ளது.[9] கோவிலைச் சுற்றி அமைந்துள்ள சுற்று மதில் நன்றாக உள்ளது.

கட்டுமானம்[தொகு]

கோவில் விமானத்தின் முழு கட்டுமானமும் செம்புரைக் கல்லால் ஆனது. இது கேரள அரண்மனைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கல் வகை ஆகும். இத்தகைய கற்கள் பொதுவாக மலபார் மற்றும் கொங்கன் கடற்கரையில் காணப்படுகின்றன, ஆனால் தமிழ்நாட்டில் காணப்படவில்லை. எனவே செம்புரைக்கல் கட்டுமான வகை இந்த கோவிலுக்கான தனித்துவத்தை உருவாக்கியுள்ளது.[4]

"செம்புரைக்கல் என்பது நுண்ணிய துளைகள் கொண்ட கல். இதைப் பயன்படுத்தி சிற்பம் செதுக்குவது கடினம். ஆதிநாரயணப் பெருமாளின் விமானம் அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை செம்புரைக்கல் தொகுதிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.[9] மேல்கட்டுமானம் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் வெளிப்புறச் சுவரில் அமைந்த சாலைப் பத்திகளில், கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செம்புரைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. செம்புரைக்கல்லை தமிழ்நாட்டில் காணமுடியாது. பழவேற்காடு துறைமுக நகரமாக திகழ்ந்ததற்கு செம்புரைக் கல்லே சாட்சி" என்று AARDE, எனும் இலாப நோக்கற்ற கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு சேவை அமைப்பைச் சேர்ந்த சேவியர் பெனடிக்ட்.[2][10]

சுமார் 100 முதல் 150 வருடங்களுக்குள் இந்தக் கோவிலில் வழிபாடு இல்லாமல் பாழடையத் தொடங்கியுள்ளது. புதர் மண்டி, கோவில் மண்டபத்தின் கூரைகளில் மரம் வளர்ந்து, பாழடைந்துபோனது.[10] 2007 ஆம் ஆண்டு ஒரு சில தன்னார்வர்கள் பெரிதும் முயன்று புதர் நிறைந்து பாழடைந்த கோவிலின் உள்ளே சென்றுள்ளனர். ஊர் மக்கள், இராமகிருஷ்ணா மடத்தின் ஆதரவுடன், கோவில்களைச் சுற்றியிருந்த புதர்களையும் செடிகொடிகளையும் அகற்றி சீரமைத்தனர். கோவில் வளாகம் சுத்தமான பின்பு மரபு சார்ந்த கட்டிடக்கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்தக் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.[2]

இந்து அறநிலையத்துறையின் திருப்பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு[தொகு]

இந்து அறநிலையத் துறை இக்கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு கோவில் சீரமைபிற்காக ரூ. 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. [10] நுழைவாயில் உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. மூலவர் விமானம், அதன் செம்புரைக் கற்சுவர் ஆகியவை சிமெண்டு பூசியதால் கலையம்சங்கள் சிதைக்கப்பட்டன. கோவிலை புதுப்பிப்பதில் ஒப்பந்ததாரரின் தொழில் தொடர்பற்ற அணுகுமுறை (ஆங்கிலம்: Unprofessional Approach) கண்டு பொது மக்கள் பதற்றம் அடைந்தனர். மரபார்வலர்கள் கண்டனம் எழுப்பினர். ஒருவழியாக சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.[2][10] இரண்டு பழமையான கோவில்களில் அறநிலையத்துறை விதிகளை மீறி மேற்கொண்ட திருப்பணிக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பழமைவாய்ந்த கோவில்கள் என்பதால், கவனமுடன் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. [11][12]

இந்து அறநிலையத்துறையின் கருத்து[தொகு]

நூறு வருடங்களுக்கு முன்னர் சுண்ணாம்புக் காரையைப் பயன்படுத்திக் கோவில் கட்டிய சிற்பிகள் இன்று இல்லை. தற்காலத்தில் சிமெண்டு பயன்படுத்துகிறார்கள். தொல்லியல் துறையினர் மட்டும் பழைய சுண்ணாம்புக் காரையைப் பயன்படுத்துகின்றனர். எனவே தான் சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன என்று இந்து அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.[2][10]

ரீச் அறக்கட்டளையின் கருத்து[தொகு]

கோவில் மரபினைக் பாதுகாக்கும் தொண்டு நிறுவனமானரீச் (Resource group for Education and Advocacy for Community Health.(R.E.A.C.H.) அறக்கட்டளை நிறுவனத்தினர் இக்கோவிலை ஆய்வு செய்தனர். செம்புரைக்கல்லில் சிற்பம் வடிக்கும் திறன்கொண்ட சிற்பிகளாலேயே இதனை மீட்டெடுக்க இயலும் என்றும், விமானத்தை மீண்டும் கட்டுவதற்கான வழிகளை தங்களால் பரிந்துரைக்க இயலும் என்றும், தேவைப்படும் இடங்களில் செம்புரைக் கற்தொகுதிகளை அப்படியே வைத்துக் கட்ட இயலும் கூறினார். எனினும் அறநிலையத்துறை தொல்லியல் துறையினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.[2]

  1. Pulicat Onefivenine
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 A laterite structure that’s languishing Anusha Parthasarathy. The Hindu July 16, 2013
  3. காலனியாக்கத்தின் சாட்சி... சென்னைக்கு முந்தைய தொன்மம்... பழவேற்காடு சுற்றுலாத்தலம் மட்டுமல்ல! வெ.நீலகண்டன் விகடன் 04 Jun 2018
  4. 4.0 4.1 Heritage destination – Pulicat Karthik A. Bhatt. Madras Musings. Vol. XXI No. December 16, 2011
  5. Nambiar, O.K. (2006). "the Cholas". "AN ILLUSTRATED MARITIME HISTORY OF INDIAN OCEAN" HIGHLIGHTING THE MARITIME HISTORY OF THE EASTERN SEA BOARD இம் மூலத்தில் இருந்து June 19, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090619060909/http://www.pfr2006.nic.in/MaritimeHistory3.htm. 
  6. Francis, Peter (2002). Asia's Maritime Bead Trade: 300 B.C. to the Present p. 33. https://books.google.com/books?id=zzZBdGQN_TIC&pg=PA33&lpg=PA33&dq=Podouke. 
  7. History of Pulicat Wikipedia
  8. Rediscovering a forgotten heritage Hema Vijay. The Hindu December 29, 2010
  9. 9.0 9.1 பழவேற்காட்டில் சின்னக்கண்ணன் பரணிடப்பட்டது 2018-05-25 at the வந்தவழி இயந்திரம் தினகரன் மே 25, 2018
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 13th century temple wiped clean of history The Indian Express 18th June 2013
  11. பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோவில் புதுப்பிக்கும் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை தினமலர் நவம்பர் 06, 2014
  12. HC halts renovation of two ancient temples Business Standard November 5, 2014