ஆட்டுச் சண்டை
ஆட்டுச் சண்டை, கிடா முட்டு, தகர்ச்சணை்டை அல்லது கிடாகட்டு (Ram fighting) என்பது செம்மறியாடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும்.[1] இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முன்பு தமிழ்நாட்டில், திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் கிடாகட்டு சிறப்பாக நடைபெற்றுவந்தது.[2] இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆடுகளின் வெற்றியை மையமாக கொண்ட சூதாட்டமும் சில இடங்களில் நடக்கிறது.
ஆடுகள்
[தொகு]வெள்ளாட்டு வகையறா ஆடுகள் இந்த சண்டை இனத்தில் சேராது. தமிழ்நாட்டில் செம்மறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நாட்டு செம்மறி ஆடுகளில் கமுதி, கம்பம், எட்டையபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைக்கட்டி கருப்புக் கிடா, இராமநாதபுரம் கண் கருப்புக் கிடா போன்ற வகைகளில் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கு தடை உள்ளதால் இந்த இன ஆடுகள் அருகிவருகின்றன.
ஆட்டை தயார் செய்தல்
[தொகு]சண்டைக்காக தயார்படுத்தப் படுத்தும் விதமாக இந்த செம்மறி ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கும்போது ஆட்டுக் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள். பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் அதன் கொம்புகளை இவ்வாறு மூன்று முதல் ஐந்து முறை பிடுங்கிவிடுவர்.[3] இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கும். இந்த ஆட்டை ஜல்லிக்கட்டு மாட்டை தயார் செய்வதுபோல உயர் தரமுள்ள உணவாக துவரம் பொட்டு, உளுந்து குருணை, இரும்புச் சோளம், நிலக்கடலை, கொண்டக் கடலை, பச்சரிசி, பாசிப்பயறு, கொள்ளு, கம்பு, பேரீச்சம்பழம், மக்காச்சோளம், கோதுமைத் தவிடு, அகத்திக் கீரை, கடலைப் புண்ணாக்கு, போன்ற பிரத்தியேக உணவுகளை கொடுத்து நல்ல வலிமை உள்ளதாக வளர்ப்பர். சிலர் நாட்டுக்கோழி முட்டை, பசும்பால் போன்றவற்றையும் அளித்து வளர்ப்பர். இவற்றிற்கு நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி போன்றவை அளித்து அவற்றின் உடல் உறுதியாக ஆக்கப்படுகின்றன.[4]
போட்டி விதிமுறைகள்
[தொகு]போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர். அதிகபட்சம் 50 முட்டல்கள் நடக்கும்.[3] மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாங்கி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். 50 முட்டலையும் தாண்டி இரண்டும் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று தொலைவாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள். அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிடா தோற்றதாக அறிவிக்கப்படும்.[5]
பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டை
[தொகு]பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டையானது தகர்ச்சணை்டை என அழைக்கப்பட்டது. தகர் என்பது செம்மறியாடு. செம்மறி ஆட்டுக் கடாக்கள் இரண்டினை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விளையாடாக இது இருந்தது.
விலங்குகளில் ஆணைக் குறிக்க வழங்கப்படும் மரபுச் சொற்களில் ஒன்று தகர் என்னும் சொல்.[6] இவற்றில் ஆண்-ஆட்டைக் குறிக்கும் செற்களில் ஒன்று தகர்.[7]
போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும்.[8]
தகரின் மலையிலுள்ள கொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும்.[9] அவை முறுக்கிக்கொண்டிருக்கும்.[10] மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் வருடை.[11][12] வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும்.[13] துருவை என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு.[14] ஏழகத்தகர் என்னும் அதன் இனம் நீர்ப்பெயற்று என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் எகினம் [15] போலச் சுழன்று விளையாடியது.[16] இந்த இனம் காவிரிப்பூம்பட்டினம் கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாகத் தகர் விளையாடியது.[17]
போரிடப் பயன்படுத்தப்படும் தகரை மேழகத்தகர் என்பர்.[18] காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் [19] நடந்தன.[20]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm
- ↑ சேவல்கட்டை அனுமதிக்க ஏன் அரசு தயங்குகிறது?, கட்டுரை, செ. இளவேனில், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 14
- ↑ 3.0 3.1 "இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வரும் 'ஆடு சண்டை' சூதாட்ட மோகம்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஒய். ஆண்டனி செல்வராஜ் (4 அக்டோபர் 2019). "ஜல்லிக்கட்டைப்போல் கிடா முட்டு சண்டைக்கும் தடை நீக்கப்படுமா? நாட்டு செம்மறி ஆட்டு இனம் அழியும் அபாயம்". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2019.
- ↑ யா. பிலால் ராஜா (23 நவம்பர் 2014). "கிடாச் சண்டை". கட்டுரை. சொல்வனம். பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
- ↑ விலங்குகளில் ஆண்பால் பெயர்கள் - ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன், பிற (தொல்காப்பியம் 3-546)
- ↑ ஆண் ஆட்டைக் குறிக்கும் சொற்கள் - மோத்தை, தகர், உதள், அப்பர் (தொல்காப்பியம் 3-592)
- ↑ ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர், தாக்கற்குப் பேரும் தகைத்து திருக்குறள் 486
- ↑ வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர் (பெரும்பாணாற்றுப்படை - அடி 87)
- ↑ தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்(அகநானூறு 101)
- ↑ வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர் (மலைபடுகடாம் - அடி 503)
- ↑ மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் நாட்டு மூணாறு பகுதியில் இன்றும் அவற்றைக் காணலாம்.
- ↑ வரை வாழ் வருடைக், கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் (அகநானூறு 378)
- ↑ தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ, கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல் யாட்டு இனம் நிரை (மலைபடுகடாம் - அடி 414)
- ↑ அன்னம்
- ↑ நீர்ப்பெயற்று துறைமுகத்தில் ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் (பெரும்பாணாற்றுப்படை - அடி 326)
- ↑ கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)
- ↑ நினைவுகூர்க - மேழம் என்னும் மேஷ ராசி
- ↑ ஒப்புநோக்குக - சேவல் சண்டை
- ↑ உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாடபட்டினப்பாலை - அடி 77