உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடிப்பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் 'ஆடிப்பெருக்கு' (ஆடி 18) பண்டிகையைக் கொண்டாடுவர்.

ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்

என்பன போன்ற பழம் பாடல்களால் ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வந்ததென்பது அறியக் கிடக்கின்றது.

தேங்காய் சுடல்[தொகு]

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வாழும் மக்கள் ஆடி முதல் நாளில், தேங்காயைத் துளையிட்டு அதனுள் அரிசி, பருப்பு, வெல்லம், உடைத்த கடலை, அகியன இட்டு நெருப்பில் சுட்டு இறைவனுக்குப் படைக்கின்றனர்.[1] ஆடி முதல் நாள் மகாபாரதப் போரின் துவக்க நாளாகவும் நினைவுறுத்தப் படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]|தேங்காய்_சுடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிப்பிறப்பு&oldid=3338542" இலிருந்து மீள்விக்கப்பட்டது