உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசித் குமார் ஆல்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசித் குமார் அல்தார் (Asit Kumar Haldar) (1890 செப்டம்பர் 10 - 1964 பிப்ரவரி 13) இவர், வங்காள கலைப் பள்ளியின் இந்திய ஓவியரும் மற்றும் சாந்திநிகேதனில் இரவீந்திரநாத் தாகூரின் உதவியாளரும் ஆவார். மேலும், வங்காள மறுமலர்ச்சியின் முக்கிய கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஆல்தார் 1890இல் ஜோராசங்கோவில் பிறந்தார். இவரது தாய்வழி பாட்டி இரவீந்திரநாத் தாகூரின் சகோதரியாவார். [1] இவரது தாத்தா ராகல்தாசு ஆல்தார் மற்றும் இவரது தந்தை சுகுமார் ஆல்தார் இருவரும் ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். [2] இவர் 14 வயதில் தனது படிப்பைத் தொடங்கினார். இவரது கல்வி கொல்கத்தாவின் அரசு கலைப் பள்ளியில் 1904 இல் தொடங்கியது. 1905 ஆம் ஆண்டில் ஆல்தார் இரண்டு பிரபல பெங்காலிக் கலைஞர்களான ஜாது பால் மற்றும் பக்கேசுவர் பால் ஆகியோரிடமிருந்து சிற்பக் கலையைக் கற்றுக் கொண்டார். மேலும் இவர் லியோனார்ட் ஜென்னிங்சிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.

தொழில்

[தொகு]

1909 முதல் 1911 வரை இவர் அஜந்தாவில் சுதை ஓவியங்களை ஆவணப்படுத்தினார். கிரிஸ்டியானா ஹெர்ரிங்காம் உடனான ஒரு பயணத்தில் இவர் இப்பணியை முடித்தார். மேலும் இரண்டு பெங்காலி ஓவியர்களுடன் இணைந்து, குகை ஓவியக் கலையை ஒரு பரந்த இந்திய பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். [3] 1921ஆம் ஆண்டில், இவர் மற்றொரு பயணத்தை மேற்கொண்டார். இந்த முறை பாக் குகைகளுக்குச் சென்றார். மேலும் அங்குள்ள ஓவியங்களைப் பற்றிய இவரது பிரதிபலிப்புகள் சில அடிமன வெளிப்பாட்டிய சித்தரிப்புகளைக் குறிக்கின்றன [4]

இவர், 1911 முதல் 1915 வரை சாந்திநிகேதனில் ஓவிய ஆசிரியராக இருந்தார். [5] 1911 முதல் 1923 வரை கலா பவன் பள்ளியின் முதல்வராகவும் இருந்தார். மேலும், தாகூருக்கு கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகளுக்கு உதவினார். இந்த காலங்களில், இவர் மாணவர்களுக்கு ஓவியத்தில் பலவிதமான பாணிகளை அறிமுகப்படுத்தினார். மேலும் அங்கு அலங்கார மற்றும் சடங்கு காட்சிகளில் புரட்சியை ஏற்படுத்தினார்.

1923ஆம் ஆண்டில், இவர் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி வழியாக ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நாடு திரும்பியதும், ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜாவின் கலை மற்றும் கைவினைப் பள்ளியின் முதல்வரானார். அங்கு இவர் லக்னோவில் உள்ள மகாராஜாவின் கலை மற்றும் கைவினைப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு ஒரு வருடம் இங்கு பணியிலிருந்தார். [6]

பணிகள்

[தொகு]

கலை

[தொகு]

ஆல்தார் 1923இல் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய கலையில் மெய்மையியத்திற்கு ஏராளமான வரம்புகள் இருப்பதை விரைவில் உணர்ந்தார். இவர் பொருளின் அளவிற்கு ஏற்ப உடல் பண்புகளை சமப்படுத்த முயன்றார். ஆல்தாரின் யசோதை மற்றும் கிருட்டிணன் ஓவியங்கள் ஒரு மத ஓவியம் மட்டுமல்லாமல், எல்லையற்ற ஒரு கலைப்படைப்பாகவும் இருந்தது. ஆல்தர் புத்தரின் வாழ்க்கையைப்பற்றிய முப்பத்திரண்டு ஓவியங்களையும், இந்திய வரலாற்றில் முப்பது ஓவியங்களையும் உருவாக்கி, தனது கலையில் இலட்சியவாதத்தைத் தழுவ முயற்சித்தார். [7] இவரது கலைகளில் அரக்கு, டெம்பரா, எண்ணெய், நீர்வண்ணம் மற்றும் சில ஒளிப்படவியல் போன்றவை அடங்கும். [8]

கவிதை

[தொகு]

ஆல்தார் தனது வாழ்நாள் முழுவதும் வளர்ந்து வரும் ஒரு கவிஞராக இருந்தார். இவர் காளிதாசரின் மேகதூதம் மற்றும் ரிதுசம்காரம் ஆகியவற்றை சமசுகிருதத்திலிருந்து வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். ஓமர் கய்யாமின் பன்னிரெண்டு உட்பட காட்சி கலையில் ஏராளமான கவிதைகளையும் இவர் விளக்கினார். புத்தர் மற்றும் இந்திய வரலாறு குறித்த இவரது கலை இந்தக் கவிதைக் குடையின் கீழ் வந்தது. [8] மேலும், இவர் பெங்காலி மொழியில் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அஜந்தா (அஜந்தா குகைகளுக்கு ஒரு பயணக் குறிப்பு), கோ-தெர் கல்போ (கோ பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம்), பாக் குகா மற்றும் ராம்கர் (மத்திய இந்தியாவில் உள்ள பாக் குகை மற்றும் ராம்கர் போன்றவற்றின் மற்றொரு பயணக் குறிப்பு போன்றவை.

நினைவு

[தொகு]

ஆல்தார், அரசு கலைப் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியராவார். 1934இல் இலண்டனின் அரச கலைப்பள்ளியின் சக ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும் ஆவார். அலகாபாத் அருங்காட்சியகம் 1938 இல் இவரது பல படைப்புகளுடன் ஒரு பெரிய "ஆல்தார் அறை" ஒன்றைத் திறந்தது. [7]

குறிப்புகள்

[தொகு]
  1. Civarāman, Maitili.Fragments of a Life: A Family Archive. Zubaan, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89013-11-4
  2. Teacher of the Artist பரணிடப்பட்டது 22 ஏப்பிரல் 2007 at the வந்தவழி இயந்திரம் - Sanat Art Gallery
  3. "Ajanta: An artist's perspective". தி இந்து. 4 August 2002 இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030624063356/http://www.hindu.com/thehindu/mag/2002/08/04/stories/2002080400430200.htm. 
  4. The Buddhist Caves of Bagh - The Burlington Magazine for Connoisseurs, Vol. 43, No. 247. (Oct., 1923)
  5. Asitkumar Haldar (1890-1964) பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் - Visva Bharati Institute
  6. Haldar Profile
  7. 7.0 7.1 {{cite book}}: Empty citation (help)
  8. 8.0 8.1 Chaitanya, Krishna. History of Indian Painting: The Modern Period. Abhinav Publications, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-310-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசித்_குமார்_ஆல்தார்&oldid=3315149" இலிருந்து மீள்விக்கப்பட்டது