ஆக்சிசனேற்றி அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சிசனேற்றி அமிலம் (An oxidizing acid) வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் ஒரு பிரான்ஸ்டெட் அமிலமாகும். அனைத்து பிரான்ஸ்டெட் அமிலங்களும் ஆக்சிசனேற்றிகளாக செயல்பட முடியும்.[1][2] ஏனெனில், அமிலத்தன்மையுள்ள புரோட்டானானது, ஐதரசன் வாயுவாக (நீரியமாக) ஒடுக்கமடையக் கூடும். சில அமிலங்கள் ஐதரசன் அயனியைக் காட்டிலும் வலிமையான ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படக்கூடிய வேறு சில அமைப்புகளைக் கொண்டுள்ளன. பொதுவாக, அவை எதிரயனியின் அமைப்பில் ஆக்சிசனைக் கொண்டிருக்கும். இவை நைட்ரிக் காடி, பெர்குளோரிக் அமிலம், குளோரிக் அமிலம், குரோமிக் அமிலம், மற்றும் அடர் சல்பூரிக் அமிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமிலங்களாகும்.

பொதுப் பண்புகள்[தொகு]

ஆக்சிசனேற்றிகளாகப் பயன்படும் அமிலங்கள், வினைத்திறன் குறைந்த உலோகங்களைக் கூட ஆக்சிசனேற்றம் செய்யுமளவிற்கு வலிமையான ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படுகின்றன. இவற்றில் செயற்படு ஆக்சிசனேற்றக் காரணியானது H+ அயனிகளாக இருப்பதில்லை. உதாரணமாக, தாமிரம் வினைத்திறனற்ற உலோகமாக இல்லாமலும், ஐதரோகுளோரிக் காடியுடன் வினையாற்றும் தன்மையற்றும் உள்ளது. இருப்பினும், நீர்த்த நைட்ரிக் அமிலங்கள் கூட (நைத்திரேட்டு அயனிகள் செயல்மிகு ஆக்சிசனேற்றிகளாக செயல்படுவதன் காரணமாக) தாமிரத்தை Cu2+ அயனிகளாக, ஆக்சிசனேற்றம் செய்யக்கூடும்:

3 Cu + 8 HNO3 → 3 Cu2+ + 2 NO + 4 H2O + 6 NO3

சில நேரங்களில் வலிமையான ஆக்சிசனேற்றத்திற்கான காரணியாக அமிலத்தின் செறிவு கூட அமைந்து விடுகிறது. மீண்டும், தாமிரத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது நீர்த்த சல்பூரிக் அமிலத்துடன் வினையேதும் புரிவதில்லை, ஆனால், அடர் சல்பூரிக் அமிலத்தில், அதிக அமிலச் சூழல் மற்றும் அதிக சல்பேட்டு அயனிகளின் செறிவு ஆகியவை சல்பேட்டு அயனிகளை ஆக்சிசனேற்றக் காரணியாகச் செயல்பட வைக்கிறது:

Cu + 2 H2SO4 → SO2 + 2 H2O + SO42− + Cu2+

மேற்கோள்கள்[தொகு]

  1. https://cameochemicals.noaa.gov/react/2
  2. https://www.britannica.com/science/acid-base-reaction/Alternative-definitions
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசனேற்றி_அமிலம்&oldid=2749730" இலிருந்து மீள்விக்கப்பட்டது