உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஹிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஹிரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய வகுளாபரணத்தில் பிறக்கும் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண-வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் பாஷாங்க இராகம் ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.

இலக்கணம்

[தொகு]
ஆரோகணம்: ஸ ரி1 ஸ க31 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 தா1 ப மா13 ரி 1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

[தொகு]
  • பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு பண் பஞ்சமம் என்று பெயர்.[1]
  • சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய தோடியின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். வகுளாபரணம், தோடி, நடபைரவி ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
  • அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
  • இவ்விராகத்தில் சௌக கால பிரயோகங்கள் அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. பழமையான, முக்கிய இசை நூல்களில் இந்த இராகத்தின் பெயர் காணப்படுகின்றது.
  • இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.

உருப்படிகள் [2]

[தொகு]
வகை உருப்படி தாளம் கலைஞர்
கிருதி ஆதய சிறீ ஆதி தியாகராஜ சுவாமிகள்
கிருதி எடுல காபாடுதுவோ திரிபுடை தியாகராஜ சுவாமிகள்
கமலாம்பா நவாவர்ணம் சிறீ கமலாம்பா திஸ்ர ஏகம் முத்துஸ்வாமி தீட்சிதர்
நவரத்ன மாலிகை மாயம்மனி ஆதி சியாமா சாஸ்திரிகள்
பதம் ராராரா திரிபுடை ஷேத்ரக்ஞர்
கிருதி பரமபுருஷ மிஸ்ரசாபு சுவாதித் திருநாள் ராம வர்மா
கிருதி ஏங்குவதறியானோ மிஸ்ரசாபு அம்புஜம் கிருஷ்ணா
கிருதி தில்லைவலம் சுற்றினார் ரூபகம் கோபாலகிருஷ்ண பாரதியார்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
  2. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஹிரி&oldid=3940467" இலிருந்து மீள்விக்கப்பட்டது