அ. வரதராஜப் பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. வரதராஜப் பெருமாள்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர்
வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர்
பதவியில்
டிசம்பர் 1988 – மார்ச் 1990
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
வாழிடம்இந்தியா
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அண்ணாமலை வரதராஜப் பெருமாள் (Annamalai Varatharaja Perumal) இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக 1988 முதல் 1990 வரை பதவியில் இருந்தவர். இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வரதராஜப் பெருமாளின் தந்தை அண்ணாமலை இந்திய வம்சாவழித் தமிழர். தாயார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பள்ளியில் படிக்கும் போதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாணவர் அமைப்பில் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்ட 42 தமிழ் இளைஞர்களில் வரதராஜப் பெருமாளும் ஒருவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர் அப்பல்கலைக்கழகத்திலேயே பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) அமைப்பில் இணைந்த இவர் 1980களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

1983 செப்டம்பரில் மட்டக்களப்பு சிறை போராளிகளால் தாக்கப்பட்ட போது, வரதராஜப் பெருமாள் சிறையில் இருந்து தப்பி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் இவர் ஈபிஆர்எல்எஃப் அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடலானார். அதன் பேச்சாளராகவும் பணியாற்றினார். விடுதலைப் போராளி அமைப்புகள் 1985 ஆம் ஆண்டில் இலங்கை அரசுடன் நடத்திய திம்புப் பேச்சுவார்த்தைகளில் பெருமாளும் கலந்து கொண்டார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். இவர் டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார்.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், முதலமைச்சர் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியப் படையினருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.[2] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

இந்தியா சென்ற பெருமாள் சிறிது காலம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். தற்போது இவர் ராஜஸ்தானில் இந்திய அரசின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 டி. பி. எஸ். ஜெயராஜ் (1999). "The return of the exile". புரொண்ட்லைன். பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 3, 2013.
  2. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வரதராஜப்_பெருமாள்&oldid=3592298" இலிருந்து மீள்விக்கப்பட்டது