அ. லெ. முகம்மது முக்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகமது லெப்பை முகம்மட் முக்தார் (பிறப்பு: அக்டோபர் 12 1960) இலங்கையில் பத்திரிகை, வானொலிச் செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஓர் ஊடகவியலாளராவார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கிழக்கு மாகாணத்தில் கல்முனை, சாய்ந்தமருதுவில் எம். அகமட் லெப்பை, நூறுல் மசாஹிறா தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது மல்-ஹறுஸ் சம்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர் கல்வியினை கல்முனை சாகிரா தேசியப் பாடசாலையிலும் பெற்றுப் பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலை சிறப்புப் பட்டதாரியானார். PG. Dip in Edu பட்டப் பின் படிப்பினை தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்றார். இவர் மௌபியாவின் கணவராவார். முகமட் சப்ரி, சப்ராஸ் அகமட், ஹஸ்மத் ஸகீலா, ஹஸ்மத் ஸஹானா, சிஹாமா ஆகியோர் இத்தம்பதியினரின் பிள்ளைகள்.

தொழில்[தொகு]

1979-ம் ஆண்டில் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், 1999ல் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்வுபெற்றுத் தற்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

ஊடகத்துறை[தொகு]

1995-ம் ஆண்டில் சூன் மாதம் முதல் லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பிரதேச நிருபராகவும், 2003ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிராந்திய நிருபராகவும் நியமனம் பெற்றார். அபிவிருத்திச் செய்திகள், பிரதேச செய்திகள், மக்கள் பிரச்சினைகள், அரசியல் செய்திகள் போன்ற பல செய்திகள் வெளியிடப்பட்டும், ஒலிபரப்பாகியுமுள்ளன. ஊடகத்துறையில் பகுதிநேரமாகவே இவர் ஈடுபட்டு வருகின்றார்.

ஊடகத்துறையில் செய்தியாளராகக் கடமையாற்ற முன்பு இவரது 12வது வயதிலிருந்து தேசிய பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் ஆக்கங்கள் எழுதி வந்துள்ளார். அவற்றுள் துணுக்குகள், கதை, கட்டுரை, விமர்சனம் ஆகியன இடம்பெற்றிருந்தன.

புலமைப்பரிசில்[தொகு]

டிசம்பர் 26 2004 திகதி ஏற்பட்ட ஆழிப் பேரலைகளினால் இவர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டார். இவரின் வீடு, ஆவணங்கள், பொருட்கள் அனைத்தையும் இழந்தார்.

தனது தொழில் நிமித்தமும், ஊடகச் செயற்பாடுகள் நிமித்தமும் ஜப்பான், சிங்கப்பூர், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுச் சென்றுள்ள இவர் ஊடகத்துறையில் திறமையாகப் பணியாற்றியமையினால் 2006ம் ஆண்டு 'டென்மார்க்' தலைநகரில் நடைபெற்ற 'ஊடகத்துறையில் ஜனநாயக செயற்பாடுகள்' எனும் ஒன்றரை மாத டிப்ளோமா பயிற்சி நெறியிலும் கலந்து கொண்டுள்ளார்.

கௌரவிப்புகள்[தொகு]

கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராகப் பணியாற்றும் இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றின் அங்கத்தவராவார். இவரின் இத்தகைய கடமைகளை மதித்து தென்கிழக்கு ஆய்வு மையம் இவரைப் பாராட்டி கௌரவித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._லெ._முகம்மது_முக்தார்&oldid=3076794" இலிருந்து மீள்விக்கப்பட்டது