உள்ளடக்கத்துக்குச் செல்

அ. ஜாகிர் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அ. ஜாகிர் உசைன்
பிறப்பு25 மே 1971
தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
தொழில்அரபு மொழி பேராசியர், அரபு மொழித் துறைத் தலைவர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், அபுனைவு எழுத்தாளர், பாடநூல் ஆசிரியர்
மொழிதமிழ், அரபு
தேசியம்இந்தியர்
காலம்2008–இன்று
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2016)
துணைவர்பாத்திமா
பிள்ளைகள்ஜாபிர் ஹுசைன், பஸீஹா மர்யம்

அ. ஜாகிர் ஹுசைன் (Jahir Husain) என்பவர் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மற்றும் பேராசிரியர். திருக்குறளை முதன்முதலில் தமிழிலிருந்து நேரடியாக அரபி மொழியில் மொழியாக்கம் செய்தவர். ஆத்திசூடி, பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட தமிழின் முதன்மையான நூல்களையும் தமிழறிஞர்களையும் அரபுலகிற்கு அறிமுகம் செய்தவர். மொழிபெயர்ப்பிற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

பிறப்பு & கல்வி

[தொகு]

ஜாகிர் ஹுசைன் மே 25, 1971 கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில்சுலைஹா பீவி, அகமது இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை தமிழ்நாடு அரசின் ஆரம்ப சுகாதாரத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றியவர்.

தக்கலை அரசு முஸ்லிம் துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பை முடித்த ஜாகிர் ஹுசைன், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் பயின்றார். அதன்பின் இஸ்லாமிய இறையியல் கல்வியில் ஈடுபட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இருந்த வேலூர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் 1994-ம் ஆண்டு ’பாகவி’ மார்க்க அறிஞர் பட்டமும், 'அப்சலுல் உலமா’ பட்டமும் பெற்றார்.

இறையியல் கல்வியைப் படிக்கும்போதே பன்னிரண்டாம் வகுப்பை தனியாகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் மூலம் வரலாற்றுத் துறையில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் 1998-ம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறையில் முதுகலை பட்டமும், 2005-ம் ஆண்டு அரபு இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஆசிரியர் பணி

[தொகு]

பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா அரபுக் கல்லூரி, சென்னை புதுக்கல்லூரி, திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அரபுத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி என இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஜாகிர் ஹுசைன், அவர் பயின்ற சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே அரபுத்துறையில் உதவிப் பேராசிரியராக பிப்ரவரி 19, 2008-ல் நியமிக்கப்பட்டார். தற்போது துறைத் தலைவராக செயல்பட்டுவருகிறார்.

ஜாகிர் ஹுசைன் சென்னைப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் அரபுமொழி பாடத்திட்டக் குழுத் தலைவராக பொறுப்புவகிக்கிறார்.

கோழிக்கோடு பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை கிரசண்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டக்குழு, தேர்வுக்குழு, முனைவர் ஆய்வு கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.

கருத்தரங்குகள், பயிலரங்குகள்

[தொகு]

ஜாகிர் ஹுசைன் இருபத்தைந்துக்கும் அதிகமான சர்வதேசக் கருத்தரங்குகளிலும், முப்பதுக்கும் அதிகமான தேசியக் கருதரங்குகளிலும் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.

ஏழு சர்வதேசக் கருத்தரங்குகளையும், பதினைந்துக்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் ஒருங்கிணைத்துள்ளார்.

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

அரபு இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ஜாகிர் ஹுசைன், அப்துல் ரகுமான், பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடத் துவங்கினார்.

மாணவப் பருவத்தில் மாணவர்களால் நடத்தப்பட்டு வந்த கையேட்டு இதழ்களில் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு முதல் இவரது கட்டுரைகள், அரபு மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள் மற்றும் சிறுகதைகள் ஆனந்த விகடன், காலச்சுவடு, உயிர் எழுத்து, உயிர்மை[1], கணையாழி, நீலம்[2], திணை, மணல் வீடு[3], சமரசம் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகின.

ஆனந்த விகடன்[4], குங்குமம்[5], கல்கி, இந்து தமிழ் காமதேனு[6], தினமணி[7], தினத்தந்தி, தினகரன்[8], தினமலர்[9], இந்து தமிழ் திசை, தி ஹிந்து[10], இந்தியன் எக்ஸ்பிரஸ்[11], டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இதழ்களிலும் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் இணைய சேனல்களிலும் இவரது நூல் அறிமுகங்கள் மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகளில் அரபு மொழியில் திருக்குறள் அறிமுகம்

[தொகு]

சவூதி அரேபியா, துபாய், ஷார்ஜா, மஸ்கட், குவைத், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அரபு மொழிபெயர்ப்பின் மூலம் திருக்குறளைப் பற்றி அறிமுக உரைகள் நிகழ்த்தியுள்ளார்

மார்ச் 28, 2015 முதல் ஏப்ரல் 5, 2015 வரை சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச அரபுக் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபுக் கவிஞர்களுக்கு அறிமுகம் செய்தார். இதன் மூலம் சவூதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய இலக்கியமாக திருக்குறள் குறிப்பிடப்படுகிறது. [12]

மொழியாக்க நூல்கள்

[தொகு]

தமிழிலிருந்து அரபு மொழியில்

[தொகு]
ஆண்டு நூல்கள் பதிப்பாளர்
2013 திருக்குறள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்[13]
2015 ஆத்திசூடி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2015)

கேலக்ஸி பதிப்பகம் (2023)[14]

2021 ஈரோடு தமிழன்பன் கவிதைகள் லிபி பதிப்பகம்
2021 ஆத்திசூடி புதிய பதிப்பு கேலக்ஸி பதிப்பகம்[15]
2022 பாரதியார் கவிதைகள் கேலக்ஸி பதிப்பகம்[16]
2024 பாரதிதாசன் கவிதைகள் தமிழ்நாடு அரசின் நிதிநல்கையுடன் கஸல் பதிப்பகம்

அரபியிலிருந்து தமிழில்

[தொகு]
ஆண்டு நூல் பெயர் நூல் குறிப்பு பதிப்பாளர்
2007 கவிதையை நம்பாதே மஹ்மூத் தரவீஷ் கவிதைகள் கீற்று வெளியீட்டகம்
2010 கவலைப்படாதே ஐ.எப்.டி. பதிப்பகம்[17]
2020 நிசார் கப்பானி கவிதைகள் சூஃபி பதிப்பகம்[18]
2021 கிறுக்கி அரபு சிறுகதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்[19]
2022 உப்பு கவிதைத் தொகுப்பு டிஸ்கவரி பதிப்பகம்[20]
2023 நாடோடிக் கட்டில் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்[21][22]
2023 காதலர்களாகப் பிரிவோம் கவிதைத் தொகுப்பு உயிர்மை பதிப்பகம்[23]
2024 புயல் முட்டை அரபு நுண்கதைத் தொகுப்பு எதிர் வெளியீடு[24]

பாடநூல்கள்

[தொகு]
பாட நூலகள் பதவி பதிப்பாளர்
9 மற்றும் 10ஆம் வகுப்பு அரபு ஆசிரியர் தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம்[25]
1 மற்றும் 12ஆம் வகுப்பு அரபு மதிப்புரையாளர் தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம்[26]
2, 4, 6, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரபு வல்லுநர் குழு உறுப்பினர் கேரள அரசு[27]

சமய நூல்கள்

[தொகு]
படிமம்:Tamil nadu awards.jpg
தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 2016

ஜாகிர் ஹுசைன் நபிகளாரின் இஸ்லாமிய பொன்மொழிகளையும் திருக்குர்ஆன் விரிவுரையையும் தமிழில் வெளியிட்டு வரும் சென்னை ரஹ்மத் அறக்கட்டளையில் 11 ஆண்டுகள் பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அங்கு மொழிபெயர்ப்பாளர் குழுவுடன் இணைந்து 'ஸஹீஹ் முஸ்லிம் – நபிகளாரின் பொன்மொழிகள்’ முதல் மூன்று பாகங்களையும் 'தஃப்சீர் இப்னு கஸீர் - திருக்குர்ஆன் விளக்கவுரை’ முதல் மூன்று பாகங்களையும் மொழியாக்கம் செய்தார். நபிகளாரின் போதனைகளை அடிப்படையாகக்கொண்ட ’அன்பின் மொழி’ என்ற இவரது நூல் அறம் பதிப்பகம் சார்பில் 2012-ம் ஆண்டு வெளியானது.

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது வளங்கியவர்கள் குறிப்பு
2007 சிறந்த மொழிபெயர்ப்பாளர் இஸ்லாமிய இலக்கியக் கழகம்
2015 சமூக சேவை விருது தமிழ்நாடு சமூக நல அமைப்பு தம்மா, சவூதி அரேபியாவின் சவூதி வாழ் இந்தியருக்கான விருது
2016 அரபுமொழி சேவை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா இமாம்கள் பேரவை
2016 சிறந்த மொழிபெயர்ப்பாளர் [28] தமிழ்நாடு அரசு
2017 சீறாப்புராணம் பரிசில் விருது சென்னை கம்பன் கழகம்
2019 குறள் செல்வன் மஸ்கட் தமிழ்ச் சங்கம்
2019 குறட் தூதர் குவைத் பொங்குத் தமிழ் மன்றம்
2019 குறளொளிச் சுடர் குவைத் பெரியார் நூலகம்
2020 திருக்குறள் அறம் குரோம்பேட்டை திருக்குறள் பேரவை
2023 வி.ஜி.பி. இலக்கிய விருது
2023 சிறந்த ஆய்வாளர் விருது சென்னைப் பல்கலைக்கழகம்

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. மொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்
  2. நுண்கதைகள் - நீலம் இணைய இதழ்
  3. மணல் வீடு - இதழ் 51 (Archived)
  4. “மொழியும் அறமும் குரூரங்களிலிருந்து மனிதனை விலக்கும்!” - ஆனந்த விகடன் 18, ஜூலை 2024
  5. புலால் உண்ணாமைக்கு எதிராக திருக்குறள் இருப்பது இஸ்லாமிய உலகில் எப்படி பார்க்கப்படும்..?
  6. அரபு நாடுகளில் ஒலிக்கும் தமிழ்! - இந்து தமிழ்
  7. அரேபிய மொழியில் திருக்குறள் - தினமணி
  8. துபாயில் பாரதியார் கவிதைகள் அரபு மொழியில் வெளியீடு
  9. அரபு மொழியில் பாரதியார் கவிதை: துபாய் இலக்கியவாதிகள் பாராட்டு
  10. அரபு உலகிற்கு அறிமுகமாகும் பாரதிதாசனின் சிந்தனைகள்
  11. திருக்குறள் இப்போது அரபு மொழியில் - இந்தியன் எக்ஸ்பிரஸ்
  12. இஸ்லாத்தின் பார்வையில் புலால் மறுத்தல் (தினமணி நாளிதழ் 13, ஆகஸ்ட் 2024)
  13. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (அதிகாரப்பூர்வ இணையதளம்) - திருக்குறள்
  14. ஆத்திசூடி - அரபு மொழிபெயர்ப்பு - கேலக்ஸி பதிப்பகம்
  15. ஆத்திசூடி (அரபியில்) - கேலக்ஸி பதிப்பகம் இணையதளம்
  16. பாரதி கவிதைகள் (அரபியில்) - கேலக்ஸி பதிப்பகம் இணையதளம்
  17. 'கவலைப்படாதே' புத்தக அறிமுகம் - வலையுகம்
  18. புத்தக அறிமுகம்: நிசார் கப்பானி கவிதைகள் - தினமலர்
  19. கிறுக்கி (காலச்சுவடு இணையதளம்)
  20. டுபாயில் உப்பு கவிதைத் தொகுப்பு - வணக்கம் லண்டன்
  21. நாடோடிக்கட்டில் (காலச்சுவடு இணையதளம்)
  22. மஹ்மூத் தர்வீஷின் “நாடோடிக் கட்டில்” – நூல் அறிமுகம் - நியூஸ்7தமிழ் இணையதளம்
  23. காதலர்களாகப் பிரிவோம் - உயிர்மை பதிப்பகம்
  24. புயல் முட்டை – வஃபா அப்துல் ரஸ்ஸாக்- அரபியிலிருந்து தமிழில் அ.ஜாகிர் ஹுசைன்
  25. தமிழக அரசு - அரபி மொழி பாட புத்தகம் - 10ம் வகுப்பு
  26. தமிழக அரசு - அரபி மொழி பாட புத்தகங்கள் - 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு
  27. கேரள அரசு இணையதளம் - அரபி மொழி பாட புத்தகங்கள் - 2ம் வகுப்பு, 4ம் வகுப்பு,6ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு
  28. சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது பெற்றோர் - தமிழ் வளர்ச்சித் துறை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ஜாகிர்_உசைன்&oldid=4212195" இலிருந்து மீள்விக்கப்பட்டது