உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்வினி குமார் தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்வினி குமார் தத்தா
அஸ்வினி குமார் தத்தா
பிறப்பு(1856-01-25)25 சனவரி 1856
படஜோர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு7 நவம்பர் 1923(1923-11-07) (அகவை 67)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிகல்வியாளர், கொடையாளர்
பெற்றோர்பிரஜமோகன் தத்தா

அஸ்வினி குமார் தத்தா (Ashwini Kumar Dutta) (25 ஜனவரி 1856 – 7 நவம்பர் 1923) ஒரு இந்தியக் கல்வியாளர், கொடையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அஸ்வினி குமார் தத்தா 1856-ஆம் ஆண்டு ஜனவரி 25-அன்று, வங்காளத்தின் (தற்போது வங்காளதேசம்) பரிசால் மாவட்டத்தில் உள்ள படஜோர் கிராமத்தில், வசதியான மற்றும் உயர்குடி வங்காள இந்து காயஸ்த தத்தா குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் பாலி பகுதியைச் சேர்ந்த தத்தா குடும்பத்தின் ஒரு கிளையினராவர். இவரது தந்தை பிரஜமோகன் தத்தா கிராம நிர்வாக அலுவலராகப் அணியில் சேர்ந்து துணை ஆட்சியராகப் பணியாற்றி, பின்னர் மாவட்ட நீதிபதியானார். இவர் 1870-இல் ரங்பூரில் நுழைவுத் தேர்வில்தேர்ச்சி பெற்றார். இந்து கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். சட்டம் பயில பிரயாக்ராஜ் சென்றார். அதன் பிறகு வங்காளம் திரும்பி, கிருஷ்ணாநகர் அரசு கல்லூரியில் முதுகலை மற்றும் சட்டம் பட்டங்களைப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

தத்தா 1878-இல் கிருஷ்ணாநகர் கல்லூரியுடன் இணைந்த பள்ளியில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, செராம்பூரில் உள்ள சத்ரா நந்தலால் நிறுவனத்த சேர்ந்தார். அங்கு ஏழு மாதங்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1880-இல் பரிசாலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் ஓர் வெற்றிகரமான, நல்ல வருமானம் தரும் வழக்கறிஞர் தொழிலை உருவாக்கினார்; தனது வருமானத்தை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிட்டார். பரிசால் மாவட்டத்தின் அப்போதைய நீதிபதியான ரமேஷ் சந்திர தத்தாவின் ஆலோசனையின் பேரில், 1884-ஆம் ஆண்டு ஜூன் 27-அன்று தனது தந்தையின் நினைவாக பிரஜமோகன் பள்ளியை நிறுவினார். 1886-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது அமர்வுக்குப் பிரதிநிதியாக அஸ்வினி குமார் தத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1887-இல் பரிசாலில் மாவட்ட வாரியத்தை அமைப்பதற்கான முயற்சியை இவர் மேற்கொண்டார். அதே ஆண்டில் பகர்கஞ்ச் ஹிதைஷினி சபா என்ற ஒரு பெண்கள் பள்ளியையும் நிறுவினார். அதே ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது அமர்வில் கலந்துகொண்ட இவர், சட்டமன்றக் குழுவில் சீர்திருத்தங்களின் அவசியம் குறித்துப் பேசினார். 1888-இல் பரிசால் நகராட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1889-இல் பிரஜமோகன் கல்லூரியை இரண்டாம் நிலை கல்லூரியாக நிறுவினார். இக்கல்லூரியில் 25 ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக (கௌரவ விரிவுரையாளராக) பணியாற்றினார். 1897-இல், இவர் பரிசால் நகராட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1898-இல், காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரம் பெற்ற குழுவில் இவர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வங்கப் பிரிவினை இவரை சுதேசி இயக்கத்தின் பக்கம் ஈர்த்தது. உள்நாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்கவும் இவர் 'சுதேசி பந்தவ் சமிதி'யை நிறுவினார். சூரத் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் பிரிந்தபோது, ​​அவ்விரு குழுக்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த இவர் முயன்றார். 1908-இல், புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு வங்காளம், அசாம் மாகாண அரசு 'சுதேசி பந்தவ் சமிதி'யைத் தடை செய்தது; அத்துடன் இவரை ஐக்கிய மாகாணங்களுக்கு நாடு கடத்தி, இலக்னோ சிறையில் அடைத்தது. 1910-இல் விடுதலையான பிறகு, இவர் பிரஜோமோகன் பள்ளி, பிரஜோமோகன் கல்லூரியைத் தொடர்ந்து நடத்துவதில் கவனம் செலுத்தினார். அரசு உதவியை ஏற்றுக்கொள்வதைத் தவிர இவருக்கு வேறு வழியில்லை. 1912-இல், பள்ளி கல்லூரியின் நிர்வாகத்தை இரண்டு வெவ்வேறு அறங்காவலர் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. 1918-இல் இந்திய தேசிய காங்கிரஸின் பம்பாய் மாநாட்டில் இவர் கலந்துகொண்டார். 1919-இல் பரிசால் பகுதியில் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு, இவர் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். 1921-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், அகிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார். அந்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அதே ஆண்டில் மோகன்தாஸ் காந்தி பரிசால் நகருக்கு வருகை தந்தார். 1922-இல், அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்களை எதிர்த்துப் போராடிய அசாம் வங்காள ரயில்வே, ஸ்டீமர் நிறுவனத்தின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இவரும் இணைந்துகொண்டார்.

மேற்கோள்க்ள்

[தொகு]
  1. 1 2 Khan, BR (2012). "Datta, Aswini Kumar". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
  2. Hussain, Aklam (1997). History of Bangladesh, 1704–1971, Vol. 1. Asiatic Society of Bangladesh. p. 559. ISBN 978-984-512-337-2.
  3. Sengupta, Subodh Chandra, ed. (1988). Samsad Bangali Charitabhidhan. Kolkata: Sahitya Samsad. pp. 38–39. ISBN 81-86806-98-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினி_குமார்_தத்தா&oldid=4621658" இலிருந்து மீள்விக்கப்பட்டது