அஸ்க்லெபியாடோய்டே
அஸ்க்லெபியாடோய்டே | |
---|---|
![]() | |
Matelea denticulata[1] | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Asclepiadoideae |
Genera | |
See text |
அஸ்க்லெபியாடோய்டே (Asclepiadoideae) என்பது அபோசினேசியே குடும்பத்தில் உள்ள தாவரங்களின் துணைக் குடும்பமாகும். முன்பு, இது அஸ்க்லெபியாடேசி என்ற பெயரில் ஒரு தனிக் குடும்பமாக கருதப்பட்டது. [2]
இதில் பல்லாண்டுவாழ்கின்ற மூலிகைகள், புதர்கள், பெருங்கொடிகள், அரிதாக மரங்கள் போன்றவை உள்ளன. ஏறக்குறைய எல்லாவற்றிலும் வெண்மையான பாலுண்டு. இந்த துணைக் குடும்பத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இலைகளற்ற சதைப்பற்றான தண்டுகள் கொண்ட கள்ளிகள் உள்ளன.
இதில் 348 சாதிகளும், சுமார் 2,900 இனங்கள் உள்ளன. இவை முக்கியமாக வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலங்களில் [3] குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் அமைந்துள்ளன.
விளக்கம்[தொகு]
இலைகள் எதிரொழுங்கு, தனி, இலையடிச் செதிலில்லாதவை. மலர் ஒழுங்கானது. இதழிணைந்தது. சாதாரணமாகக் குடை மஞ்சரி அல்லது வளர்நுனி மஞ்சரியாக இருக்கும். உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக இருக்கும். புல்லி வட்டம் 5 வரையில் பிரிவுபட்டது. அல்லி வட்டம் 5 பிரிவுள்ளது ; சக்கர வடிவம். சில வகையில் அகவிதழ்க்கேசம் உண்டு. கேசரம் 5; ஒரு குழாயாகச் சேர்ந்திருக்கும். இந்தக் குழாயிலிருந்து வெளிப்புறமாக உபமகுடம் வளர்ந்திருக்கும். மகரந்தப் பைகள் தனித்திருக்கலாம், அல்லது சூல் முடியுடன் சேர்ந்திருக்கலாம். பையின் ஒவ்வொரு அறையிலும் உள்ள மகரந்தமெல்லாம் ஒன்று சேர்ந்து தகடு போன்ற மகரந்தத் திரளாக (Pollinium) இருக்கும். சில வகைகளில் ஒவ்வோரறையிலும் ஒரே திரள் இருக்கும். சிலவற்றில் இரண்டு திரள்கள் இருக்கும். இரண்டு மகரந்தப் பைகளின் அடுத்தடுத்துள்ள அறைகளிலுள்ள மகரந்தத் திரள்கள் இந்தப் பைகளுக்கு நடுவே மேல்முனையில் இருக்கும் ஒரு சுரப்பி போன்ற இணைகருவியில் (Translator) ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இணைகருவியைத் தூக்கினால் மகரந்தத்திரள்கள் அதனோடு வந்துவிடும். மகரந்தத் திரள்களுடன் கூடிய இந்த இணைகருவி பூவிலே தேன் உண்ண வரும் பூச்சியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். எருக்கம் பூவுக்கு வரும் கருவண்டு என்னும் தச்சன் தேனீயின் மயிர்களில் இது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மகரந்தத் திரளமைப்பு ஆர்க்கிடுகளில் உள்ள அமைப்புப் போல இருக்கிறது. சூலகம் மற்றவுறுப்புக்களுக்கு மேலேயுள்ளது. இரண்டு சூலிலையுள்ளது. அவ்விலைகள் தனித் தனிச் சூலறைகளாகும். இரண்டு சூல்தண்டுகளும் நுனியில் ஒன்றாகச் சேர்ந்து ஐந்துகோண வடிவமான ஒரு தட்டுப்போல இருக்கின்றன. அந்தத் தட்டின் மேற்பரப்பே சூல்முடியாகும். ஒவ்வொரு பூவிலிருந்தும் இரண்டு ஒருபுற வெடிகனிகள் உண்டாகும். விதைகள் மிகப்பல. தட்டையானவை. விதையின் ஒரு முனையில் நீண்ட பட்டுப்போன்ற மயிர்க்குச்சம் குடுமிபோல இருக்கும். கனி வெடிக்கும் போது இந்தக் குச்சத்தின் உதவியால் விதைகள் பூச்சி போலப் பறந்துபோகும். வெயிற்காலத்தில் எருக்கு விதை பறப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.
இந்தக் குடும்பத்திலே பூக்கள், பூச்சி மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மிகவும் விசித்திரமாக அமைந்திருக்கின்றன. பூக்களின் வாசனை, பெரும்பாலும் "கேரியன்" என்று அழைக்கப்படுகிறது, ஈக்களை ஈர்க்கிறது. ஈக்கள் பூக்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இதன் மலர்களின் தனித்துவமான கருத்தரித்தல் முறையால் பல புதிய கலப்பினங்கள் உருவாகியுள்ளன. இதிலுள்ள செடிகளும் பல விசித்திர அமைப்புடையவை. சில வடம்போன்ற கொடிகள். சில தொற்றுச் செடிகள். சிலவற்றில் இலை மிகவும் மாறுபட்டு ஜாடிபோல இருக்கும் ; அது நீரைச் சேகரித்து வைத்துக்கொள்ள உதவும். சில சப்பாத்திக் கள்ளிபோன்ற இலைத்தண்டுள்ளவை. சிலவற்றில் இலையே இல்லை. தண்டு சாட்டை போன்ற சிலவற்றில் சடைச்சடையாக வளரும். இன்னும் அடித்தண்டு கிழங்குபோலப் பருத்து நீரைச் சேர்த்து வைத்திருக்கும்.[4]
இந்தக் குடும்பச் செடிகள் பொருளாதார வகையில் மிகவும் சிறந்தில்லாவிடினும் பல விதத்தில் மிகுந்த பயனுடையவை. இவற்றில் மருந்துக்குதவும் நல்ல மூலிகைகள் பல உண்டு.
குறிப்புகள்[தொகு]
- ↑ 1897 illustration from Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Spellenberg, Richard (2001). National Audubon Society Field Guide to North American Wildflowers: Western Region (rev ). Knopf. பக். 347. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-375-40233-3. https://archive.org/details/nationalaudubons00spel/page/347/.
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி அஸ்க்லிபியடேசீ