அஷ்டாங்க இருதயம்
அஷ்டாங்க இருதயம் ( சமசுகிருதம் : अष्टांग हृदय) என்பது ஒரு ஆயுர்வேத மருத்துவ நூலாகும். இது சமசுகிருதத்தில் எழுதப்பட்டது. இது பண்டைய இந்தியாவின் மூன்று முக்கிய ஆயுர்வேத நூல்களில் ஒன்றாகும். இந்தூலின் ஆசிரியர் வாக்படர் ஆவார் இவர் வாழ்ந்த காலம் 550-600 என்று. கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]இந்தூல் விருத்த வாக்படர் எழுதிய அஷ்டாங்க சங்கிரஹம் என்ற ஒரு பெரிய நூலின் சுருக்கம் ஆகும். இதை எழுதித் தொகுத்தவர் லகு வாக்படர். இது முழுக்க முழுக்க நோய்க் குறியீடுகளையும், தத்துவங்களையும், நோய்க்கான சிகிச்சையையும் கூறுகிறது.
இந்தப் புத்தகம் கலிப் ஹாரூன் அல்-ரஷீத் காலத்தில் கி.பி. 773-808 அரபு மொழியில் மொழிபெயர்கப்பட்டது, [1] மேலும் இது திபெத்திய மொழியிலும், 1941 இல் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [2] இது 1880 இதன் முதல் அச்சுப் பதிப்பு வெளிவந்தது, 1935 ஆம் ஆண்டு பண்டிதர் துரைசாமி அய்யங்கார் வடமொழி சுலோகங்கள் இல்லாமல் தமிழ் மொழியில் அஷ்டாங்க ஹ்ருதயத்தை வெளியிட்டார். பின்னர் வடமொழியுடன் தமிழ் உரை சேர்த்துப் பெரிதாக வெளிவந்தது. அஷ்டாங்க ஹ்ருதயத்துக்கு 37 உரைகள் காணப்படுகின்றன. அதில் சர்வாங்க சுந்தரா என அருண தத்தர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 1888-ல் பதிப்பிக்கப்பட்டது. வாக்படரின் மாணவராகக் கருதப்படும் ஜெஜடாவின் விளக்கவுரையும் கிடைக்கிறது. இந்தப் நூலில் காணப்படும் மூலிகைகள் அஷ்டாங்க நிகண்டு என்ற பெயரில் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூல உரை வடமொழி, தெலுங்கு, தமிழில் உள்ளது.
பெயரியல்
[தொகு]ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களும், எட்டு அங்கங்களுக்கு உரிய செய்திகளும் அமிர்தம் போன்று இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களின் ஹ்ருதயம் போல இது விளங்குகிறது என்பதால் இது அஷ்டாங்க ஹ்ருதயம் என அழைக்கப்படுகிறது.
நூல் அமைப்பு
[தொகு]இந்தப் நூலில் ஆறு பிரிவுகளும், 120 அத்தியாயங்களும் உள்ளன. அடிப்படைத் தத்துவங்களை விளக்கும் சூத்திர ஸ்தானம், உடற்கூறுகளை விளக்கும் சரீர ஸ்தானம், மருந்துகளைப் பற்றிக் குறிப்பிடும் கல்ப, சித்தி ஸ்தானம், கண், காது, மூக்கு நோய்களையும், பிற பகுதிகளையும் விளக்கும் உத்தர ஸ்தானம் போன்றவை இதில் உள்ளன.
ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் படிப்பதற்கும், குணம் குறித்த தகவல்களை அறிவதற்கும் இந்த நூல் உதவிகரமாக இருக்கிறது. இதில் அறுசுவைகள் பற்றி சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாக்படர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இறைச்சி வகைகளின் மருத்துவக் குணங்களையும், மது வகைகளின் மருத்துவக் குணங்களையும் சிகிச்சைக்காகக் குறிப்பிட்டுள்ளார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Historical Perspective of Ayurveda bei dabur.com பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் (engl.)
- ↑ Luise Hilgenberg, Willibald Kirfel: Vāgbhaṭa’s Aṣṭāṅgahṛdayasaṃhitā – ein altindisches Lehrbuch der Heilkunde. Leiden 1941. – Aus dem Sanskrit ins Deutsche übertragen mit Einleitung, Anmerkungen und Indices
- ↑ வாசிப்பை வசப்படுத்துவோம்: ஆயுர்வேத மருத்துவத்தின் இதயம்